Wednesday, October 07, 2009

சரித்திரத்தில் எழுதுவாங்கல்ல...


இவனுக்கு ஆங்கிலத்தில் பிடித்த வார்த்தை எதுன்னு கேட்டா BUSYன்னு சொல்லுவான். கலர்ல பிடித்த கலர் எதுன்னு கேட்டா இப்போதைக்கு சிகப்புன்னு சொல்லுவான். ஏன்னா அதைத்தான் gtalk வச்சிருக்கான் இந்தப் பாவிப்பய. இவனுக்கு பதிலா நான் பதிவு எழுத வந்திருக்கேன். நான் யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சாலும் கடைசியில சொல்லியிருப்பான். இப்படி ஆணி ஆணின்னு ஆணிகளுக்கு நடுவில் வாழ்க்கையை அப்பப்போ கொஞ்சம் வாழ்ந்துக்கிட்டு இருக்குறவனை ஒரு தொடர் பதிவுக்குக் கூப்பிட்டு இருக்காங்க தோழி சினேகிதி அவர்கள். (அது ஆரம்பிச்சி பதிவுலகலத்துல பாதிக்கு மேல போட்டுட்டாங்க) ஏற்கனவே தொடர் பதிவுகள், விருது பதிவுகள் வரிசையாக இருக்கு. இவனுக்கு விருது கொடுத்த அனைவருக்கும் ஒரு மிக பெரிய நன்றி ! ;)

பதிவெழுத வந்த கதை - தொடர் விளையாட்டில், இவன் பதிவுலகத்தில் பதிவு எழுத வந்த கதையை சொல்லிப் பதிவு போட வேண்டும் - இதுதான் சினேகிதியின் விளையாட்டு. இவனோட சொந்தக்கதை சோகக்கதையாக இருந்தாலும் பதிவுலகத்தில் பதிவெழுத வந்த கதை கேட்கும் கதையாக இருக்கக்கூடும் என்று எண்ணியதால் என்னை இந்த பதிவு போட சொன்னான். (ம்ம் குட் குட் கொடுத்த காசுக்கு நல்லா கூவுற ராசா! வெளங்கிடுவ நீ ;)

இவன் தமிழில் எழுதப் பயன்படுத்தும் கலப்பை Tamil99. தமிழில் டைப் செய்யனும் என்றால் அதுக்கு தமிழ் டைப்பிங் எல்லாம் தெரிஞ்சிருக்கணும் போலன்னு நினைச்சுக்கிட்டு இருந்தவன். இந்த ஈ கலப்பையை பிடிக்கத் தெரிஞ்சவுடன்தான் அட இதுக்கு டைப்பிங் எல்லாம் தெரிய வேண்டிய ஆவசியம் இல்லைன்னு தெரிஞ்சுச்சு இவனுக்கு. கலப்பையை ஓட்டக் கத்துக்கிட்ட உடன் தமிழில் ஒரு அறிமுகப்பதிவு போட்டுட்டான். அன்னிக்கு ஆரம்பிச்சது இவன் பதிவுலக சரித்திர வாழ்க்கை. இன்னும் பின்னூட்டங்களோட போயிக்கிட்டு இருக்கு. இந்த கலப்பையை பிடிக்க கத்துக் கொடுத்தவர் யார் தெரியுமா? சொல்றேன் அதுக்கு தானே என்னை அனுப்பியிருக்கான். ஆனா கதை சொல்லும் போது எல்லோரும் ’ம்... ம்....’ சொல்லனும். கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது.

2005ம் வருஷம் ஒரு நாள் ராத்திரி வழக்கம் போல இவன் ஆணி பிடிங்குற மாதிரி நடிச்சிக்கிட்டு இந்தப் பதிவை தொடங்கினான். எதுக்குத் தொடங்கினான்? ஏன் தொடங்கினான் என்ற கேள்விக்கு எல்லாம் ஒரே பதில் தனிமை. உள்ளூர்ல ஆணிகள் பிடுங்கி சலித்ததால் வெளிநாட்டு ஆணிகளை பிடுங்கலாமுன்னு மூட்டை கட்டிக்கொண்டு ஷார்ஜா வந்த சமயம். ஒரு மாதம் பகல், ஒரு மாதம் ராத்திரின்னு ஆணி பிடுங்கும் நேரம் கொடுத்தாங்க இவுங்க நிறுவனம். (இப்போது 2 வாரமாக மாத்திட்டாங்க!) பகல் பொழுதுகளில் ஆணி பிடுங்குவதில் நேரம் போவது தெரியாது. அந்த அளவுக்கு மக்கள் சூழ்ந்த நிலையில் இருப்பார்கள். ஆனால் அதே ஆணியை ராத்திரியில பிடுங்க மிகவும் கஷ்டமாக இருக்கும். தனிமை அதிகமாக இருக்கும். தனிமையில் என்ன செய்வான்! பாவம்!! எம்புட்டு நேரம் தான் ஆணிகள் கூடவே பேச முடியும். அதனால இணையத்தில் சுத்தத் தொடங்கினான். அப்படி சுத்த இவன் எடுத்த டிக்கெட்டின் பெயர் இளையராஜா. அந்த டிக்கெட் மூலமாக இன்று வரை இவன் பயணம் போய்க் கொண்டே இருக்கிறது. அது வேற கதை. அந்த டிக்கெட்டுல இவனைக் கொண்டு போயி விட்ட இடம் CSR அவர்கள் எழுதிய As we Feel Raaja ஆங்கில வலைப்பக்கம். அந்த பக்கத்தை படித்த முடித்த பிறகு இப்படி ஓசியில் படம் எல்லாம் போட்டு ஒருத்தர் சொல்றதை வந்து படிச்சிட்டு அதுக்கு மத்தவங்களும் கருத்தை சொல்லிட்டு போறாங்களே! இது சூப்பர் டைம் பாஸ் போல இருக்கேன்னு நினைச்சிட்டான்.

