Saturday, November 17, 2007

இசையின் ராஜா...இளையராஜா


பண்ணைபுரத்து இசை, வெள்ளிக்கிழமை மாலையில் இசை கச்சேரி நடத்த ஷார்ஜா வந்திருந்தது., 87 இசை கலைஞர்கள், SPB, சித்ரா, மனோ, ஸ்ரேயா கோஷல், சாதனாசர்கம், மஞ்சரி, மது பாலகிருஷ்ணன், விஜய் ஜேசுதாஸ், திப்பு, பவதாரணின்னு அருமையான பின்னனி பாடகர்களுடன் அழகான பாடல்களை கூடவே கொண்டு வந்திருந்தது.

இந்த இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க குஷ்பு, ஜெயராமும் வந்திருந்தார்கள் (கொஞ்சம் ஓவராகவே தொகுத்து அருத்துட்டாங்க)

ஜனனி ஜனனி என்று தன் வழக்கமான பாடலுடன் இசை நிகழ்ச்சியை தொடங்கினார் இசைஞானி. "எனக்கு நீங்க தரும் பரிசு அமைதியாக இருந்து இந்த நிகழ்ச்சியை ரசிக்க போறிங்க அது தான் நீங்கள் எனக்கு தரும் பரிசுன்னு" எடுத்தவுடனே அன்பு கட்டளை போட்டுட்டார். சொர்கமே என்றாலும் என்ற பாடலில் உள்ள வரிகளை மாற்றி அதற்க்கு பதிலாக கோகினூறு வைரம், அம்மா கையால சாப்பாடு, சாப்டுவேர் இன்ஜீனியர்கள், கோவில் மணி யோசை, பூக்கள்ன்னு இந்தியாவின் பெருமைகளை எல்லாம் சேர்த்து பாடி அந்த அரங்கத்தையே உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். இந்த பாடலை பாடி முடிச்சிட்டு உங்களுக்கு கொடுக்குறதுக்கு ஏன்க்கிட்ட என்ன இருக்கு இந்த பாட்டை தவிரன்னு ஒரு போடு போட்டாரு பாருங்க கைத்தட்டலில் அரங்கமே குலுங்குச்சி.

சீனியர்ஸ் ஜீனியஸ் தான்னு பாலு சாரும், சித்ரா, மனோ அவர்களும் எந்த சேதாரமும் இல்லாமல் அருமையாக பாடினார்கள். ராஜபார்வை படத்துக்கு முதல் டியூன் அந்தி மழை பொழிகிறதுன்னு போட்டாராம் ராஜா. ஆனால் அதில் திருப்தி இல்லாமல் கமலும், இயக்குனரும் இன்னும் வேற மாதிரி டியூன் வேண்டும் என்று சொல்ல மொத்தம் 30 டியூன் போட்டாராம். கடைசியில எல்லா டியூனையும் கேட்டுட்டு முதலில் போட்ட டியூனே ஓகேன்னு சொல்ல அது தான் அந்தி மழை பொழிகிறது என்ற பாடலாக வந்தது என்று பாலு சொன்னார். ஆனால் அந்த 30 டியூனில் ராஜாவுக்கு பிடித்த டியூன் வேறான்று அந்த டியூன் வேறொரு படத்தில் உபயோகப்படுத்தி அதற்க்கு பாலு சாருக்கும் தேசிய விருது வாங்கி கொடுத்தது.

சில பாடல்கள் டியூன் போடும் போது அதில் மற்றொரு பாடலின் ஈர்ப்பு இருக்கும் அந்த மாதிரி திரு. பர்மன் அவர்கள் இசை அமைத்த பாடலின் ஈர்ப்பினால் வந்த பாடல் தான் இஞ்சி இடுப்பழகி என்ற பாடல் அந்த இந்தி பாடலையும் இஞ்சி இடுப்பழகி பாடலையும் பாலு அவர்கள் அழகாக பாடி காண்பித்தார். மவுனராகம் படத்தில் வரும் மன்றம் வந்த தென்றலுக்கு என்ற பாடல் இந்தியில் ஸ்ரேயா கோஷலும் தமிழில் பாலு அவர்களும் பாடினார்கள். இந்த பாடல் பாடும் போது இடையில் ஒலியில் பிரச்சனை வர டக் என்று நிறுத்தி விட்டு அந்த பிரச்சனையை சரி செய்த பிறகே அந்த பாடல் மொத்தமாக பாடினார்கள். இது போல் மற்றொரு பாடலிலும் இசை குழுவினர் சரியாக இசை அமைக்காத தால் அந்த இடத்திலேயே அதை சரி செய்து மீண்டும் பாடினார்கள்.





திடிரென்னு மேடையில் தோன்றிய கார்த்திக் ராஜாவும், யுவன்சங்கர் ராஜாவும் ராஜாவை கலாய்சி (கொஞ்சம் ஒவராகவே) எடுத்துட்டாங்க. யுவன் "என் பாட்டை பாடுங்கன்னு" சொல்ல ராஜாவும் உடனே அறியாத வயசு புரியாத மனசுன்னு பாடி முடிக்க. "இது இல்ல என் பாட்டுன்னு சொல்ல..நம்ம பாட்டு பாடுங்கன்னு சொல்ல டேய் இப்ப எதுக்கு இங்க வந்து நீ கலாட்டா பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு" ராஜா கிண்டலுக்கு சொல்ல "இல்ல நீங்க பாடினால் தான் நாங்க போவோம்ன்னு" யுவனும், கார்த்திக்கும் அடம் பிடிக்க அப்படி என்ன பாட்டுய்யா பாட சொல்றான்னு நமக்கும் ஆர்வத்தை கிண்டி விட கடைசியாக மூன்று ராஜாக்களும் சேர்ந்து ராஜா ராஜாதி ராஜனிந்த இந்த ராஜான்னு பாட ரசிகர்களின் மனதில் மூன்று ராஜாக்களும் ராஜியம் செய்தார்கள். அதில் வரிகள் மாற்றி இந்த காலத்துக்கு பாப், ராக், ஜாஸ் தான் பிடிக்கும்ன்னு யுவன் சொல்ல வேண்டா சாமி அதெல்லாம் எனக்கு வராதுன்னு ராஜா ஒரே கும்புடு போட மொத்தத்தில் மூன்று ராஜாக்களும் கலக்கிட்டாங்க.

