Tuesday, September 18, 2007

நாங்களும் ஓட்டுவோம்ல....
இது கொசுவத்தி பதிவு மக்கா...

நம்ம சின்ன அம்மிணி அக்கா சமீபத்தில் சைக்கிள் ஓட்டியதை பத்தி பதிவா போட்டுயிருந்தாங்க, அதை படிச்சதும் நான் சைக்கிள் ஒட்டியது ஞாபகத்துல வந்துடுச்சி.
(சந்தோஷமான விஷயங்களை எல்லாம் இப்படி யாராவது ஞாபகப்படுத்தனாதான் உண்டு)

கொசுவத்தியை அப்படியே சுத்திக்கிட்டு போனா ஒரம்போ ஒரம்போ ருக்குமணி வண்டிவருதுன்னு நம்ம கார்த்திக் டவுசர் போட்டுக்கிட்டு பாட்டு பாடுவரே அதே மாதிரி நானும் டவுசர் போட்ட காலத்துல போயி நிறுத்துறேன்.

"புள்ளையா இது..."

"சனியனே..."

"கிரவுண்டுல போயி ஓட்ட வேண்டியது தானே..."

"இதுங்களுக்கு லீவு விட்டதும் விட்டாங்க நம்ம காலை ஒடிக்குதுங்க..."

ச்ச நிறுத்துன இடம் சரியில்லைங்க சைக்கிள் ஓட்ட பழக்கும் போது வாங்கிய திட்டுக்கள் தான் முதல்ல ஞாபகத்துக்கு வருது (இதெல்லாம் என்ன பெருமையா கடமை டவுசர் போட்ட காலத்துல ஓட்ட கத்துக்கிட்ட ஒவ்வொருத்தரோட கடமை) கிட்ட தட்ட எல்லோரும் இந்த மாதிரி திட்டு வாங்கியிருப்பிங்க.

எனக்கு முதல் போணி அப்பா தான். மனுசன் வேலையை முடிச்சிட்டு எப்படா படுப்போம்ன்னு வருவாறு அவரு வந்தவுடனே சைக்கிளை உள்ளே கொண்டுவரதுக்கு முன்னாடி போய்

"அப்பா....அப்பா வண்டியோட்ட கத்துக் கொடுப்பா"

"ம்க்கும் துரைக்கு இது மட்டும் தான் கொரைச்சல் புக்கை எடுத்து படிடான்னா படிக்காதே இதுக்கு மட்டும் தூங்காம முழிச்சிருந்து வந்துடுவியே"....இப்படி எல்லாம் வாயை துறந்து ஒரு நாளும் சொன்னது இல்ல.


"சரி வா ஆரம்பிப்போம்"ன்னு சைக்கிள் மேல ஏத்திவிடுவாரு.

"ப்பா நல்லா பிடிச்சிக்கப்பா.."

"சரிடா....முதல்ல மிதி"

வலது கால்ல ஒரே மிதிதான் இடது கால் முட்டியில சைக்கிள் பெடலலா ஓங்கி ஒரு அடி அப்படியே பொத்துன்னு விழுந்து சில்லரையை அள்ள வேண்டியது தான். பெத்த கடமைக்கு என்னையும் நாளைக்கு வேலைக்கு போற கடமைக்கு சைக்கிளையும் தூக்கிட்டு நம்ம தலையில ஒரு செல்ல தட்டு

"முதல்ல உன் சைசுக்கு இருக்குற வண்டியை ஓட்ட கத்துக்க அப்புறம் இந்த வண்டியை ஓட்டலாம்"

"சரி அப்ப காசு கொடு"

"இதுக்கு தாண்டா நான் வாயே தொறக்குறதுல்ல"....இந்தா புடின்னு காசை கொடுப்பாரு

காசை வாங்கியவுடன் கால் நேராக தெரு முனையில இருக்குற சைக்கிள் கடையை நோக்கி ஒடி 1 மணிநேரத்துக்கு சைக்கிளை எடுப்பேன். அதுவும் சிகப்பு கலருல ஒரு சைக்கிள் இருக்கும். அது என்ன மாயமோ தெரியல அப்ப எல்லாம் அந்த வண்டியை தவிர வேற எந்த வண்டியும் பிடிக்காது (வேற எந்த வண்டியும் எட்டாதுன்னுங்கிறது வேற விஷயம்)

அந்த சின்ன வண்டிக்கு ஏற்றார் போல சின்னதாக கேரியர் கூட இருக்கும். அந்த வண்டி எந்த கம்பெனி வண்டின்னு அந்த கடைக்காரனுக்கே தெரியாது அந்த அளவுக்கு ஒன்னு ஒன்னும் ஒவ்வொரு ஷேப்புல இருக்கும்.

"அண்ணா சைக்கிள்ள காத்து கொஞ்சம் கம்மியாருக்கு"...

"விழுந்துவார்ரத்துக்கு இதுபோதும் போடான்னு" சைக்கிள்கடைக்காரனின் வாழ்த்து செய்தியோட வண்டி மேல ஏறி வுட்கார்ந்து, பக்கத்துல இருக்குற கல்லுமேல ஒரு காலை வச்சி இன்னொரு காலால சைக்கிள் வலது பெடலை ஒரு மிதி. மிதிக்கிறதுக்கு முன்னாடி பெல் எல்லாம் அடிச்சி ஊருல இருக்குற எல்லா சாமிக்கும், மக்களுக்கும் நான் சைக்கிள் ஓட்டுறதை சொல்லிடுவேன்.

