Saturday, June 14, 2008

சிவாஜி வாயில ஜிலேபி - தசாவதாரம் அல்வா

சிவாஜி வாயில ஜிலேபி தொடரை எழுத அண்ணன் நிஜமா நல்லவன் அழைத்திருக்கிறார். சிவாஜி வாயில நான் எப்படி ஜிலேபி வைப்பது.. அதுவும் இல்லமால் எந்த சிவாஜி வாயில ஜிலேபி வைப்பது. அப்படியே அவர்களுக்கு ஜிலேபி பிடிக்குமா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏன் ஜிலேபிதான் வைக்க வேண்டுமா.. இந்த லட்டு பால்கோவா எல்லாம் வைத்தால் என்ன போன்ற கேள்விகள் கேட்க தோன்றுகிறது. இப்படிப்பட்ட கேள்விகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு நடிகர் கமலின் தசாவதாரம் திரைக்கு வரும் தேதி தெரிவிக்கப்பட்டது. கூடவே கமல் அல்வா கொடுத்திடுவாரோ என்ற சந்தேகமும் சேர்ந்து கொண்டது. இந்த ஊரில் எந்த திரைஅரங்கில் படம் வருகிறது என்று எல்லாம் தெரிந்து கொண்டு டிக்கெட் புக் செய்யலாம் என்று இணையத்தை அழைத்தால் சாரி எங்ககிட்ட அந்த வசதி எல்லாம் இல்லை என்று வந்தது. சரி போங்கடா நானே வருகிறேன் என்று திரைஅரங்கிற்க்கு சொன்றேன். எப்படியாவது 48 மணிநேரத்திற்குள் படத்தை பார்த்துவிட வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தேன். ஏன் இந்த அளவுக்கு கொலைவெறி என்பது எல்லாம் வேறு விஷயம். திரைஅரங்கத்திற்கு சென்று அங்கே இருந்த சேட்டனிடம் நேரம் நாள் எல்லாம் சொல்லி கார்ட்டை எடுத்து நீட்டினேன். அவரு சாரி நைனா இங்கே துட்டுதான் இந்த கார்டு எல்லாம் லேதுன்னு என்னை தொர‌த்திட்டாரு. அட இது என்னடா கடைசி நேரத்தில் சோதனை என்று மனதில் நினைத்துக்கொண்டே வெளியில் வந்து அந்த பரந்துவிரிந்த கடைவீதியில் தேடி ஒருவழியாக காசு எடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து காசையும் எடுத்து ஆண்டவா 48 மணிநேரத்திற்குள் டிக்கெட் கிடைக்க வேண்டும் என்னு புலம்பிக்கொண்டே வந்தேன். நல்லவேளை டிக்கெட் கிட்டியது. ஆகா...ஆகா...ஒரே மகிழ்ச்சி தான். அதற்க்குள் தமிழ்மணத்தில் பதிவு வரும். அதை எல்லாம் படிக்கக்கூடாது என்று நினைத்திருந்தேன். ஆனால் தல பினாத்தலார் பதிவை மட்டும் படித்து வைத்தேன்.படத்தை பற்றி நிறைய விமர்சனங்கள் வந்துவிட்டது இனியும் வரும்.
சிறிய வயதில் தீபாவளிக்கு 1 மாதம் முன்னே எந்த பட்டாசு வாங்குவது, கடைசி நேரத்தில் வெடிக்காமல் போனால் எதிரிக்கூட்டத்தில் முன் மானம் போகுமே என்று ஒன்றுக்கு பலமுறை வெயிலில் காயவைத்தும் தீபாவளிநாள் அன்று ஒரு 5000 வாலா வெடிச்சரத்தை நடுத்தெருவில் வைத்து மொத்தக்கூட்டமும் காதை பொத்திக்கொண்டு அய்யோ சரம் வெடிக்கறாங்க என்று 10அடி தூரத்தில் அவர்களை நிற்கவைத்துவிட்டு, தீயை கொளுத்தியவுடன் அந்த சரம் வெடிக்காமல் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று போகாமல் சும்மா சர சரன்னு வெடித்து ஊரையே ஒரு நிமிடம் நம்மைபார்க்க வைக்கும் போது மனிதில் ஏற்படும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அதுபோலத்தான் கலைஞானியின் இந்த தசாவதாரம் படம்.
இத்தனை வருடங்களில் நமக்குள் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்திருக்கிறார்கள். படம் தொடங்கியதும் வெடிக்க ஆரம்பிக்கிறது. முடியும்வரையில் வெடி வெடி தான். இத்தனை வருட உழைப்பு ஒன்றும் ஃபிலிம் காட்டுவதற்கு இல்லை என்பது படத்தை பார்க்கும் போது புரிகிறது.