வந்திருந்த சேட்டன்களுக்கும், சேச்சிகளுக்கும் ரெண்டு மலையாள பாடல்கள் பாடினார்கள்.

பாலு சாரிடம் குஷ்பு ஒரு பாடல் கேட்க நான் அந்த பாட்டு பாடினால் "நீ ஆடவேண்டும் என்று சொல்ல அய்யோ இங்கையா ராஜா சார் அடி பின்னிடுவாருன்னு சொல்ல உடனே பாலு சார் ராஜாவை பார்த்து நீ பார்த்துட்டும் பார்க்காத மாதிரி இருந்திடுன்னு சொல்ல". அந்த பாடல் பாடிக்கொண்டுயிருக்கும் போது குஷ்பு, மனோ, ஜெயாராம் மூன்று பேரும் குத்து குத்துன்னு குத்த. ராஜா பார்க்கும் போது நல்லபிள்ளைகளை போல நடிக்க மொத்தமாக அரங்கத்தையே ஆட வைத்தார்கள். அந்த பாடல் அடியே அத்தா அத்தோரமா வாரியா.



வழக்கமாக பாலு சார் ராஜாவை புகழ்ந்து சொல்லிட்டு போக வழக்கமாக ராஜா சார் அதெல்லாம் இல்லன்னு சொல்ல "இல்ல அதெல்லாம் உண்மை தான்னு மேடைக்கு பின்னாடி இருந்து பாலு சார் குரல் கொடுக்க". நீ இங்க வா முதல்லன்னு தன் அருகில் நிற்க வைத்து 24 மணிநேரமும் இசையாகவே வாழ்ந்த உலகத்தில் இசை மேதைகளில் பெயர்களை எல்லாம் சொல்லி இவர்களின் முன்னால் நான் எல்லாம் தூசுன்னு ராஜா சொல்ல. "அந்த மேதைகளின் வரிசையில் இந்த தூசுக்கு தான் உட்காரும் தகுதியிருக்கிறதுன்னு ஒரே போடக போட்டார் பாலு சார்."

ஜெயராம் அவர்கள் கமல், ரஜினி, ஜோசுதாஸ் போல மிமிக்கிரி செய்து காண்பித்து மக்களை கலகலப்பாக்கி கொண்டுயிருந்தார்.

மனோவும், சித்ரா அவர்களும் மதுரை மரிக்கொழுந்து வாசம்ன்னு பாடல் பாட அந்த காட்சிகளை நினைவுக்கு கொண்டு வர வைத்தனர். ஓ பிரியா பிரியா என்ற பாடலை கேட்கும் போது இன்றைய இசை அமைப்பாளர்கள் மனோவின் குரலை தவரவிட்டுவிட்டார்கள் என்ற ஒரு ஏக்கம் வர வழைத்தது.

எந்த கேள்விக்கும் சரி எந்த மேடையிலும் சரி புன்னகையை பதிலாக அளித்து பல நெஞ்சகளை கொள்ளை அடித்த சின்னகுயில் சித்ரா அவர்கள் இந்த மேடையிலும் ரசிகர்ளின் நெஞ்சத்தை கொள்ளை அடித்தார்.

சங்கீத ஜாதி முல்லை பாடல் பாடும் போது எப்படிப்பா இந்த ஆளு இவ்வளவு வருஷம் கழிச்சும் அதே மாதிரி, ஏற்ற இறக்கத்துடன் பாடுறாருன்னு அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்தார் பாலு சார்.

பவதாரணி, ஸ்ரேயா கோஷல், திப்பு, மஞ்சரி இவர்கள் எல்லாம் இன்னும் பயிற்சி தேவை என்று சொல்ல வைத்தார்கள். நடுவில் நடுவில் இசையோடு பாடாமல் பாடல் வரிகளை மறந்து மறந்து முழித்தார்கள். அதிலும் திப்பு செய்த தப்பை ராஜா மீண்டும் திருத்தி எந்த இடத்தில் தவறு நடந்ததோ அதே இடத்தில் இருந்து மீண்டும் அவரை பாட வைத்தார்.

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்த தேனோ என்ற பாடலை பாடும் போது தந்தைக்கு மகன் தப்பாம பிறந்திருக்கான்யான்னு சொல்ல வைத்தார் விஜய் ஜேசுதாஸ்.

ராசாத்தி உன்னை காணதா நெஞ்சுன்னு பாடலை ஜெயசந்திரன் இல்லாத குறையை மது பாலகிருஷ்ணன் அழகாக நிறைவேற்றினார்.

