Tuesday, March 11, 2008

செல்வியின் டைரி

நான் எப்போவாவது மனநிறைவு அடைஞ்சிருக்கேனான்னு யோசிக்கும்போது சட்டுன்னு எதுவும் ஞாபகத்துல வரமாட்டேங்குது. அப்போ இதுவரைக்கும் மனநிறைவே அடைஞ்சது இல்லையா!? இல்ல எது மனநிறைவுன்னு சரியா எனக்கு தெரியலியா!? முதல்ல எதுஎதெல்லாம் மனநிறைவுன்னு முடிவு பண்ணனும். அப்பதான் அது எனக்கு கிடைச்சதா, இன்னும் இல்லையான்னு தெரியும். யோசிச்சு பார்த்தா இதுதான் மனநிறைவுன்னு எந்த வரைமுறையும் இல்லன்னு தோணுது. நேத்து ராத்திரி அப்பா கூட பேசினபோது இதுவரைக்கும் நான் அனுபவிக்காத ஒருவித மன அமைதி வந்துச்சே! அதுகூட மனநிறைவுன்னு சொல்லலாம்.

இவ்வளவு நாள் அவருக்கு தேவையானது எல்லாம் செய்துக்கிட்டு இருக்கேன். அப்பா சந்தோஷமாக இருக்கணும்னுதானே நினைச்சேன். ஆனா அவரோட மனசுல இருக்குற வலியை இறக்கிவைக்க மறந்துட்டேன்னு நேத்து தான் எனக்கு புரிஞ்சது.

சிரிக்கும் போது நம்ம மனசுக்குள்ள எப்படி ஒரு பரவசம் ஒரு நிம்மதி வருதே! அதே போல அழுகையிலும் வரும். அதுவும் நமக்கு ஆதரவாக உள்ளவங்க கூட இருந்து அணைச்சாங்கன்னா; வரும் பாருங்க கண்ணீர் அப்படி வரும். சமீபத்துல கூட ஒரு படத்துல பார்த்தேன்;
little miss sunshine...ன்னு. வலையுலகத்துல கப்பி பய கூட இதை பத்தி விமர்சனம் எழுதியிருப்பாரு. அந்த படத்துல ஒரு தாய் தன்னோட மாமனார் இறந்த துக்கத்துல இருப்பா. அப்போ அந்த தாயோட மகன் அவனோட குட்டி தங்கச்சிக்கிட்ட ஒரு பேப்பரில் எழுதிக்காட்டுவான். போயி அம்மாவை அணைச்சிக்கன்னு. அந்த குட்டிப்பொண்ணு ஆதரவா அணைச்சவுடனே அந்த தாய் துக்கம் தாங்காம ஓன்னு அழுவா. அதே அந்த அதரவான அரவணைப்பு ஒரு சமயத்துல அவ அண்ணனுக்கும் தேவைப்படும். அப்போ அந்த குட்டிப்பொண்ணு தானே புரிஞ்சிக்கிட்டு அண்ணனை ஆதரவா அரவணைப்பா. அவனும் அந்த மன வலியை எல்லாம் கண்ணீரில் இறக்கி வச்சிட்டு அவ தோள் மேல கையைப் போட்டுக்கிட்டுப் போவான். அந்த காட்சிகள் மேலும் உணர்த்தியது அரவணைப்பின் தாக்கத்தை.

நேத்து அப்பாவுக்கும் இந்த மாதிரி ஒரு அரவணைப்பு தேவைப்படுச்சி. அதை நான் உணர்ந்து செய்தேன். அப்போ எனக்கு கிடைச்ச மன நிம்மதியை எப்படி சொல்றதுன்னு தெரியல. உங்களுக்கு என் அப்பா பேரு தெரியாது இல்ல. அப்பா பேரு சொக்கலிங்கம். 66 வயசு. அவருகூட இந்த மாதிரி நான் பேசியதில்லை. நேத்தைக்கு வரைக்கும். அவரோட வாழ்க்கையில மூணு பொண்ணுங்க வந்திருக்காங்க. நேத்து பேசிக்கிட்டு இருக்கும்போது அப்பா அவரோட பழைய கதை எல்லாம் சொன்னாரு.