நினைச்சிட்டான்ல! அப்புறம் என்ன நமக்கு சனி தான். உடனே இவனுக்கும் ஒரு இடம் வேணுமுங்கன்னு Bloggerல சொல்லி ஒரு இடத்தை பிடித்து வச்சிக்கிட்டான். சரி இடம் ரெடி என்ன எழுதுறது? கேள்விக்கு பதிலாக கேள்வியே எழுதி வச்சவன் இவன். என்னாத்த எழுதறதுன்னு யோசிச்சே கொஞ்ச நாள் காத்துவாங்கவிட்டுட்டான். சரி முதல்ல ஒரு முன்னுரை எழுதுவோமுன்னு எழுதி போட்டாச்சி. அதுவும் இங்கிலிபீசுல. மனசுக்குள்ள ஆகா ஊரே வந்து வாங்க வாங்கன்னு சொல்லியிருக்கும். எப்படி இதை எல்லாம் சமாளிக்கப் போறோமுன்னு கனவுக் கண்டுக்கிட்டு மறுநாள் வந்து திறந்துப் பார்த்தாக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒருபயலும் வந்துட்டு போன அறிகுறியே இல்ல. சிங்கத்தோட வாழ்க்கையில இப்படி சில அசிங்கங்கள் நடக்கத்தான் செய்யுமுன்னு மனசைத் தேத்திக்கிட்டு அடுத்தப் பதிவும் போட்டான். ம்ஹூம்! ஒருத்தனும் வரலியே. இது உனக்குத்தேவையா!? ன்னு நான் அப்பவே கேட்டேன். கேட்டுக்கிட்டு வழக்கம் போல இணைத்தில் கிடைக்கும் பத்திரிக்கைகளை படிக்கப்போயிட்டான். அப்படி வழக்கமாக படிக்கிற பத்திரிக்கைதான் ஆனந்த விகடன்.

அதுல வர ஜீனியர் விகடனில் ஒரு பேட்டி! வேட்டையாடு விளையாடு படத்தை பத்தி பேட்டி கொடுத்திருந்தவர் நம்ம தோழி லிவிங் ஸ்மைல் வித்யா அவர்கள்! அந்தப் பேட்டியின் முடிவில் அவுங்க பதிவின் விபரம் இருந்துச்சு. அதுல blogspot.com அப்படின்னு இருந்துச்சி ஆகா! இதுலதானே நாமும் இடம் பிடிச்சிருக்கோம்ன்னு டக்குன்னு அவுங்க வலைப்பக்கம் போனான். ஒரே சந்தோஷம் மகிழ்ச்சி ஆச்சரியம்....!!!ஏன்னு கேட்டிங்கதானே..சொல்றேன் எங்கப் பார்த்தாலும் தமிழ்...தமிழ்....தமிழ்...அதான். இதுல என்னடாப் பெருசா இருக்குன்னு தோணும் உங்களுக்கு. இந்த வெளிநாட்டு வாழ்க்கையில இருக்குறவன் எப்பப்பாரு இங்கிலிபீசும் இந்த ஊர் மொழியையும் ஒரு மாதிரி பிச்சிப்பிச்சிப் பேசி பக்கவாதம் வந்த மாதிரி வாய் எல்லாம் கோணி இருக்கும் நிலையில அம்மான்னு அம்மா சொல்லி கொடுத்த தன்னோட அன்னை மொழியை எங்கயாச்சும் பக்கத்துல கேட்டுக்கும் போது மனசுல ஒரு சந்தோஷமும், நமக்கும் இங்க ஆளு இருக்குடான்னு உள்ள ஒரு சவுண்டு வரும் பாருங்க. மனசு அப்படி ஒரு துள்ளுதுள்ளும். அப்படி ஒரு துள்ளல்தான் அந்த தன்னோட அன்னை எழுத்துக்களை பார்க்கும் போதும் இவனுக்கு ஏற்பட்டுச்சு.

சந்தோஷத்துல ஒவ்வொரு பதிவாப் பார்த்து பார்த்து அப்படியே சென்னை வலைப்பக்கம் வந்துட்டான். தன்னோட பொறந்த ஏரியாப் பெயரை பார்த்தவுடன் ’ஆ’ன்னு வாயப்பொளந்து அங்க இருந்த மக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பதிவுகளைப் பார்த்துட்டு ஆகா! தமிழில கூட எழுதலாம் போலன்னு நினைச்சவுடன் மனசுல சந்தோஷம் தாங்க முடியல பயலுக்கு. சரி யாருக்கிட்ட போயி கேட்குறது சுத்தி சுத்திப் பார்த்தான் இருந்தாரு நம்ம வலையுலகத்தின் அமைதிப்புயல் திரு. மா. சிவக்குமார்! அவருக்கு ஒரு மெயிலை தட்டிவிட்டான். அவருதான் இவனுக்கு கலப்பை பிடிக்கச் சொல்லிக் கொடுத்த குரு. கீபோர்டுல தமிழ் எழுத்து எல்லாம் அடிக்க அல்லும் பகலுமாக உழைச்சி கத்துக்கிட்டான். அப்படி கத்துக்கிட்டப்பிறகு இவன் போட்ட முதல் பின்னூட்டம் வலையுலக வாரியார் திரு. ராகவன் என்கிற ஜிரா அவர்களுக்கு. அதுக்கு அப்புறம் தேன்கூடுல போயி நானும் ஒரு தேனீயாக சேர என்ன செய்யனும்ன்னு பார்த்து அதுக்கு அப்புறம் மீண்டும் தமிழ் ஒரு அறிமுகம் போட்டு சேர்த்தாச்சு. அப்புறம் கடைக்கு யாரும் பெருசா வரல. என்ன செய்யலாமுன்னு யோசிச்சா கடைக்கு வர முதல்ல ஆளை பிடிக்கனுமுன்னு வலையுலகில் ஜோசியத்தில் சொல்லியிருந்தாங்க. சரின்னு பின்னூட்டம் போட்டு ஆளை பிடிக்க ஆரம்பிச்சான். அப்படி கடைக்கு முதல் வியாபாரம் செய்தவங்க கதாசிரியர் தோழி திவ்யா அவர்கள்.