அம்மாக்கள் பாட நிறைய தாலாட்டு போட்டு வச்சுட்டாரு ராஜா, அப்பாக்கள் பாட ஒரு சில தாலாட்டு தான் போட்டுயிருக்காரு அதுல ஒன்னு தான் தெண்பாண்டி சீமையிலே அந்த பாடலை ராஜா எந்த வித வாத்திய ஒலியும் இல்லமால் மிக அற்புதமாக பாடினார். அவரே விரும்பி பாடினாரா இல்ல குளிரில் நடுங்கும் தன் ரசிகர்களை தாலாட்ட நினைத்து பாடினாரோ என்பது அந்த கடவுளுக்கு தான் தெரியும்.

இசைக்குழவினர் அனைவரும் மிக அற்புதமாக வாசித்தார்கள். ஒரு சில இடங்களில் தவறு நடந்தது இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனால் மேடையில் இசை அமைப்பது என்பது அவ்வளவு சாதாரண காரியம் இல்லை. அதிலும் தவறு நடந்த இடத்தில் நிறுத்தி மீண்டும் அதே இடத்தில் இருந்து வாசிக்க சொல்லும் போது எந்தவித பிசக்கும் இல்லாமல் மிக சரியாக வாசித்தார்கள். புல்லாங்குழல் இசைகலைஞர் அருள்மொழி மிக அற்புதமாக வாசித்தார். (அவரு பேரு மட்டும் தாங்க தெரியும் அதான்)



இவரு தான் அருள்மொழி



நிகழ்ச்சி முடியும் நிலையில் பெரும் பாலான மக்கள் அரங்கத்தில் இருந்தனர். ஜெயராம் ஒன்னு சொன்னாரு நானும் இதே ஷார்ஜா அரங்கத்தில் பல நிகழ்ச்சிகளில் வந்திருக்கேன் 10 மணி மேல அந்த கடைசியில யாரும் இருக்க மாட்டாங்க சார். இப்போ மணி 11 ஆகுது இன்னும் இவ்வளவு பேரு இருக்காங்கன்னா அதுக்கு ஒரே காரணம் நீங்க தான் சார். உண்மையிலும் உண்மை அது இளையராஜா என்ற ஒரு பெயருக்கு உள்ள சக்தியை நிறுப்பித்து கண்பித்தது கூட்டம்.

நிகழ்ச்சியல் இடம் பெற்ற பாடல்கள்

இது சங்கீதா திரு நாளே - பவதாரணி - இதில் பாடல் வரிகள் மாற்றி பாடினார்கள்

இளைய நிலா பொழிகிறதே - பாலு சார்

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் - சித்ரா

மயில் போல பொண்ணு ஒன்னு - பவதாரணி

காற்றில் எந்தன் கீதம் - ஸ்ரேயா கோஷல் (ஜானகி அம்மா குரலில் கேட்ட பாடல் இந்த அம்மணி எந்த சேதாரமும் இல்லாமல் பாடினார்)

பாட்டு சொல்லி பாட சொல்லி - சாதனாசர்கம்

சென்பகமே சென்பகமே - மனோ

நான் தேடும் செவந்தி பூவிது - ராஜா, மஞ்சரி

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு - பாலு சார் - சித்ரா

மாசி மாசம் ஆளான பொண்ணு - விஜய் ஜேசுதாஸ், மது பாலகிருஷ்ணன், மஞ்சரி

இளங் காத்து வீசுதே - திப்பு, ஸ்ரேயா கோஷ்ல்

நின்னு கோரி வரனும் - சித்ரா

சொர்கமே என்றாலும் - ராஜா, சதனாசர்கம் - இதில் வரிகள் மாற்றி பாடினார்கள் அட்டகாசமாக இருந்துச்சி

அந்தி மழை பொழிகிறது - பாலு சார், சித்ரா

என்ன சொல்லி பாடுவதோ - சதனாசர்கம் - செந்தில் (இசை குழுவில் ஒருவர்)

மதுர மரிக்கொழுந்து வாசம் - மனோ - சித்ரா

மன்றம் வந்த தென்றலுக்கு - பாலு சார் - ஸ்ரேயா கோஷ்ல்

அடி ஆத்தாடி - ராஜா - சித்ரா

சுந்தரி கண்ணால் ஒரு சோதி - பாலு சார், சித்ரா (இசை குழுவினார் அட்டகாசமாக வாசித்த பாடல் இது)

மாங்குயிலே பூங்குயிலே - பாலு சார், சித்ரா

ஆகாய வெண்ணிலாவே - விஜய் ஜேசுதாஸ், மஞ்சரி

ஒ பிரியா பிரியா - மனோ, சித்ரா

அடி ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா - பாலு சார்

தென்றல் வந்து தீண்டும் போது - ராஜா, சித்ரா

சங்கீத ஜாதி முல்லை - பாலு சார்

அறியாத வயசு - ராஜா

ஒ இந்த காதல் நெஞ்சசை சுடுக்கிறதே - யுவன்

ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா - ராஜா, கார்த்திக், யுவன் - வரிகள் மாற்றி பாடிய பாடல்

தெண்பாண்டி சீமையிலே - ராஜா

எந்து பரஞ்சாலும் நீ எந்தன் - சித்ரா - மலையாளம்

ஒரு சிரிகண்டால் மொழிகண்டால் அது மதி - விஜய் ஜேசுதாஸ், மஞ்சரி - மலையாளம்

ராக்கம்மா கையை தட்டு - பாலு சார் - இந்த பாடல் ஏன்தான் மேடையில் பாடினார்களோன்னு இருந்துச்சி ஒரே அருதல் பாலு சார் குரல்

சில பாடல்கள் மறந்து போயிடுச்சிங்க மக்களே

எல்லாம் முடிஞ்சி ஒரு பெரிய நன்றியை சொல்லிட்டு கிளம்பும் போது நேரம் 12.30. நல்ல குளிர், மனசு நிறைஞ்சி இருந்தது, ரொம்ப நாளா வேண்டிக்கிட்டு இருந்த ஒரு வேண்டுதல் நிறைவேறி விட்ட ஒரு திருப்தி.



