Monday, February 11, 2008

ராசாத்தி...






நீண்ட பயணம் முடியப்போகும் நேரம் வெகு அருகில் வந்துவிட்டது. அடுத்து நிகழப்போகும் அந்த அற்புத‌த்தை நான் எப்படி சொல்வது... நான் என் ராசாத்திகிட்ட போகப்போறேன்... அவகிட்ட போயி அந்த அழுத்தமான ஈரமான முத்தத்தை வாங்கப்போறேன். இந்த ஜெயில் கம்பிகளுக்கு பின்னாடி நான் இருந்த ஒன்றறை வருஷ வாழ்க்கை முடியப்போகுது.

அதோ அந்த வெட்டவெளியில் அமைதியாக தெரியுது பாருங்க நிலா வெளிச்சம், அதுபோல அழகாக இருந்திச்சு என் வாழ்க்கை. நான் என்னோட மனைவி, என் ராசாத்தின்னு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தேன். கொஞ்சம் சந்தோஷமாக இருந்தால் பொறுக்காது போல இந்த கடவுளுக்கெல்லாம். வயித்தெறிச்சல் புடிச்ச சாமிங்க. ரெண்டு வருடத்திற்க்கு முன்னாடி ஒரு வெள்ளிக்கிழமை எல்லாம் இருளாக முடிஞ்சு போச்சு.

நான் இந்த சாமிங்ககிட்ட வேண்டிக்கிட்டது எல்லாம் என் ராசாத்தி நல்லாயிருக்கணும். எப்போதும் மகிழ்ச்சியா இருக்கணும், அவளுக்கு எந்த குறையும் வந்துடக்கூடாதுன்னு தான். அதனாலதான் என்னவோ எந்த குறையும் இல்லாம நானே பார்த்துக்கிறேன்னு அந்த சாமியே என் ராசாத்தியை என்கிட்ட இருந்து வாங்கிட்டார்.

இதே வானத்தில் இருந்து வர்ற‌ முதல் மழைத்துளி என் செல்லுக்கு முன்னாடிதான் வந்து விழுது. மழைன்னா ராசாத்திக்கு ரொம்பப்பிடிக்கும். அந்த மழைத்துளிகளை கையில் ஏந்திக்கிட்டு என் முகத்தில அடிச்சி அடிச்சி அவ சிரிப்பா பாருங்க.. இன்னைக்கு முழுக்க பார்த்துக்கிட்டு இருக்கலாம். அவளோட ஒவ்வொரு அசைவையும் என் மனசுக்குள்ள பதிவு பண்ணி வச்சிருக்கேன்.

எதைப்பார்த்தாலும் அவள் ஞாபகம்தான்... எப்போதும் அவளோட நான் இருந்த அந்த மகிழ்ச்சியான நினைவுகள்தான் வருது. அதான் ஒரேய‌டியா அவகிட்டயே போயிடலாமுன்னு எப்பவோ முடிவு பண்ணிட்டேன். இந்த சட்டம், நீதிமன்றம் எல்லாம் எனக்கு தூக்குதண்டனை கொடுத்தப்ப‌ கூட 'அட போங்கடா! நான் எப்பவோ இந்த முடிவை எடுத்துட்டேன். இதை ஊர் கூடி சொல்லறதுக்கு இத்தனை காலமா'ன்னு தோணுச்சு.

ஒரு மழைநாள்ல‌தான் பிறந்தா என் ராசாத்தி... விடியற்காலை 1.30 மணி இருக்கும். என் மனைவி பிரசவ வலியில துடிக்கிறதை பார்க்க தைரியம் இல்லாமல் அங்கும் இங்கும் அலைஞ்சிக்கிட்டு இருந்தேன். ஒரு மெல்லிய பனித்துளியை வெள்ளை துண்டுல‌ சுத்தி என்னோட அம்மா என்கிட்ட கொடுத்தாங்க. சந்தோஷத்தோட உச்சத்திற்க்கு போகும்போது வார்த்தைகள் செத்துப்போயிடுதுன்னு சொல்லுவாங்க. என் ராசாத்தியை என் கையில் வாங்குறப்ப‌ நான் அப்படிதான் இருந்தேன். அவளை முதன்முதலில் என் கையில் கொடுத்தப்போ எனக்கு ஏற்பட்ட உணர்ச்சிகளை இப்ப நினைச்சாலும் உடம்பு எல்லாம் சிலிர்க்குது.