அதுக்கு அப்புறம் வலையுலகத்தின் பொன் மொழிகள் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு நல்லா கும்மி அடிக்க ஆரம்பிச்சான். பின்னூட்டத்திறக்கு பதில் போட்டாங்களா? பின்னூட்டக்கயமை, மீ த ஃபர்ஸ்ட்டு, இவங்களுக்கு இவங்களே உள்ளேன் அய்யா போட்டுக்கிறது. போன் போட்டு ”டேய் மச்சி இங்க கும்மியில இருக்கேன் சீக்கிரம் வாடா”ன்னு பாசத்தோட அழைப்பது. மத்தபடி எல்லா பதிவர்களுக்கும் வரும் அதே அனுபவங்கள் தான் இவனுக்கும். இவனும் சைடுல பதிவுகள் போட்டுக்கிட்டே வந்தான். பதிவுலக கும்மியில பல திட்டுக்கள் கிடைச்சாலும் இவனுக்கு அதைப்பத்தி எல்லாம் கவலை இல்லை ஏன் தெரியுமா?அந்தக் கும்மியில் ஒரு பெரிய குடும்பமே உருவாச்சு. யாரு பதிவு போட்டாலும் ஈவு ஈரக்கம் எல்லாம் பார்க்காமப் போயி கும்மி அடிச்சி "புள்ளைங்களா இதுங்கன்னு" பெயரும் எடுத்துச்சு அந்த குடும்பம். இப்போ எல்லாம் பெரிய பதிவர்கள் ஆகிட்டாங்க எல்லோரும் - (சைடுல இவனும் ஆகிட்டேன்னு எப்படி பீத்திக்கிறான் பாருங்க ! ) முதல் சந்திப்பு கிடேசன் பார்க்ல நடந்துச்சி (ம்ம்ம்... அது ஒரு பெரிய கதை) .அதுக்கு அப்புறம் வீட்டுக்கு போன் செஞ்சு நல்லாயிருக்கிங்களான்னு கூட கேட்க மறந்தாச்சு. ஆனா இந்தப் பதிவர்களுக்கு தினமும் போன் இல்லைன்னா இருக்கவே இருக்கு ஜிடாக்கு, மெயிலு இப்படி போயிக்கிட்டு இருந்த பதிவுல மொக்கை வாழ்க்கை, இப்போ நினைச்சா நேரில் மொக்கையோ மொக்கை போடும் அளவுக்கு வந்துடுச்சி.

பயணம் தொடங்கும் போது எல்லாமே தெரியுமுன்னு பயணம் போறது இல்ல. கொஞ்சமாச்சும் தெரிஞ்சிக்கத்தான் பயணம் போறோம். அப்படிப் போகும் போது சக பயணியின் அன்பான அந்த சுதந்திரம் கொடுக்கும் தைரியம் தான் நம்மை இன்னும் மேலும் மேலும் பல விஷயங்கள் தெரிஞ்சுக்க வைக்குது. அப்பபடி ஒரு அருமையான அன்பான சகபயணிகள் இவனோட பதிவர்கள். அவர்களுக்கு பதிலுக்கு இவன் அதே அன்பான சுதந்திரத்தை கொடுக்கிறானோ இல்லையோ! ஆனா வெறுப்பை கொடுக்காமல் இருக்க முயற்சி செய்யறான்.

அம்புட்டுத்தான்பா....சினேகிதி வந்து மார்க் போடுங்க.நான் அழைக்கும் சக பயணிகள்


பார்வைகள் "கவிதா அக்கா"

கவிதை மழை பொழியும் "கவிநயா அக்கா"

யாவரும் நலம் விசாரிக்கும் "சுசி அக்கா"

மயில் "அக்கா விஜி"

வலையுலக "அண்ணன் ஆயில்யன்"

எங்க ஏரியா+என்னோட "செல்ல ஜீனியர் - ஆதவன்"

வலையுல "FORWARD MAIL" "அண்ணன் கார்த்திக்கேயன்"

ம்ம்ம்...இத்தோட எந்த மாசம் பதிவு வருமோ!!! ;)

Monday, June 29, 2009

3 + 32 = அட்டகாசங்கள்....


இந்த தொடரை தொடங்கி வச்சவுங்க யாருன்னு தெரியல அவுங்களும் என்னோட பதிவுகளுக்கு வருவாங்கன்னு தெரியல (ம்க்கும் நீயே உன்னோட ப்ளாக்கை மாசத்துக்கு ஒரு முறை தான் பார்க்குறா இதுல அவுங்க வேற பார்க்கணுமாக்கும்) அவங்களுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.....சும்மா சொல்லக்கூடாது இந்த 32 கேள்வி பதில் பதிவு போடாத ஆளுங்க தான் பதிவுலகத்தில் ரொம்ப கம்மியாக இருக்காங்க. மீதி அம்புட்டு பேரும் போட்டாச்சு - பிடிக்குதோ இல்லையோ, கேள்வியில குத்தம் குறை இருந்தாலும் அதையும் சொல்லிக்கிட்டே பதிலும் பதிவும் போட வச்சாங்கல்ல/ அதுக்கு தான் அவர்களுக்கு வாழ்த்து :)

கேள்விக்கு போறதுக்கு முன்னாடி ஒரு சின்ன சீன் போட்டுக்கிறேன் :)