மேலும் இந்த நிகழ்ச்சியை பற்றிய பதிவுகள்

பினாத்தல்கள் - எப்பவும் நீ ராஜா

குசும்பன் - அமீரகத்தில் இளையராஜா

Tuesday, November 13, 2007

அபி அப்பாவிற்க்கு பொறந்தநாளு....










இனி யாரைப்பற்றி எப்படி என்ன எழுதுவது என்ற யோசனையில் அபி அப்பா தன் லேப்டாப்பை திறந்து வைத்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருந்தார்.


"அபி பாப்பாவுல ஆரம்பிச்சு தமிழ்மணத்துல தெரிஞ்சவங்க, தெரியாதவங்க அத்தனை பேர பத்தியும் மொக்க போட்டாச்சு.. அதுவுமில்லாம தங்கியிருக்கற இடத்துல இருந்த பூங்காவுலேந்து தமிழ்மணம் பாக்காத அனானி வழியா ஆல் இன் ஆல் அழகுராஜா வரைக்கும் புராணம் கொடுத்தாச்சு. இன்னிக்கு பேசாம ரூம்ல தங்கியிருக்கற மூட்டப்பூச்சிய பத்தி எழுதிட வேண்டியதுதான்."


என்று தனக்குத்தானே பேசியபடியே மெத்தையின் மேல் ஓட முயன்ற மூட்டைப்பூச்சியை நசுக்கி கொன்றுவிட்டு இதுக்கும் சேர்த்து பதிவுல மன்னிப்பு கேட்டுக்கலாம் என்று சுய சமாதானம் சொல்லிக்கொண்டார்.இந்த சமயத்தில் முகமூடி அணிந்த இரு உருவங்கள் அபி அப்பாவை தூக்கிச்செல்ல, "கொலை... கொலை என்று கதற ஆரம்பித்தார்.

முகமூடி அணிந்த ஒரு உருவம், "இந்த சமயத்துல தமிழ்ல இப்படி கத்தறது தப்பு. இதுக்கு நீங்க 'அய்யோ கடத்துறாங்க' அப்படின்னு கத்தலாம். இல்ல தூக்கிட்டு போறானுங்களேன்னு கத்தலாம். அதுவுமில்லேன்னா யாருக்கும் தெரியாம உங்களை தூக்கிட்டு போறதால இதை திருட்டுன்னு கூட சொல்லலாம். மனித திருட்டைப்பத்தி போஸ்னோலோவேக்கியா டைரக்டர் எடுத்த அந்த இருட்டு படத்துல இப்படி கூட நடந்தது. அப்ப அவன் என்ன சொல்லியிருப்பான்னு நான் இப்ப உணர்றேன். அன்னைக்கு எனக்கு அது உளறலா தெரிஞ்சதுக்கு காரணம் கண்டிப்பா மது மட்டும் இல்லைன்னு நான் சொல்றத கேட்டு எத்தன பேரு என்னை கெட்டவன்னு நினைப்பாங்கன்னு தெரியல... இருந்தாலும்...."

அபி அப்பா - "பேசறது சுத்தமா புரியல... அப்போ இது அய்யனார்தான்."

மற்றொரு உருவம், "ஹைய்யா...! அபி அப்பா உன்னை கண்டுபிடிச்சுட்டாரு... நீ அவுட்டு"

அபி அப்பா அதிர்ச்சியாகி, "அட ஆண்டவா! இது குசும்பனாச்சே... என்ன கொடும சரவணன் இது" அதற்குள் இடம் வந்துவிட, அபி அப்பாவை இறக்குகின்றனர் அய்யனாரும், குசும்பனும்.
அபி அப்பா அந்த இடத்தை ஏறிட்டு பார்க்க தலை சுற்றுவது போல் தோன்றுகிறது. இவருக்காக ஏற்கனவே அங்கு தருமி சார், தம்பி, கோபி, சென்ஷி, மின்னல், குட்டி பிசாசு, கண்மணி டீச்சர், டாக்டர் டெல்பின், மங்கை, மை பிரண்டு, காயத்ரி மற்றும் இம்சை அரசி...

அபி அப்பா - "அப்பா.... இப்பவே கண்ண கட்டுதே.."

குசும்பன் - "இல்லியே... உங்க கண்ண தொறந்து வச்சுதானே கொண்டு வந்தோம். இன்ஃபாக்ட் நாங்க முகமூடி போட்டுக்கிட்டு வந்ததால எனக்குத்தான் இப்ப லைட்டப் பாத்தா லைட்டா கண்ணு வலிக்குது"

கண்மணி டீச்சர் பெருமிதமாக, "சபாஷ் அய்யனார் & குசும்பா.... சொன்னா மாதிரியே கரெக்டா கூட்டிக்கிட்டு வந்துட்டீங்க"

அபி அப்பா, "கூட்டிக்கிட்டு வரல டீச்சர். தூக்கிக்கிட்டு வந்துட்டாங்க" மனதிற்குள், 'எல்லோரும் தனித்தனியா வந்தாலே நம்மளை போட்டு வாங்குவாங்க. இத்தன பேரும் இங்க ஒண்ணா சேர்ந்திருக்காங்க. அதுலயும் நம்மள தூக்கிட்டு வந்து... ம்ஹூம்.... இது கண்டிப்பா நம்ம நல்லதுக்கா தெரியல". அதற்குள் கண்மணி அக்கா வாழ்க என்று மைபிரண்டு கோஷம் எழுப்ப துவங்க, இந்த சமயத்தில் இதற்கு சேர்ந்து கோஷம் போடுவதா வேண்டாமா என்று இம்சை அரசியும், காயத்ரியும் குழம்பினர்.