12ம் நூற்றாண்டில் தொடங்கி அமெரிக்க விஞ்ஞானி வழியாக ஒவ்வொரு கமலாக உள்ளே வருகிறார்கள். ரெட்டியாக வரும் கமல் அவரை பார்த்தவுடனே திரைஅரங்கில் சிரிப்பு சத்தம் கேட்க தொடங்கிவிடுகிறது. 10 கமலுக்கும் ஒவ்வொரு இடத்தில் அவர்களின் திறமை காட்ட வைத்திருக்கிறார்கள். எந்த கமலும் வேஸ்டாகவில்லை என்றே எனக்கு தோன்கிறது. ஆனால் பலபேருக்கு தோன்றும் ஒரே சந்தேகம். எதற்காக அந்த 12ம் நூற்றாண்டு காட்சிகள் என்பது தான். படத்திற்கு எங்கும் சம்பந்தமே இல்லை, ஆனால் அந்த பாடலும், அந்த சண்டை காட்சிகளும் அற்புதமாக இருக்கிறது. தல கே.ஆர்.எஸ் இந்த படத்தை வைத்து பதிவு போட மேட்டர் இல்லாம‌ல் காட்சிகள் கற்பனை கலந்தது என்று முன்னே சொல்லிவிடுகிறார்கள்.குறைகள் இல்லாம‌ல் இல்லை. ஆனால் அந்த கேள்விகள் நம் மனதில் தோன்றியவுடனே இன்னொரு கமலின் அறிமுகம் கிடைத்துவிடுகிறது. அதனால் அந்தக்கேள்வி நம் மனதில் தோன்றிய வேகத்தில் மறைந்துவிடுகிறது. இடைவேளைக்குள் 8 கமல்களை காட்டிவிடுகிறார்கள்.

ஒளிபதிவர் ரவிவர்மனின் உழைப்பை பாராட்ட வேண்டும். ஒவ்வொரு காட்சியை அவர் நமக்கு அறிமுகப்படுத்தும் விதம் மிக அற்புதமாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கிறது. பின்னணி இசைய‌மைத்திருக்கும் தேவி ஸ்ரீபிராத் அவர்களும் நன்றாக உழைத்திருக்கிறார்.கே.எஸ் ரவிகுமார் இந்த படத்தில் என்ன செய்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் கே.எஸ்.ரவிகுமார் இல்லை என்றால் படம் எப்படி இருந்திருக்குமோ என்ற பயம் வருகிறது. கமல் என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் அவர் போகும் பாதை சரியா தப்பா என்பதை சுட்டிக்காட்ட ஒருவர் தேவை. அந்த தேவையை கே.எஸ்.ரவிக்குமார் மிகச்சரியாக பூர்த்தி செய்திருக்கிறார்.

திரைக்கதை அமைத்த‌தில் ஒட்டைகள் இருந்தாலும் அதை எல்லாம் அந்த 10 கமல்களை காண்பித்து வாயடைத்துவிடுகிறார்கள். தனது முந்தைய படங்களின் தோல்வியும், சகா நண்பன் சூப்பர் ஸ்டார் சிவாஜியில் செய்த தவறுகளும் கமலுக்கு நல்ல படமாக இருந்திருக்க வேண்டும். மொத்தில் தசாவதாரம் ஆளவந்தான் போல் இல்லை. தைரியமாக திரைக்கு சென்று காண வேண்டிய படம். நம்மவர் எடுத்திருக்கும் படம். அதில் நம்மவரின் உழைப்பை நாம் கண்டிப்பாக பாராட்ட வேண்டிய படம்.

ஆமா அதுக்கு எதுக்கு தசாவதாரம் அல்வான்னு தலைப்பு வச்சிருக்கான்னு கேட்குறிங்களா...அல்வாவும் ஒரு இனிப்பு தானே....எப்படி நம்ம அல்வா.