நான் பிறர் தேவையில்லாமல் கேள்வி கேட்கக்கூடாத அளவுக்கு நடக்க வேணுமுன்னு முயற்சி பண்றவன். அப்படிப்பட்ட எனக்கு 3 பேரு ரவுண்டுகட்டி 32 கேள்வி கேட்டுருக்காங்க. யாரு அந்த மூணு பேரு சகோதரி மயில், சகோதரி கவிதா, சகோதரன் தென்றல். இன்னும் சொல்லப்போனா இவுங்க பதிவுகளில் நான் அதிகமாக கேள்வி எல்லாம் கூட கேட்டதில்ல/ அந்த அளவுக்கு பச்சப்புள்ளைய போயி இப்படி கேட்டுப்புட்டாங்க....என்னதான் சூனா பானா வேஷம் போட்டாலும் மனசுக்குள்ள ஒரு ஆசை இருக்கத்தான் செய்யுது. அப்படியே சேர் மேல உக்கார்ந்து கால் மேல காலை போட்டுக்கிட்டு பேட்டி கொடுக்கற நினைப்புல இருக்கேன் இப்போ....வாங்க நிகழ்ச்சிக்கு போகலாம்.

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது? (இந்த கேள்வியை அப்படியே எழுதிவைக்குற பழக்கம் இன்னும் போகலைங்க) எங்க தாத்தா வாயில வந்தது அதனால எனக்கு வந்ததுன்னு ஆத்தா சொல்லி கேள்விப்பட்டுயிருக்கேன். ரொம்ப பிடிக்கும். ஆனால் சில சூழ்நிலையில் ஏண்டா இந்தப் பெயரை வச்சாங்கன்னும் நொந்து போயிருக்கேன். அப்புறம் பாட்ஷா படத்துல வர ரஜினி மாதிரி எனக்கு இன்னொரு பெயரும் இருக்கு. அது ஜாதக பெயராம்! அதை கூப்பிட மாட்டாங்க. அப்புறம் அம்மா என்னை அழைப்பது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவரை தவிர வேற யாராச்சும் அப்படி அழைத்தால் பிடிக்காது அது அம்மா ஸ்பெசல் :)

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

உண்மையை சொல்லனுமுன்னா தெரியல....படம் பார்க்கும் போது, புத்தகம் படிக்கும் போது மனசுக்கு பிடிச்சவுங்க டக்குன்னு ஏதாச்சும்
கஷ்டபடுற மாதிரி சொல்லிட்ட உடனே கண்ணு கலங்கிடும். ஆனா அப்படியே அடக்கிடுவேன்.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப பிடிக்கும்....பெருசாக எல்லாம் இருக்காது. என்னோட கையெழுத்து சின்னதாகத்தான் எழுதுவேன். அழகாவும் இருக்குன்னு பலபேர்சொல்லியிருக்காங்க. ஆனா இப்ப எல்லாம் கோழி கிறுக்கல் தான். அதிகம் எழுத முடியுறதுல்ல

4. பிடித்த மதிய உணவு என்ன?


அந்த அளவுக்கு அதிகம் சாப்பாட்டு மேல எல்லாம் ஈடுபாடு இல்ல.....அம்மா வைக்கும் முள்ளங்கி சாம்பாரும்+முட்டையை வேகவச்சிசெய்யும் தொக்கும் ரொம்பப் பிடிக்கும்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

இந்த கேள்வி இப்படி இல்லைன்னு சில பதிவுகளில் படிச்சிருக்கேன். உடனே நட்பு வச்சுக்குவீங்களான்னு கேட்டா இல்லை என்பது தான் என்னோட பதில்.

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா....அருவியில் குளிக்கப் பிடிக்குமா?


கடல்ல நிறைய முறை குளிச்சிருக்கேன். அருவியில இன்னும் குளிக்கல. அதனால அருவி தான் இப்போதைக்கு ;)

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அந்த அளவுக்கு கவனிச்சிப் பேசுவேனான்னு எனக்கே தெரியல. இருந்தாலும் முகத்தைத்தான் முதலில் பார்ப்பேன்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?


என்கிட்ட இருக்குற எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். பிடிச்சது அதிகம் சதவீதம் இருக்குறதுனால, பிடிக்காதது பார்டர் மார்க் கூட இல்ல அதனால பிடிக்காத விஷயம் எதுவும் இல்ல.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இப்போதைக்கு நான் முழுசாத்தான் இருக்கேன்.

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

என்னோட அம்மா.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?


நீலம்

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?


பார்த்துக் கொண்டு இருப்பாது ஆணிகளை.....கேட்டுக் கொண்டுயிருப்பது "ஏன்டா பாண்டி இன்னாத்த நீ பண்ண..." வால்மீகி - இளையராஜா

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்பு

14. பிடித்த மணம்?


புது புத்தகத்தி்ல் இருந்து வரும் மணம் ரொம்ப பிடிக்கும்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

பிடித்த விஷயங்கள்ன்னு ஒண்ணை மட்டும் சொல்லமுடியாதுங்க இவுங்க 5 பேருக்கிட்டையும்

சகோதரி முத்துலட்சுமி

சகோதரி மை ஃபிரண்ட்

சந்தோஷ் அண்ணே

தல கானா பிரபா

தல அய்யனார் (ஏற்கனவே போட்டுட்டாரு)

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

சகோதரி மயில் - அவர் எழுதிய குழந்தைகள் கவிதை தான் நான் என் நினைவில் இருக்கும் முதல் பதிவு - அப்புறம் துறை சார்ந்த சில பதிவுகள் எழுதியிருக்கிறார் அதை தொடர்ந்து எழுத வேண்டும் என்பது என்னோட பணிவான வேண்டுகோள்.

சகோதரி கவிதா - "கேப்பங்கஞ்சி வித் கவிதா" பதிவுகள் அனைத்தும் பிடிக்கும். ஆனால் இப்ப எல்லாம் அதை காணோம். இவரின் தொடர்கதைகளும் அருமையாக இருக்கும். இவர் பொதுவாக மனதுக்கு அப்படியே பதிவாக போடுவதற்க்கு பதில் கதையாகவோ புனைவாகவோ எழுதினால் இன்நேரம் தமிழ்மணம் இவரையும் ஒரு பின்நவீனத்துவவாதின்னு சொல்லியிருக்கும்.