ச்ச கதையா அது! அவரோட வாழ்க்கை. என்ன ஒரு அழகான வாழ்க்கை வாழ்ந்திருக்காரு. அதில் சந்தோஷம், துக்கம், ஏமாற்றம் எல்லாம் இருக்கு. அவரு கை எல்லாம் ஆட்டி ஆட்டி முகத்தை எல்லாம் மாத்தி மாத்தி சொன்ன அழகு இருக்கே...எனக்கே நம்ம அப்பாவா இதுன்னு தோணுச்சி. இதுவரைக்கும் இப்படி நான் அப்பா கூட பேசியது இல்லை.

நேத்து ராத்திரி வழக்கம்போல அப்பாவுக்கு மருந்து கொடுக்க அவரோட ரூமுக்கு போனேன்.

"அப்பா! சும்மா படிச்சது போதும்.. இந்த மாத்திரையை சாப்பிட்டு தூங்குங்க."

உடலில் உள்ள மொத்த வலிமையையும் கைகளில் வாங்கி நிமிர்ந்து உட்காந்தார் அப்பா. பார்க்குறதுக்கே பாவமாக இருந்துச்சு. மாத்திரை வாங்கி உற்று பார்த்து "ஏழுமலை ஏழுகடல் தாண்டி ஒரு கிளி வயித்துல உயிர் இருக்குன்னு பாட்டி கதை சொல்லும் போது எல்லாம் நம்பல. ஆனா இந்த மாத்திரைகளை பார்க்கும்போது எல்லாம் அதெல்லாம் நிஜம்ன்னு தோணுதும்மா. இந்த மாத்திரைகள் இல்லன்னா நான் எப்போவோ போய் சேர்ந்திருப்பேன் இல்ல. உனக்கும் பாரமாக இருந்திருக்க மாட்டேன்"

"ஆரம்பிச்சிட்டிங்களா! இதுல எனக்கு என்னப்பா பாரம் வந்துடப்போகுது"

"ம்... சரி பசங்க எல்லாம் தூங்கிட்டாங்களா?"

"ம்... ரெண்டும் பென்சிலுக்கு சண்டை போட்டு ரெண்டு உதை வாங்கி இப்பத்தான் தூங்கிச்சுங்க". கட்டிலில் அப்பாவின் அருகில் உட்கார்ந்து அவர் கைகளை பற்றி கொண்டேன்.

"ஏம்மா குழந்தைகளை அடிக்கிற..! சின்னகுழந்தைங்கதானே.."

"எரிச்சல்படுத்திட்டாங்கப்பா...அதான் ரெண்டு போட்டேன். நானும் சின்னக்குழந்தையா இருக்கும்போது இப்படித்தான் அக்காங்களோட சண்டை போடுவேனாப்பா.."

"சண்டை போடுவியாவா!!?...யப்பா.. அந்த மூணு பேருல நீதான் தாதா..உன் சவுண்டுக்கு அவுங்க ரெண்டு பேரும் பயந்தே உன்னை எதுவும் செய்ய மாட்டாங்க... ஆனா நீ எதையும் பெருசா கேட்டு அடம்பிடிக்க மாட்டே.. எது கிடைக்குதோ அதையே ரசிச்சு ஏத்துக்குவ.."

"ம்...! பார்த்திங்களா.. உங்களுக்கு செலவு வைக்காம இருந்திருக்கேன்"ன்னு என் பெருந்தன்மையை சந்தடிய சாக்கில வாசிச்சிட்டேன். சரி தூங்குங்கன்னு கைகளை பறித்துக்கொண்டு புறப்பட தயாரானேன். அந்த கைகளின் பிரிவை உணர்ந்துருப்பாருன்னு நினைக்கிறேன்.

"ம்மா செல்வி"ன்னு ஒருவித தவிப்போடு என்னை கூப்பிட்டார்.

"என்னப்பா..தண்ணி வேணுமா?"

"எப்படிம்மா இருக்க?"

இந்த வார்த்தையை கேட்டவுடன் சட்டுன்னு நின்னுட்டேன். என்ன சொல்லறதுன்னு தெரியல. அதிர்ச்சியும் குழப்பமுமாக இருந்துச்சு எனக்கு. "எனக்கு என்னப்பா நல்லா தானே இருக்கேன்"னு சொல்லிட்டு மீண்டும் ஆதரவாக கைகளை பற்றினேன்.