இந்த கோஷம் கேட்டு சென்ஷி, கோபியிடமும் மின்னலிடமும் மங்கை அக்கா வாழ்க என்று கோஷம் போட சொல்லி பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தான்.

இந்த வம்பளப்பை கண்ட டெல்பின் மேடம், "நாம இங்க வந்திருக்கறது வாழ்க கோஷம் போட இல்ல. நமக்கு இப்ப அத விட முக்கியமான வேலையெல்லாம் இருக்கு. தம்பி நான் உன்கிட்ட சொன்ன விஷயம் என்னாச்சு?"

தம்பி - "பாவனா படம் போட்ட டிசர்ட் ரெடி செய்ய சொல்லியிருந்தேன். அது இது வரைக்கும் என் கையில் வந்து சேரல. ரோட்டுல ஒட்டி வச்சிருந்த ஷ்ரேயா போஸ்டர 18 பேரு நின்னு உத்துப்பாத்துட்டு போனாங்க."

டெல்பின் - "தம்பி..!"

தம்பி - "இதனாலதான்... இதனாலதான்.. பாவனா என் முன்னாடி வந்து என்னை தம்பின்னு கூப்பிட்டா என் நிலைமை என்ன ஆகுறது... அதனால நான் இன்னிலேந்து மச்சான்னு பேர மாத்திக்கப்போறேன். நீங்க சொன்ன வேலையையும் செஞ்சுட்டேன்."

டெல்பின் - "அத மட்டும் தனியா சொல்ல மாட்டியா...!? கூட பாவனாவ வேற இழுத்துக்கறே"

குட்டி பிசாசு - "ஆஹா! மச்சான் கதிர்... மச்சான் கதிர்... சும்மா பேர சொன்னாலே கிக்கு ஏறுதுல்ல.."

மங்கை - "என்னோட அடுத்த படத்துல பாவனா ஹீரோயினா நடிச்சா கதிர்தான் ஹீரோன்னு நான் முடிவு பண்ணிட்டேன்"

அபி அப்பா இந்த மேட்டரை அவசரமாக நோட்ஸ் எடுத்துக்கொண்டிருக்க, குறுக்கே புகுந்த கண்மணி அக்கா, "என்ன இப்படி எல்லோரும் விளையாட்டு புள்ளையாவே இருக்கீங்க. அடுத்து ஆக வேண்டிய வேலைய பாருங்க.. ம்.. கோபி என்னப்பா நீயும் இப்படியே நிக்குற!?"

கோபி சற்று விழித்துவிட்டு, "ஸாரி டீச்சர்" என்று சொல்லி சடாரென்று அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

கண்மணி - "ஏம்ப்பா என்னை இப்படி கஷ்டப்படுத்துறீங்க.. உங்க அலும்பு தாங்க முடியலையே"

கலங்கிய கண்களுடன் அருகில் வரும் இம்சை அரசியைப்பார்த்து, "எனக்கு உன்னைப் பார்த்தா ரொம்ப பெருமையா இருக்கும்மா. என் மனசு கஷ்டப்படுதுன்னு நீ கண்கலங்குறே பார்த்தியா.. அதான் உன்கிட்ட எனக்கு புடிச்ச விஷயம்"

இம்சை அரசி - "இல்ல டீச்சர், காயத்ரி விரலால என் கண்ண குத்திட்டா..!"

பேச்சினிடையே புகுந்த மின்னல், "நடுவிரல், கட்ட விரல், சுண்டு விரல், மோதிர விரல், ஆள்காட்டி விரல் தெரியும்.. அது என்ன புதுசா காயத்ரி விரல்?"
டெல்பின், மங்கை, கண்மணி மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி,

டெல்பின் - "இவங்களை அடக்கணும்னா அது ஒரே ஒரு ஆளால மட்டும்தான் முடியும்"

மங்கை - "இந்த சீன் நிறைய படத்துல வந்திருக்கே... இத மறுபடி வச்சா நல்லாருக்காது.. இப்பவெல்லாம் இந்த மாதிரி சீனுக்கு வடிவேலுவும், விவேக்கும்தான் எண்ட்ரி ஆகுறாங்க. வேற ஏதாவது சீன் இருந்தா சொல்லுங்க"

கண்மணி - "எனக்கு புரிஞ்சிடுச்சு.. அதாவது நான் புரிந்து கொண்டேன்" என்றபடி சற்றுத்தள்ளி நடக்கும் களேபரங்களில் ஈடுபடாமல் தன் செல்போனில் விடாமல் பேசியபடி இருந்த முத்துலட்சுமியின் கையில் போனை பிடுங்கி விட்டு மைக்கை கொடுத்து அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏற்றிவிட்டார். போனில் பேசிக்கொண்டிருந்த ஞாபகத்தில் முத்துலட்சுமி மைக் முன், "சரி... நான் அப்புறமா பேசறேன்.. பை" என்று சொல்ல கூட்டத்தில் பயங்கர கைதட்டல் தொடங்கியது.

சென்ஷி சத்தமாக - "இரண்டு விநாடிகளில் மேடைப்பேச்சை முடித்து புதிய சாதனை படைத்தார் - எங்கள் அக்கா முத்துலட்சுமி"

கண்மணி மனதிற்குள், "இதுக்கு நானே தேவல போல..."