சகோதரன் தென்றல் - அதான் சகோதரன்னு சொல்லிட்டோம்ல்ல எப்படி இருப்பாரு. என்னோட அண்ணன் என்னை போலதான்.....எப்பவச்சும் ஒரு பதிவு அதுவும் டிக்கெட்டு பின்னாடி எழுதிற மாதிரி குட்டியாக இருக்கும். ஆனா சரக்கு அதிகம் உள்ள மனுஷன். திரைப்படங்ளை பற்றி இவர் எழுதவேண்டும் என்பது என்னோட ஆசை

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட்

18. கண்ணாடி அணிபவரா?

ஆமாம்

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

அப்படி வரைமுறை எல்லாம் இல்ல

20. கடைசியாகப் பார்த்த படம்?

புதுபடம் என்றால் பசங்க

பழைபடம் என்றால் - மலையாளத்தில் அச்சுவிண்ட அம்மா & விருமாண்டி

21. பிடித்த பருவ காலம் எது?


குளிர்காலம்

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

ஜெயமோகனின் திசைகளின் நடுவே....சிறுகதை தொகுப்பு

23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?


படங்கள் வச்சுக்கிறது இல்ல

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது ;
எல்லா சத்தமும் பிடிக்கும் குறிப்பிட்டு சொல்லும்படியாக ஒண்ணும் இல்ல

பிடிக்காதது :
அதே பிடித்த சத்தங்கள் அதிகமாகும் போது பிடிக்காது

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்சத் தொலைவு?


துபாய்

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?


இருக்கு.


27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

ஏமாற்றுவதை

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?


கடவுள் எதுன்னு தெரிஞ்சாதானே சாத்தான் எதுன்னு தெரியுறதுக்கு! நொடிக்கு நொடி குழப்புங்களும் கேள்விகளும் சூழ்ந்த நிலையில் இருக்கும் நான் தான் எனக்கு சாத்தான்.

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?


குறிப்பிட்டு எதுவும் இல்லை...லீவு கிடைச்ச இழத்து போத்திக்கிட்டு தூங்குறவன் நான்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்படியே...

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?


தெரியாது

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

பயணம்

இந்த மாதக்கணக்கு முடிஞ்சிடுச்சி இனி அடுத்த மாதம் சந்திப்போமா!!

Monday, June 01, 2009

இசைக்குப் பிறந்த நாள்

ஒரு புதிய படத்தின் நாயகன் முதல்முதலில் தன் நாயகியை பார்க்கிறான். பார்த்தவுடனே அவனுக்கு காதல் மலர்கிறது. பின்னணியில் ஒரு வயலின் இசை தொடங்குகிறது, உள்ளத்தைத் துள்ளி எழச்செய்யும் இசை அது. ஓ.. வென கத்திக் கூச்சலிட்டு ஆடவேண்டிய இசை. ஆனால் உள்ளுக்குள்ளேயே, நாயகன் ஆடவில்லை பாடவில்லை அப்படியே நாயகியை வைத்தக்கண் வாங்காமல் பார்க்கிறான். ஆனால் அங்கே அவன் உள்ளத்தில் இருக்கும் காதல் ஆடியிருக்கும் பாடியிருக்கும் என்பதை அந்த பின்னனி இசையில் நமக்கு ஒருவர் உணர்த்திக் கொண்டிருக்கிறார்.

இந்த வயலின் இசை பல வருடங்களுக்கு முன்னாலேயே வந்துவிட்டது. திரு. மணிரத்தினத்தின் முதல் படமான "பல்லவி அனுபல்லவி" என்கிற படத்தில் வந்த இசை இன்றைக்கு வெளிவந்திருக்கும் "சர்வம்" படத்திறக்கும் மிக பொருந்தமாக அமைந்திருக்கிறது. இது அவருக்கு புதிது அல்ல. அவரை ரசிக்கும் நமக்கும் புதிதல்ல.

தன்னுடைய இசையால் மனிதனின் உள்ளத்தை ஆட்டிப்படைப்பவர். தன்னோட அன்பு கொண்ட இசையால் உலகத்தின் உள்ள இசை நெஞ்சங்களை கவர்ந்தவர்

"திரு. இசைஞானி இளையராஜா அவர்களின் 66வது பிறந்த நாள் இன்று.இசைஞானியின் பிறந்த நாளான இன்று அவர் இசைஅமைத்த மூன்று பாடல்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். இந்த மூன்று பாடல்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. நம்ம இசைஞானி இந்த மூன்று பாடல்களிலும் தோன்றியிருப்பார்.

குட்(டி) நியூஸ் ;- இப்போ வரவிருக்கும் அழகர்மலை படத்தில் ஒரு முழுபாடலுக்கு இசைஞானி நடித்திருக்கிறார்.

மடைதிறந்து பாடும் நாதியலை நான்

இன்றும் இந்த பாடலை ரீமிக்ஸ் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அழகாக ஹார்மோனிய இசையுடன் தொடங்கி பின்பு வயலின்கள் ஒலிக்க துள்ளவைக்கும் பாடல். திரு. எஸ்.பி.பி அவர்களின் குரலுக்கு இசைஞானி வாய் அசைத்திருப்பார். இந்த பாடலில் இசைஞானி தோன்றும் போது பாடல்கள் வரிகள் இப்படி வரும் "புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே"அந்த வரிகள் அவருக்கு என்றும் பொருந்தத்தக்கது. ஆமாம் இசை தெய்வம்ய்யா நீ ;). இப்போது அவரிடம் இந்த வரிகளை பற்றி கேட்டால் என்ன சொல்லுவார்!!?

நான் தேடும் செவ்வந்திப்பூ இது...