"என்னப்பா திடீர்ன்னு கேக்குறிங்க"

"ஒண்ணும் இல்லம்மா. கேட்கணுமுன்னு தோணுச்சி. கேட்டேன்... காலையில எழுந்தேன்னா சமையல், புருஷன், குழந்தைகள், உன் வேலைன்னு ஓடிக்கிட்டே இருக்க.. நீ எப்படியிருக்கன்னுகூட கேட்க முடியறதுல்ல...அதான்.."

மனதுக்குள் ஏதே உணர்ந்தவளாய் "நீங்க எப்படிப்பா இருக்கிங்க..?"

அந்த வார்த்தைகளுக்காக காத்துக்கொண்டிருந்தவர்போல தவிப்பும் மகிழ்ச்சியுடன் மீண்டும் மொத்த வலியை திரட்டி நிமிர்ந்து உட்காந்து "ம்... எனக்கு என்னம்மா குறை, நல்லாயிருக்கேன்ம்மா...இனி சாவு ஒண்ணுதான் பாக்கி.."

...........

"அட சும்மா சொன்னேம்மா... நெருப்புன்னு சொன்ன வாய் சுட்டுடவா போகுது... அப்பா அதுக்குள்ள எல்லாம் போகமாட்டேன். உன் புள்ளைங்க கல்யாணத்தை எல்லாம் பார்த்துட்டுதான் போவேன்.."

அப்பாவின் தலைமுடியை கோதிவிட்டபடியே என் செல்ல அப்பா என்று புன்னகைத்தேன்.

"எங்கம்மா கூட இப்படிதான் செய்யும்..."

"எப்படி இப்படியா" என்று மறுபடியும் தலைமுடியை கோதிவிட்டு சாய்ந்து பார்த்தேன்.

"ஆமா... எனக்கு மனசு கஷ்டமாக இருக்கும்போதெல்லாம் அதை உணர்ந்து ஆறுதலாக பேசி இப்படித்தான் செய்யும் எங்கம்மா.. அது எப்படிதான் அதுக்கு தெரியுமோ! என் முகத்தை வச்சே கண்டுபிடிச்சிடும். ஏண்டா ஒரு மாதிரி இருக்கேன்னு டக்குன்னு கேட்டுடும்... அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லையேன்னு பொய் சொல்லிட்டு எப்படி கண்டுபிடிச்சாங்கன்னு ஆச்சரியப்பட்டிருக்கேன்.. ஒரு நாள் கேட்கவே கேட்டுட்டேன்"

"என்னன்னு..."

"எப்படிம்மா உனக்கு மட்டும் தெரியுதுன்னு"

"பாட்டி அதுக்கு என்ன சொன்னாங்க" ஆர்வத்தை அடக்கமுடியாமல் கேட்டேன். என் ஆர்வத்தை புரிந்துக்கொண்டு 'நான் உன்னை பெத்தவடான்னு' அழுத்தமான ஒரு சிரிப்பை கொடுத்துட்டு போயிட்டாங்க. இன்னும் அந்த சிரிப்புக்கு அர்த்தம் தெரியாமல் இருக்கேன்.."

"ம்...."

"அதுக்கு அப்புறம் என் தலைமுடியை இப்படி கோதியது ராசாத்திதான்.."

"அட ராசாத்தியா! இவுங்க யாரு எனக்கு தெரியாம?"

"ராசாத்தி... இவ எதுக்கு என் வாழ்க்கையில் வந்தா.. எதுக்கு போனா.. எங்க ரெண்டு பேருக்குள்ள அப்படி என்ன இருந்துச்சுன்னு ஒண்ணும் பிடிபடல... இன்னும் கூட என் மனசுக்குள்ள இருக்கா.."