அப்புறம் தான் இருக்கு விஷயமே கை ரெண்டும் மைக்கல் ஜாக்சான் டான்சு ஆடும் பாருங்க அப்படி ஆடும். என் ஆட்டத்தை பாக்குறதுக்குன்னே எங்கிருந்து தான் வருவாங்களோ எல்லா வேலையும் வுட்டுட்டு வறவுங்க மேல எல்லாம் ஒரு இடி..."சனியனே புள்ளையா இது..."கிரவுண்டுல போயி ஒட்ட வேண்டியது தானே"..(திட்டாம ராசா பார்த்து ஓட்டுப்பான்னு கொஞ்சுவாங்களா..) ச்ச எப்படியும் நாமாகவே ஓட்ட கத்துக்க முடியாதுன்னு நினைச்சிகிட்டு இருக்குற சமயத்துல தான். ஊரில் இருந்து எங்க பெரியம்மா பையன் வந்தான்.
அண்ணா எனக்கு சைக்கிள் ஓட்ட கத்துக் கொடுன்னு ஒரு அப்லிக்கேசனை போட்டாச்சி.
சரி சித்தி பையன்னு பாசத்துல சொல்லிக் கொடுத்தான். "டேய் குனியாதடா, நேரா பாரு,
கைய எதுக்கு இந்த ஆட்டு ஆட்டுற, எப்ப செஞ்ச பாவமே என்க்கிட்ட மாட்டிக்கிட்டு தலை கீழா நின்னு தண்ணி குடிச்சான் நானும் கீழ எல்லாம் விழுந்து பல சில்லரைகள் எல்லாம் அள்ளி எப்படியோ ஓட்ட கத்துக்கிட்டேன்.

இப்ப கத்துக்கிட்டாச்சி அப்புறம் என்ன ஏதற்க்கெடுத்தாலும் சைக்கிள் தான். ஏதாவது சாக்கு போக்கு சொல்லி சைக்கிளை வாடகைக்கு எடுத்து சுத்த வேண்டியது தான். எத்தனை நாள் தான் வாடகையில சுத்தறது?. சொந்த வண்டி வேணுமுன்னு அம்மா முலமாக என் அப்லிகேசனை தட்டி விட்டேன். ஒரு செக்கனண்டு BSA SLR வண்டியை சர்வீஸ் செய்து சாவியை கொடுத்தாரு அப்பா.

"முதல்ல பூஜை பண்ணிட்டு வண்டியை எடு..."

"எது இந்த வண்டியையா...அவன்வன் புசுது புதுசா வண்டியை வச்சி சீன் போட்டுக்கிட்டு இருக்கானுங்க செக்கனண்டு வண்டி எல்லாம் எவன் ஓட்டுவான்"

எனக்கு புதுசு தான் வேணும்முன்னு அந்த வண்டியை ரெண்டு நாளா தொடாமல் இருந்தேன். அப்புறம் வேற வழியில்லன்னு அந்த வண்டியை ஓட்ட ஆரம்பிச்சேன். அப்புறம் அந்த வண்டி இல்லாமா எங்கையும் போறதுல்ல. 5வருஷம் அதே வண்டி தான் வருஷம் வருஷம் சர்வீஸ்க்கு விடும் போதெல்லாம் கடக்காரன் இதுல என்னத்த இருக்குன்னு சர்வீஸ்க்கு விடுறன்னு ஒரு பார்வை பார்பான். அந்ந அளவுக்கு வண்டியை கண்டம் பண்ணிவிச்சிருப்பேன். என் கோவத்தை எல்லாம் அது மேல தான் காட்டியிருக்கேன்.

ஸ்கூல் முடிஞ்ச பிறகு நானும் என் நண்பர்களும் வண்டியை மாத்திப்போம். பிகருங்க முன்னாடி கட்டு கொடுக்கிறேன்னு சொல்லிட்டு சில்லரை அள்ளியது, டபுல்சு, ட்ரிபுல்சுன்னு கலக்கியது எல்லாமே அந்த வண்டியில தான். எதிர் காத்துல ஏறி நின்னுக்கிட்டு மிதிச்சிக்கிட்டே அந்த காத்தை அனுபவிக்கும் போது வரும் பாருங்க ஒரு சந்தோஷம் அட அட அப்படி ஒரு ஆனந்தம் அதுல. எனக்கு தெரிஞ்சி அந்த வண்டியை ஆயுதபூஜைக்கு மட்டும் தான் சுத்தமா தொடைப்பேன். அதுவும் வீட்டுல கத்து கத்துன்னு கத்திய பிறகு தான்.

என்னை படிக்க வைக்குறதே பெரிய விஷயம்ன்னு நினைச்சிக்ட்டு இருக்குற நிலைமையிலும் என் ஆசையை நிறா ஆசையாக்கக் கூடாதுன்னு எனக்குன்னு சொந்தமா ஒரு செக்கனண்டு வண்டியை தான் வாங்கி கொடுத்தாரு எங்க அப்பா. இது தான் என்னால முடிஞ்சதுன்னு வாய்விட்டு கூட சொல்லியிருக்காரு. அப்படி இருந்தும் கூட எப்போதாவது அப்பாவை ரயில்வே ஸ்டேசனுக்கு கொண்டு போயி விடுன்னு அம்மா சொன்னா.."சைக்கிளை ஸ்டாண்டுல போட்டுட்டு போக சொல்லும்மா...எனக்கு வேற வேலையிருக்குன்னு" போயிடுவேன். இன்னிக்கும் யாருமே ஓட்டலனாலும் கூட அந்த வண்டி தூக்கி போடமா என் வீட்டுல ஒரு ஒரமா வச்சியிருக்காரு.

சில பிரிவுகள் தேவைதான்னு தோணுது, அப்ப தான் கூட இருந்தையும், இருந்தவுங்களையும் பற்றி புரிஞ்சிக்கவும் உணரவும் முடியுது.