"சந்தோஷம் உச்சமாக போகும் போது ஒரு பீலிங் இருக்கும் அப்படியே செத்துட்டா நல்லாயிருக்கும் போல இருக்குமேன்னு, அது வந்து இந்த பாட்டுக்கு முன்னாடி ராஜா சார் ஒரு ஆலாபனை பாடுவாரு உண்மையிலே சொல்றேன் அப்படியே உயிரோட செத்துடலாம் போல இருக்கும் அப்படி ஒரு ஜீவன் அதுல இருக்கும்" சில வருடங்களுக்கு முன்னால் சென்னையில் இசைஞானி கச்சேரி செய்தபோது இந்த பாடலை அறிமுகப்படுத்த திரு. பார்த்திபன் சொன்னவை. உண்மையில் அந்த ஆலாபனையின் மூலமாக நம்ம மனசுக்குள் நுழைந்து பாடலில் நிறைஞ்சியிருப்பாரு ராஜா.

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே...!

இந்தப் பாடல் தொடங்குவதற்க்கு முன்னால் நடிகர் ரகுமான் இசைஞானியிடம் அந்த பல்லவியை ஒருமுறை பாடுங்கள் ராஜா என்பர் இசைஞானியும் கல்யாண மாலை....என்று பாடி முடிப்பார். அதை ஆழ்ந்து ரசித்துவிட்டு நடிகர் ரகுமான் ُ’பியுட்டிஃபுல் ராஜா’ என்பர். அந்த ’பியுட்டிஃபுல்’ என்ற வார்த்தை ராஜா இசைமைத்த அந்த இசைக்கு எந்த அளவுக்கு பொருந்தும் என்பதை இப்போதும் ஏதாவது ஒரு திருமணத்தின் இசைக்கச்சேரியில் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருப்பதே சாட்சி. பேசும் போது அவரோட குரல் இல்லமால் இருப்பது கொஞ்சம் வருத்தம்.
ஸ்பெஷல்

How to name it இசைத்தொகுப்பில் எனக்கு ரொம்பப் (இதுக்கு அப்புறம் எத்தனை ரொம்ப போட முடியுமே அத்தனையும் போட்டுக்கோங்க) பிடித்த Do anything இப்போது உங்களுக்காக.தூக்கத்தில் இருந்து விழித்த குழந்தையை அன்பு கொண்டு ஆர அரவணைக்கும் அன்னையே போல என்றென்றும் இருக்கும் உன் இசை. மீண்டும் இசை தெய்வத்தை வாழ்த்த எதுவுமே இல்லை அதனால வணங்குகிறேன்.

Monday, April 06, 2009

மழை...


நீண்ட நாட்களுக்கு பிறகு அமீரகத்தில் மழை....ஒரேயடியாக பேய்ந்து தள்ளிவிடுவேன் என்கிறது...ஒரே எரிச்சலும் இம்சையுமாக இருந்தது. நான் வசிக்கும் இடம் அப்படி. தொடர்ந்து 1மணிநேரம் பெய்தால் போதும். மின்சாரம் தானாக போய்விடும். உடனே கம்பெனிக்கு தகவல் அனுப்ப வேண்டும் அவர்கள் வந்து என்ன ஏதுன்னு பார்த்து சரியாக்குறதுக்கள்ள விடிஞ்சிடும். பள்ளிக்காலங்களில் மழை பெய்தால் மனதுக்குள் செம ஜாலியாக இருக்கும். ஆண்டவா மழை நல்லா பெய்யணும். ஸ்கூல் முழுக்க தண்ணி தேங்கி லீவு விடணும். ஆனால் எங்க தெருவுல மட்டும் தண்ணியே தேங்கக்கூடாது என்று எல்லாம் வேண்டியிருக்கிறேன். தெருவில் தண்ணீர் தேங்கிவிட்டால் கிரிக்கெட் ஆட முடியாதுல்ல அப்பவே நான் எம்புட்டு நல்லவன் பார்த்திங்களா! (எப்படி நீ நல்லவன்னு கேட்பவர்காக - பின்ன ஒரு தெருமுழுக்க தண்ணீர் தேங்கக்கூடாதுன்னுல வேண்டியிருக்கேன்)

*****************************

போன மாதம் முழுக்க ஆணிகள் அந்த அளவுக்கு இல்லை. எல்லாம் உலக பொருளாதார வீழ்ச்சி. அந்த வீழ்ச்சி எங்க கம்பெனியையும் கொஞ்சம் பயன்படுத்திக்கிடாங்க. அதனால 12 மணிநேரம் வேலை 8 மணிநேரமாக குறைந்தது. ஒரு பக்கம் என்னாடா ஆப்பு இப்படி வருதேன்னு நினைத்தாலும் இன்னொரு பக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மீதி நேரத்தில் பக்கத்தில் உள்ள warehouseல் கிரிக்கெட் ஆட ஆரம்பிச்சிட்டோம். நீண்ட நாளைக்கு பிறகு விளையாடியாதால் ஒரு ஓவருக்கு 13 பால் போடவேண்டியாதிடுச்சி. கொஞ்சம் ஏறி நின்னு அடிச்சதில் காலில் காயம் வேற. ஆனாலும் விடாப்பிடியாக தினமும் பேட்டை தூக்கிக்கொண்டு 3 மணிநேரம் நன்றாக விளையாடி வந்தோம். வழக்கம் போல இப்போது ஆணிகள் குவியத்தொடங்கிவிட்டது. பழையபடி 12 மணிநேர வேலைன்னு சொல்லிட்டாங்க. பழையபடியே திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பிச்சாச்சு.

***********************************

சென்ஷி, நான் மற்றும் ஆதவன், அய்ஸிடமிருந்து சில பல திரைப்படங்களை தூக்கிட்டு வந்தது மிகவும் நல்லதாக போச்சு.