"உங்க காதலியாப்பா அவுங்க!?" அப்போது தான் அப்பாவுக்குதான் தன்னோட பொண்ணுக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கோம்ன்னு நினைச்சாரா என்னன்னு தெரியல. மவுனமாக இருந்துட்டாரு. மனசில் இருப்பதை கொட்டிவிட வேண்டும் என்று நினைக்கும் போது அருகில் இருந்து அதை கேட்க ஆதரவாக ஒரு மனிதன் கிடைத்தால் அது யாராக இருந்தால் என்ன?!

"என்னப்பா...! என்கிட்ட சொல்லக்கூடாதுன்னா வேண்டாம்..."

"ச்சே... இதுல என்னம்மா இருக்கு... அவ பேரு ராசாத்தி. அந்த பேர சொல்லும்போதே முகத்துல ஒரு சிரிப்பு வரும். இந்த வாலிப வயசுல நாம பேசுறதை எல்லாம் கேட்டுக்கிட்டு கன்னத்துல கைவச்சு 'ம்' கொட்டி ரசிக்க ஒருத்தி கிடைச்சான்னா அதைவிட சொர்க்கம் வேற எதுவும் இல்ல. அப்படி ஒரு சொர்க்கத்துல என்னை வச்சு ரசிச்சவ ராசாத்தி. என்னையும் அவளையும் வச்சு பல கிசுகிசுக்கள் வந்துச்சி"

"என்ன கிசுகிசுப்பா!!!"...அப்பாவின் ராசாத்தியோடு ஐக்கியமானோன்.

"வேற என்ன காதல்னுதான்.... நான் கூட ஒரு கட்டத்துல அதெல்லாம் உண்மையாக கூடாதுன்னா நினைச்சிருக்கேன்."

"ஆஹா.... அப்பா உங்கள் காதல் கதை கேட்டால் தப்பா... பொல்லாத அப்பா" ன்னு சின்னக்குழந்தை மாதிரி ராகம் போட்டு பாட்டு பாட ஆரம்பிச்சுட்டேன்.

என்னோட குழந்தைதனத்தை பார்த்து வாய்விட்டு சிரித்துவிட்டு தொடர்ந்தார் "அவளும் காதலிச்சா. ஆனா என்னை இல்ல பாலுன்னு இன்னொருத்தனை. ஆனா என்கிட்ட அவளுக்கு இருந்த அன்பு மட்டும் மாறவேயில்ல. அவுங்க காதலில் பிரச்சனை வந்துச்சு. பாலுவால் அவனோட வீட்டுல சம்மதம் வாங்க முடியல. அதை அவகிட்ட எப்படி எல்லாமோ சொல்லிப்பார்த்தான். அவளும் சரி சரின்னு சொல்லிட்டு திடீர்ன்னு ஒருநா என் கண்ணு முன்னாடி தன்னைத்தானே எரிச்சுக்கிட்டா.."

அதிர்ச்சியில் நான் அப்பாவின் கையை மேலும் இறுக பற்றிக்கொண்டேன்.

"ச்ச..! பாவம்ப்பா...!! அப்புறம் என்னப்பா ஆச்சு..?"

"ராசாத்தியின் மரணத்தை மறக்கடித்தவ தாமரை."

"ஐய்ய்ய்யா...அம்மா என்டிரியா..."

ஒருவித வெட்கப்புன்னகையுடன் "ம்ம்ம்ன்னு" சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தார். தாமரை எங்க அம்மாவோட சாய்ஸ். எளிமையான முறையில் நடந்துச்சு எங்க கல்யாணம். வாழ்க்கை இன்னும் இருக்குன்னு எனக்கு உணர்த்தியவள். வாழ்க்கை துணைன்னு சொல்லறதை விட என் வாழ்க்கையே அவள்தான்ன்னு சொல்லணும்.

என்னைவிட அதிகம் பேசிக்கிட்டே இருப்பா. எப்போதும் ஒரு படபடப்பும், குழந்தைத்தனமும் இருக்கும் அவகிட்ட"

அப்பா, அம்மாவை எந்த அளவுக்கு நேசித்திருக்காரு.. மனதில் பெருமைப்பட்டு கொண்டேன்.