கண்மணி அக்கா மேடை ஏறி முத்துலட்சுமியின் காதில் ரகசியமாய் கூற, சட்டென பிரகாசமானது முத்துலட்சுமியின் முகம், "எனவே இங்கு சேர்ந்திருக்கும் பாசக்கார குடும்பத்தினருக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். நமது பாசக்கார குடும்பத்தின் மூத்த உறுப்பினரும், தன் பாச மகளின் பெயரால் பதிவெழுதுபவரும், அடுத்த மகனின் பெயரில் புதுப்பதிவு ஆரம்பிக்க நினைப்பவரும், நகைச்சுவையை அளவில்லாமல் கொடுத்துவிட்டு இப்போது மொக்கை போடுபவரும், யார் மேலும் கோபம் கொள்ளாதவரும், யாராவது திட்டினாலும் ரமண மொழியை மனதில் கொண்டு அதை பணிவோடு ஏற்றுக் கொள்பவரும், தீபா வெங்கட் பெயரை அடிக்கடி ஜொள்ளுபவரும், சிறந்த மனிதரும், இந்தியக் குடிமகனும், தமிழனும், மாயவரத்துக்காரருமாகிய நமது அபி அப்பா சுமார் 40 வருடங்களுக்கு முன் இதே தினத்தில்தான் பிறந்தார் என்பது நாம் மகிழ்ச்சி கொள்ள வேண்டிய செய்தி.. அவருக்கு இன்றைய தினம் பிறந்தநாள் வாழ்த்துக்களை அவரது செல்ல மகள், அன்பு மகன் மற்றும் அவரது தங்கம்மாவோடு பாசக்கார குடும்பத்து உறுப்பினர்களாகிய நாமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மேலும் இன்று அவரது பிறந்த நாள் என்பதால் அவர் மீது யாரும் கோபம் இருந்தாலும், கோபத்தை இன்று மட்டும் யாரும் அவரிடம் காட்ட வேண்டாம் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கின்றேன். அவர் உயரத்திற்கு கேக்கை வாங்கினால் அதை வெட்ட அவர் மிகவும் சிரமப்படுவார் என்று தோன்றியதால் அவர் கத்தியால் வெட்ட முடிந்த கேக்கை மட்டும் வாங்கி வைத்துள்ளோம். சிரமப்படாது கேக்கை வெட்டி அனைவருக்கும் பங்கு போட்டு கொடுக்க வருமாறு அபி அப்பாவை அன்போடு வரவேற்கிறோம்"

கோபி - " இந்தாங்க்கா சோடா"

அபி அப்பா கண்கலங்கி மேடையேறி கண்மணி டீச்சர் அருகில் வர, "உங்களுக்கு என்னாச்சுங்க.. உங்க கண்ணையும் யாராச்சும் குத்திட்டாங்களா?"

டெல்பின் - "சேச்சே... இதுக்கு பேரு ஆனந்த கண்ணீரும்மா"

மங்கை - "ஓ அப்படியா..! அதெல்லாம் இருக்கட்டும். முதல்ல கேக்க கட் பண்ணுங்க"

அபி அப்பா - "என்னங்க இதுல இவ்வளவு மெழுகுவர்த்தி ஏத்தி வச்சிருக்கீங்க... எனக்கு அத்தனை வயசாகலை"

மங்கை - "உங்க பர்த்டேக்காக குடும்பத்துல எல்லோரையும் தனித்தனியா கிப்ட் வாங்கிட்டு வர சொன்னா சேந்தாப்புல எல்லோரும் கேக்குல வைக்க மெழுகுவர்த்தி பாக்கெட் வாங்கிட்டு வந்துட்டாங்க. யாரு மனசும் கஷ்டப்படக்கூடாதுன்னு அப்படியே எல்லாத்தையும் வச்சிட்டோம். நீங்க எல்லாத்தையும் பத்த வச்சு, ஊதி அணைச்சுட்டு கேக்க வெட்டுங்க போதும்"

இது ஆகற விஷயமில்லை என்ற முடிவுக்கு வரும் அபி அப்பா, "மங்கை அக்கா.... செண்ட்டிமெண்ட்டா பார்த்தா எரியற விளக்க அணைச்சிட்டு பர்த்டே கொண்டாடனா அது அவ்ளோ நல்லதா படல. அதனால நம்ம குடும்பத்துல எல்லோரும் எனக்காக ஆசையா வாங்கிட்டு வந்தத நான் பத்திரமா எரிக்காம வச்சுக்கறேன்"

அய்யனார் - "என்ன வேணாலும் செய்ங்க.. முதல்ல கேக்க வெட்டுங்க"
அபி அப்பா கேக்கை வெட்ட துவங்க, கோரஸாய் குடும்பத்தினரின் குரல்.......



"அபி அப்பாவுக்கு பொறந்த நாள்..

அபி அப்பாவுக்கு பொறந்த நாள்..

நவம்பர் 13ந்தேதி இன்னைக்கு..

அபி அப்பாவுக்கு பொறந்த நாள்...."