காஞ்சிபுரம்

அற்புதமான படைப்பு. படத்தை இயக்கிய பிரியதர்ஷனை மனதாரப் பாராட்ட வேண்டும். மிகவும் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார். சொல்லவந்ததை எந்த வித தங்குதடையும் இன்றி யதார்த்தம் குறையாமல் சொல்லியிருக்கிறார். அந்த படத்தின் ஒளிப்பதிவை பாராட்டியே ஆக வேண்டும். இயற்கையான வெளிச்சத்தை மிக அழகாக நம் கண்களுக்கு காண்பித்திருக்கிறார்கள். முதலாளி மகளுக்கு பட்டுப்புடவை நெய்வதை பற்றி பிரகாஷ் சொல்லும் காட்சி மிக அழகாக செதுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் நடித்தவர்கள் அனைவரும் கொடுத்த வேலையை அருமையாக செய்திருக்கிறார்கள்.

நான் கடவுள்

எப்படா வருமுன்னு தவம் கிடந்த படம். கண்டிப்பாக திரையரங்கு சென்று பார்க்க நினைத்த படம். வந்துவிட்டது ஆனால் பல நாடுகளில் வெளியான இந்த படம் இந்த நாட்டுல மட்டும் வெளிவரவில்லை. திரு(பின்ன ஸ்டார் ஆகிட்டாருல்ல). குசும்பன் அண்ணனிடம் கேட்டதற்க்கு வில்லு, படிக்காதவன் போன்ற படங்கள் தான் வரும் இந்த மாதிரி படம் எல்லாம் வராதுன்னு குண்டை போட்டார். சிடியில் பார்க்ககூடாது என்று நினைத்து கொண்டிருந்தேன். நாம நினைத்தது என்னைக்கு நடந்திருக்கு இப்ப மாத்திரம் ஓடுறதுக்குன்னு ஒரு வழியாக பார்த்தாச்சு. படத்தைப்பத்தி எல்லாரும் பல விதமாக சொல்லிட்டாங்க என்னை பொறுத்தவரையில் சூப்பர் படம். பாலா எந்த காரணத்துக்கும் தன்னோட தனித்திறமையை மாற்றிக்கொள்ளாமல் படங்களை தர வேண்டும்.

The Host (நன்றி : சென்ஷி)

கலைக்கு மொழிகள் கிடையாது (ஆமா..புரியுற மொழியில எடுத்தாலும் உனக்கு புரிஞ்சுட போதாக்கும்) அது உண்மைங்க இது ஒரு ஜப்பான் படம்ன்னு தான் நினைச்சி பார்த்தேன். (ஆனா கொரியன் படமாம்) ஆய்வகத்தில் இருந்து வெளியாகற அமிலம் நகரத்தின் முக்கிய நதியில கலக்குறதால (காட்சில்லா -அணு ஆயுத பரிசோதனைய நினைச்சுக்குங்க) ஒரு புது மிருகம் உருவாகுது. அது அங்கே இருக்கும் மனிதர்களை உயிரோட முழுங்கி ஒரு இடத்தில வச்சி ஃபுல் கட்டு கட்டுது. அந்த மிருகத்துக்கிட்ட ஒரு சின்னப்பொண்ணு மாட்டிக்கிறா. அப்படி மாட்டிய பெண்ணை எப்படி அந்த குடும்பத்தினர் யாரோட பெரிய உதவியும் இல்லாமல் கொண்டு வராங்கன்னு தான் படம். பொதுவா இந்த மாதிரி அனிமேசன்ல எப்படி மக்களை காப்பாத்துறாங்கன்னு யோசிக்குற இயக்குனர்கள் மத்தியில இதுலஒரு குடும்பம் எப்படி சிதையுதுன்னு காட்டியிருப்பாங்க. அந்த பெண்ணோட அப்பாவாக வருபவரின் நடிப்பு டாப்புங்க. அவரோட மகள் இறந்துட்டாள்னு எல்லாரும் சொல்லும்போது, அப்பா இல்ல என்னோட பொண்ணு இறக்கல அவனை அந்த மிருகம் இப்படி வாய் வழியாக வெளியில துப்பியிருக்குமுன்னு செல்போனை வச்சி காட்சிப்படுத்துவாரு பாருங்கள் அட்டகாசம்ய்யா...தன் பொண்ணு தன் பக்கத்தில் இருக்கும் போது அந்த அப்பாவும் குழந்தையாகிடுவான் அவளுக்கு. அன்பை புரிய மொழியே தேவையில்ல அருமையான படம்.

Final Destination 1 2 3

யப்பா சாமிகளா மரணமுன்னு வார்த்தை சொல்றதுக்கே, கேட்குறதுக்கே எம்மாம் பயம் வருது. உனக்கு நேரம் நெருங்கிடுச்சி. மகனே அடுத்து நீ தான் போக போறன்னு தகவல் தெரிஞ்சிட்டா எப்படி இருக்கும். யப்பா படம் முழுக்க மரணம்தான். படம் பார்க்கும்போது எங்க ரூம் நண்பர்களுக்குள்ள எப்படிடா சாவான் இவன் இப்படியா இல்ல அப்படியானு ஒரு பட்டிமன்றமே நடந்துடுச்சி. ஆனா அவன் நாம சொன்னது மாதிரி இல்லாமல் வேற மாதிரி சாவான். அதான் படத்தோட வெற்றி. என்னைக்கேட்டா முதல்பாகம் மூன்றாம் பாகத்தை விட இரண்டாம் பாகம் தான் சூப்பரு. ஏன்னா படம் பார்க்கிறவன் கூட ஏய் அங்க போகாதே நீ செத்துடுவடான்னு யூகிக்க வச்சி கடைசியில ஒரு டூவிஸ்டு (டுவிஸ்டு இல்ல டூவிஸ்டுதான் ஒவ்வொருத்தவனுக்கும் ரெண்டு சான்ஸ் தர்றாங்க. சாவறதுக்கு) வச்சி கலக்கியிருப்பாங்க. இந்த படத்தை பார்த்ததில் இருந்து ஆபிசுல நடக்கவே பயமாக இருக்குது. செமம படம் பாஸ்.