"சுகத்தை மட்டும் பங்கு போட்டுக்கொள்ளாமல் என் கனவுகளையும் தன் கனவுகளாக நினைச்சு என் தோளோடு தோள் நின்னா தாமரை. நான் குழப்பமாக முடிவுகள் சரிவர எடுக்கத் தடுமாறும்போது 'எந்த முடிவுக்கும் நான் கூட இருப்பேன்ங்க. கவலைப்படாமல் செய்யுங்க'ன்னு தைரியத்தை கொடுப்பா. அப்படித்தான் ஒருநா காலையில உங்க பாட்டி முன்னாடி நின்னு காலுல விழுங்கன்னு சொல்லி ரெண்டு பேரும் ஆசிர்வாதம் வாங்கினோம். என்னடீன்னு கேட்டதுக்கு பாட்டி பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டு வெட்கத்தோட வாய்க்குள்ளவே ஏதோ சொல்றா.. எனக்கு காதுல விழல. இதுல உங்க பாட்டி வேற இன்னும் நீ சரியான மக்குடா. இன்னும் சின்ன புள்ளையாவே இருன்னு சொல்லி சிரிக்கிறாங்க. எனக்கா டென்சன்.. சொல்லித்தொலைங்களேன்னு கத்திட்டேன். ம்ம்ம்... சின்னப்புள்ளைக்கு புள்ளை பிறக்கப்போகுதுன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. எனக்கு அப்படியே சந்தோஷத்தில் வாயடைச்சுப்போயி நிக்குறேன். அப்போ உங்க அம்மாவை பார்க்கணுமே. கன்னம் எல்லாம் சிவந்து, அட.. அட..! இன்னும் கண்ணுக்குள்ள இருக்கு அந்த முகம்."

"அப்போ அக்கா பிறக்கும் போது சந்தோஷப்பட்டிங்க நான், சின்ன அக்கா பிறக்கும் போது எல்லாம் வருத்தப்பட்டீங்களாப்பா" என்று உள்குத்துக்குள் ஒளித்துவைத்து கேள்வியை கேட்டுட்டேன்.

சட்டுன்னு அப்பாவின் முகம் வாடிப்போச்சு...

"சாரிப்பா சும்மா தான் கேட்டேன்... ஏதோ ஒரு வேகத்துல கேட்டுட்டேன். சாரிப்பா.."

"ச்சே! இதுக்கு எதுக்கும்மா சாரி... எனக்கு எந்த வருத்தமும் இல்லை... எந்த குழந்தையானாலும் சரி. அது என் குழந்தை. என்னோட ரத்தம்ன்னு முடிவுபண்ணியிருந்தேன். அதான் கடைசியாக நீ வந்து இருந்த கொஞ்ச குறையையும் தீர்த்துவச்சுட்டியே.... உண்மையில் உன்னை நினைச்சா பெருமையா இருக்கும்மா. என்னையும், அம்மாவையும் தனியா விடாம உன்னோடவே வச்சுக்கிட்டு ஆதரவா பார்த்துக்கிட்டுயிருக்க பாரு. இதுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய போறேன். எனக்கு தோண்றது எல்லாம் உனக்கு மேலும் எரிச்சல்கள் தராம போய் சேர்ந்துட்டா போதும்."

என் கண் எல்லாம் கண்ணீர். அப்பாவை அப்படியே இறுக்க அணைச்சிக்கிட்டேன்.

அந்த அணைப்பில் ஒருவிதமான ஆதரவு கிடைத்தவுடன் வெகுநாளாய் மனதில் அடைத்திருந்த ஏதே ஒன்று உடைந்து ஓவென அழத்தொடங்கிட்டார் அப்பா. "எதுக்குப்பா அழுவுறீங்க. என்ன ஆச்சுப்பா"ன்னு கேட்டா பதிலே இல்ல. தெரியலன்னு திரும்பவும் ஓன்னு அழுவுறாரு. ரொம்ப நாளைக்குப்புறம் கண்ணீரின் சுவையை சுவைத்திருப்பார் அப்பா.

அந்த கண்ணீரை எல்லாம் கடந்து என் மனசுக்குள் ஒருவித அமைதி ஏற்பட்டுச்சு.. அப்பாவுக்கு ஏதோ ஒருவகையில உதவி செய்ய திருப்தி... மனசு முழுக்க அமைதி ஏற்பட்டுச்சி..இதுக்குப்பேர் தான் மனநிறைவோ!?