சிறப்பு துளிகள்:

விழாவில் அபி அப்பாவை வாழ்த்தி மற்றவர் உதித்த வார்த்தை முத்துக்கள்

டாக்டர் டெல்பின்:- என்னைக்கும் நல்லாயிருக்கணும்

இம்சை அரசி:- இன்றைய விழா நாயகன் என்றும் விழா நாயகன்தான்

காயத்ரி:- அண்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நான் அழுகாச்சி கவிதை எழுதப் போவதில்லை

மை ஃபிரண்ட் ; மீ த பர்ஸ்ட்டு பல்லாண்டு வாழ்க ....வாழ்த்துக்கள்

தம்பி:- எங்கள் நண்பரின் பிறந்த நாளை கொண்டாட சிறப்பு விருந்தினராக பாவனாவை வரவழைக்காதது யார் சதின்னு எனக்கு தெரியல

அய்யனார்:- எவ்வளவோ சொல்லணும்னு தோணுது. இப்ப நான் என்ன சொல்றதுன்னு எனக்கே புரியாததால நான் வாழ்த்த மட்டும் சொல்லிக்கறேன் (பயங்கர கைதட்டல்)

மின்னல் ; இங்க ஒர்ஜினலா சொல்லனுமா அனானி எல்லாம் கிடையாதா சரி ஓகே பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி அப்பா

குட்டி பிசாசு ; அண்ணன் பிறந்தநாளை முன்னிட்டு நான் பதிவு எழுத போகிறேன். வாழ்த்துக்கள் அண்ணே

குசும்பன் ; ன்றேகக்லில்சொ ம்டுட்ம தத்ழ்வா லதாதயாரிபு.....

அபி அப்பா ; யோவ் என்னையா சொல்லற திட்டுறது கூட புரியுர மாதிரி திட்டுய்யா...

குசும்பன் ; அய்யனார் சொன்னதை அப்படியே திருப்பி படியுங்கள்

மை ஃபிரண்ட் ; யப்பா சாமி ......பதிவுக்கு தான் எதிர் பதிவுன்னா வாழ்த்துலையுமா ! ! !

கண்மணி:- அவரது பிறந்தநாள் பரிசாக ஒரு புது டெம்ப்ளேட்டை அவருக்கு பரிசாக அளிக்கின்றேன்

கோபி:- //இம்சை அரசி:- இன்றைய விழா நாயகன் என்றும் விழா நாயகன்தான்// ரிப்பீட்டே.. :)

சென்ஷி:- //கோபி:- //இம்சை அரசி:- இன்றைய விழா நாயகன் என்றும் விழா நாயகன்தான்// ரிப்பீட்டே.. :)// டபுள் ரிப்பீட்டே :))))

முத்துலட்சுமி: நிறைய பேசணும்னு நினைக்கிறேன். ஆனா இப்ப பேச ஆரம்பிச்சு அண்ணனோட அடுத்த பிறந்தநாள் வந்துடுச்சுன்னு யாரும் சொல்லிட்டா என்ன செய்யறதுங்கற பயத்துல நான் இப்ப பேச்ச நிறுத்திக்கறேன்

மங்கை:- சென்ஷி, கோபி ரிப்பிட்டே போடுறத இன்னியோட நிறுத்திக்குங்க... அவ்வளவுதான் சொல்வேன்

கோபி & சென்ஷி ; அதுக்கும் ஒரு ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

எழுதி ஆடியது ; கோபி & சென்ஷி

Thursday, November 01, 2007

குளிரும் குழந்தைகளும்...



என்ன மக்களே எல்லாம் எப்படி இருக்கிங்க நல்லா தான் இருப்பிங்க இதுல என்ன சந்தேகம் கை நிறைய ஆணின்னு சொன்னா நம்பவா போறிங்க! எல்லாம் தீபாவளிக்கு ரெடியாகிட்டு இருப்பிங்க. இங்க வெயில் கொஞ்ச கொஞ்சமாக குறைஞ்சி குளிர் பின்னி பெடலேடுக்க ஆரம்பிச்சிடுச்சி போன வாரத்துல நைட்டு வேலை முடிச்சிட்டு இது ஒரு பொன் காலை பொழுதுன்னு பாட்டு பாடிக்கிட்டே வெளிய வந்தா சும்மா நரம்புல ஊசி போடுற மாதிரி
குளிரு, கூட இருந்த மச்சி "டேய் இங்க தானே ஒரு பாலம் இருந்திச்சி எங்கடா அது அதுக்குள்ள தூக்கிட்டானுங்களா. டேய் நல்லா பாரு டா அது அங்க தான் இருக்கு" பாலம் மறைக்கும் அளவுக்கு பனி. குளிருக்கு விரல்கள் இல்லாமலே பல் எல்லாம் டைப் அடிக்க ஆரம்பிச்சிடுச்சி. சரி இந்த இதமான குளிருக்கு டீ குடிச்சிட்டு கிளம்பலாமுன்னு டீயை நானே போட்டு அதை நானே குடிச்சிட்டு (நானே போட்ட டீங்க நல்லாயிருந்திச்சி....வேற வழி)
அந்த குளிர்ந்த சுத்தமான காற்றை மூச்சை நல்லா இழுத்துவிட்டு புல் எனர்ஜீயை ஏத்திக்கிட்டு ரூமுக்கு போவதற்க்கு வண்டியில ஏறி ஜன்னல் சீட்டை பிடிச்சி உட்கார்ந்துட்டு எல்லோரும் வந்ததற்க்கு பிறகு ஸ்டார்ட் த மீயூஸிக்குன்னு வண்டி கிளம்புச்சி.