Bangkok Dangerous

Samuel L. Jackson நடித்த Lakeview Terrace படத்தை பார்க்க ஒரு சிடியை வாங்கினேன். கடைசியில தாவு தீர்ந்துடுச்சி அதே சிடியில் நிக்கோலஸ் கேஜ் நடித்த இந்த படமும் இருந்தது. Bankok Dangerus படத்தின் பெயரை பார்த்ததும் ஒரே அடிதடியாக இருக்கும் போல சரின்னு போட்டு பார்த்தேன். அட்டகாசமாக ஆக்க்ஷன் படம் தான் ஆனால் அதை சொன்ன விதம் இன்னும் அட்டகாசம். நாலு பேரை போட்டு தள்ளுவதற்காக ஹாங்காங் வருகிறார் நிகல். அவர் போட வேண்டிய ஆட்களை பற்றி தகவல்கள் வேற ஒரு இடத்தில் இருந்து வரும். அதை கொண்டு வர ஒருவனை வேலைக்கு வைப்பார். அவனே நிக்கோஸ்க்கு சிஷ்யனாக மாறிடுவான். வசனங்கள் நெத்தி பொட்டில் சுட்டது போல சும்மா நச்சுன்னு இருந்தது. படத்தின் துவக்கத்தில் நிகல் சொல்லும் நாலு கொள்கைள் கலக்கல். ஒவ்வொரு காட்சியும் நன்றாக படைத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் யானை தும்பிக்கை கீழாக பார்த்தபடி இருக்கும். அதை பார்த்து அவனிடம் வேலை செய்பவன்(பின்பு சிஷ்யன்) இது சரியான சிம்பள் இல்லை. இது தப்பு. இப்படி வீட்டில் இருந்தால் உங்களுக்கு ஏதோ ஆபத்து வரும் என்று சொல்ல, போடா வெண்ண அதெல்லாம் ஒன்னும் வராதுன்னு என்று கதவை அடைத்துவிடுவான் நிகல். அதே யானை படத்தை ஒருநாள் இரவில் தலைகீழாக மாற்றிவைப்பான் அப்போது அவனுக்குள் ஒரு பெண் வந்திருப்பாள்.அதே பெண் விலகியவுடன் அந்த படத்தை தீயிட்டு எரித்துவிடுவான். அவளிடம் இருந்து விடை பெறும் போதும் எந்த வசனங்களும் இல்லாமல் போயிட்டு வரேன் தாயீன்னு ஒரே ஒரு பெரிய கும்பிடு அம்புட்டுத்தான் போய்க்கிட்டே இருப்பாரு ஹீரோ. அவர்கள் இருவரும் சந்திக்கும் முதல் காட்சியில் இருந்து அவளிடம் இருந்து விடை பெறும் வரை அவர்கள் இருவரும் வரும் காட்சிகள் அனைத்தும் அற்புதமான கவிதை.

***********************************

எஸ். ராமகிருஷ்ணனின் எழுதிய "தேசாந்திரி" தொகுப்பை மீண்டும் புரட்டும் போது புன்னகை புரியவைத்த கவிதை இது

சமுத்திரக் கரையில்
ஒதுங்கும் கிளிஞ்சல்கள்
குழந்தைக்கு வைரங்கள்
காட்சிதானே நிஜ வைரம்
காண்பவன் குழந்தையானால்
கிளிஞ்சல்கள் போதுமே.
-----------------------------------நா.விச்வநாதன்

ஒருநாள் திடிரென்னு அக்காவிடம் இருந்து அழைப்பு எடுத்து "ஹலோ" என்றேன் மறுமுனையில் "கோபிஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ"ன்னு ஒரு மழலையின் குரல் ஆடிப்போயிட்டேன். "ஏய்"ன்னு என்னோட பதில் அங்க போறதுக்குல்ல மீண்டும் "கோபிஇஇஇஇஇஇஇஇ தப்பிட்டியா", "நல்லாயிருத்தியா" என்று அக்காவின் 3வயது மகள் கேட்டு கொண்டே இருக்கிறாள். அந்த குரலை கேட்கத்தானே தோன்றுகிறதே தவிர பதில் வரவில்லை. என்னிடம். அக்கா பின்னால் இருந்து "சாப்பிட்டிங்களா மாமான்னு கேளு" என்று சொல்கிறாள். இவள் பதிலுக்கு ம்ன்னு சொல்லிவிட்டு "தாப்பிட்டிங்களா மாமான்னு" கேட்கிறாள். கைபேசி கைமாறியவுடன் "ஹலோ இருக்கியாடா" என்று அக்காவின் குரல் என்னை மீண்டும் இந்த உலகத்துக்கு வரவழைத்தது. "ம் இருக்கேன் என்ன திடீர்ன்னு போன்" என்றேன் என் பெண்ணு தான் உன் போட்டாவை பார்த்து கோபி கோபின்னு சொல்லிக்கிட்டு இருந்துச்சி. அதான் பேசுறியான்னு கேட்டேன், பேசுறேன்னு சொன்னா... அதான் போன் செஞ்சேன்" என்றாள்.

"ம்" என்றேன்.

"எப்படிடா என் பெண்ணு நல்லா பேசுறாளா!?"

"யம்மா தாயே வாய மூடுன்னு சொல்றவரைக்கும் பேசுறவ நீ, உன் பொண்ணு பத்தி சொல்லவா வேணும்.....கலக்குறா" என்று கிண்டலை அவளிடம் கொடுத்துவிட்டு அந்த பொழுதின் சந்தோஷத்தை என்னிடம் வைத்துக்கொண்டேன் சுயநலத்துடன் ;)

மழை தொடரும்.......