வண்டி பாலத்து மேல ஏறி யூடன் எடுத்து திரும்பும் போது பக்கத்துல ஒரு வண்டி.
அந்த வண்டிய முழுக்க சந்தோசமும் சிரிப்பும், பெருசா எந்த ஒரு கவலைகள் எதுவும் இல்லாத டாக்டர்ஸ், இன்ஜீனியர்ஸ், வியாபாரிகள் காந்தங்கள், ஒன்னு ரெண்டு நடிகர் நடிகைகள் கூட இருந்தாங்க. என்ன இவுங்க எல்லாம் இந்த நிலைக்கு வருவதற்க்கு இன்னும் 15, 18 வருஷம் ஆகும். அந்த வண்டி முழூக்க குழந்தைகள் ஒன்னு ஒன்னும் என்னமா இருக்குதுங்க அழகு அழகுன்னா அழகு அம்புட்டு அழகு. ஒன்னு ஒன்னும் ஒவ்வொரு அழகு அவுங்களை பார்த்தவுடன் அவுங்க சிரிப்பும் மகிழ்ச்சியும் நமக்கும் தொத்திக்கிச்சி. வண்டியில சேட்டை பண்ணிக்கிட்டே வருறாங்க அவுங்களை பார்த்து ஹாய்ன்னு கை காட்டினால் பதிலுக்கு அவுங்களும் ஹாய்ன்னு கையை காட்றாங்க. இதை எல்லாம் நம்ம மச்சிகளையும் பார்க்க சொல்லமுன்னு நினைச்சி திரும்பி பார்த்த அவனவன் ஜன்னல் முன்னாடி நின்னுக்கிட்டு வித்தை காட்டிக்கிட்டு இருக்கானுங்க அடப்பாவிகளா ஆரம்பிச்சிட்டிங்களா நான் தான் லேட்டான்னு நானும் ஜோதியில ஐக்கியமாகிட்டேன்.

அதுல ஒன்னு காலங்காத்தால எழுப்பி ஏண்டா என்னை இம்சை பண்ணி இந்த மூட்டையும் கொடுத்திங்கன்னு தூங்கிக்கிட்டு வருது அந்நேரம் பார்த்து இன்னொன்னு தொப்புன்னு வந்து அது மேல விழுது அது முடியை இது பிடிக்க இது சட்டையை அது பிடிக்க அட அட என்னமா சண்டை போடுதுங்க! சண்டையிலும் ஒரு அழகு இருக்குன்னா அது இந்த சண்டை தான். இதை பார்த்த மச்சி ஒருத்தன் அந்த முடியை பிடிக்குற பெண்ணு தான் ஜெயிக்குது என்ன பெட்டுன்னு கேட்குறான். ஜன்னல் முன்னாடி நாலு நின்னுக்கிட்டு சிரிச்சிக்கிட்டே வருதுங்க எதுக்கு சிரிக்குதுங்கன்னு எங்க யாருக்கும் தெரியுல. அதுல ஒன்னு வெட்கப்பட்டு சிரிக்கும் போது அப்படியே ஒடிபோயி தூக்கிக்கலாம் போல இருக்கு. இதுல ரெண்டு எங்களை பார்த்து ஏதோ கமெண்டு அடிச்சி வேற சிரிக்குதுங்க என்னாத்த பெருசா சொல்லியிருக்க போவுதுங்க என்ன இவுங்க எல்லாம் லூசா இப்படி நம்மளை பார்த்து சிரிச்சிக்கிட்டே வரானுங்கன்னு சொல்லியிருக்கும். கடைசி சீட்டுல ஒருத்தன் அவன் பாட்டுக்கு பேசிக்கிட்டு வரான் அவன் பேசுறதை எதிரில் உள்ளவன் கேட்குறானா இல்லையான்னு கூட தெரியமா அவன் பாட்டுக்கு பேசிக்கிட்டு வரான்.

அந்த வண்டி தான் அவுங்க உலகம் அங்க யாரும் எதுவும் சொல்ல முடியாது கேட்கவும் முடியாது வாழ்க்கையின் அந்த நிமிஷத்தை அவுங்க இஷ்டம் போல அனுப்பவிச்சிக்கிட்டு வராங்க. அந்த வண்டியை விட்டு இறங்கியதும் இதே போல சந்தோசம் இருக்குமா என்பது கேள்விக்குறி தான். இதை எல்லாம் பார்த்து பொறாமை படுவதா இல்ல இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சி அவுங்களும் இந்த இயந்திர உலகத்துல இயந்திரமாக போறதை நினைச்சி வருத்தப்படுவதான்னு தெரியல. குழந்தைகள் தெய்வங்கள்ன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவுங்க நாள் முழுக்க இயந்திரங்களோடு இயந்திரமாக இருந்திட்டு சில நிமிஷங்கள் எங்களுக்குள் இருத்த கவலைகளை மறக்க செய்து சிரிக்க வச்ச அந்த குழந்தைகள் எல்லாம் உண்மையிலே தெய்வங்கள் தான்.

ஒரு சிக்கனலில் எங்க ஊழியரை இறக்கி விடுவதற்க்காக எங்க வண்டி நின்னுடுச்சி அந்த நேரத்துல குழந்தைகள் வந்த வண்டி எங்களை கடந்து போயிடுச்சி குழந்தைகள் எல்லாம் சிரிச்சிக்கிட்டு டாட்டா காட்டிக்கிட்டு போயிட்டாங்க. "விரும்பாண்டி" படத்துல கமல் ஒரு வசனம் சொல்லுவாரு "சந்தோசத்தை அனுபவிக்கும் போது அது மனுசனுக்கு தெரியறதுல்ல அது இல்லமால் போகுது பாருங்க அப்ப தான் தெரியும்ன்னு" அப்படி தான் இருந்திச்சி அந்த குழந்தைகள் எங்களுக்கு கொடுத்த சந்தோசம்.






கண்டிப்பா நீங்களும் சிரிப்பிங்க


அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்



டிஸ்கி: அபி அப்பா இது நவம்பர் மாதத்து கணக்கு ஆனா நீங்க டிஸ்கி வரைக்கும் படிப்பிங்களான்னு தெரியல