"டேய் உன்னை மாதிரியே இருக்காடா" ன்னு அம்மா சொல்லும்போது ஒரு கர்வம் கலந்த புன்னகை வந்துச்சு பாருங்க.. அட.. அட... அதுதாங்க சொர்க்கம் .

உடம்பு எல்லாம் செக்கச்செவேலுன்னு இருக்கு. கண்ணை மூடிக்கிட்டு என் ராசாத்தி என்கிட்ட ஏதோ சொல்றா... உனக்கு அப்பான்னு ஒரு பதவி கொடுத்திருக்கேன்னு சொல்றா மாதிரி இருக்கு. ச்சீசீ...! குழந்தை எல்லாம் அப்படி சொல்லுமா..

ஆனா அதுதானே உண்மை.. என்னை அப்பான்னு கூப்பிட ஒரு குரல். நடக்குறதுல, பேசுறதுல , கோவத்துல எல்லாம் உன்னைப்போல இருக்குடான்னு ஊரே சொல்றதுக்கு ஒருத்தி வந்துட்டா. என் மூச்சுகாத்து அவள் மேல‌ பட்டதுமே அவ கண்திறந்த அழகிருக்கே.. அதற்கு எத உதாரணமா சொல்ற‌துன்னு தெரியல.. அப்படி ஒரு அழகு. அப்படியே மெல்லமெல்ல நாலாபக்கமும் கண்ண சுத்திட்டு எங்க என் அப்பான்னு ஆசையா அவ பார்க்குறா.!

என் கண்ணுக்கு அவ மங்கலா தெரியுறா.. என்னன்னு தெரியல. என் கண் முழுக்க கண்ணீர் நிறைஞ்சிருக்கு. ஆம்பளப்புள்ளை அழக்கூடாதுன்னு சொன்ன அம்மா கூட வாய் மூடி கண்கலங்கி நிக்குறா. ஏண்டா அழுவுறன்னு அவளால‌ கேட்க முடியல பார்த்திங்களா! அழு.. நல்லா அழு... இந்த மாதிரி அழுகை கிடைக்குறதுக்கு எத்தன தடவ கோயில் கோயிலா ஏறி இறங்கியிருப்ப.

மழலை குரலில் அவ 'ம்மான்னும் 'த்தைன்னும் சொல்லும் போது எப்படா அப்பான்னு சொல்வான்னு தவங்கிடந்திருக்கேன். வேலை முடிச்சுட்டு ராத்திரி எவ்வளவு நேரம் ஆனாலும் என் குரல் கேட்டவுடனே ஓடி வந்து அப்பான்னு கூப்பிட்டுக்கிட்டே கழுத்தோட கட்டி பிடிச்சிப்பா. நடுராத்திரி தூங்காம இருந்தவளை தூங்க வைக்குறதுக்கு தோள் மேல போட்டு உலாத்திக்கிட்டு இருந்தேன்னா பதிலுக்கு என் முதுகுல‌யும் தட்டி என்னை தூங்க வைப்பா என் ராசாத்தி. அந்த பால்வாசமும், பொக்கை வாய் சிரிப்புக்காவும் என்ன வேணுமுன்னாலும் செய்யலாம். எனக்கும் அவளுக்கும் ஒரு புரிதல் இருந்திச்சு. யாரு எது கொடுத்தாலும் ஒரு அனுமதி பார்வை என்கிட்ட வந்துட்டு போகும். உனக்கு அம்மா புடிக்குமா இல்ல அப்பா புடிக்குமான்னு கேட்டா டக்குன்னு அப்பான்னு சொல்லுவா. பொண்ணுக்கு ஆணைதானே பிடிக்கும்ன்னு கூட சொல்லாம். இருந்தாலும் எனக்கு அது புதுசாக இருந்துச்சு. "பொம்பளப்புள்ளை மேல இவ்வளவு பாசம் வைக்காதேடா. இன்னொரு இடத்துக்கு போற பொண்ணு அப்புறம் ரொம்ப கஷ்டமாகிடும்ன்னு"அம்மா சொல்லுவாங்க. ஆனா அதெல்லாம் எனக்கு தெரியல.

வாழ்க்கையில தோத்துப்போறதுலயும் ஒரு சந்தோஷம் இருக்குன்னா அது குழந்தைங்ககிட்‌ட தோத்து போறதுல‌தான். நான் என் ராசாத்திக்கிட்ட நிறைய தோத்துருக்கேன். கண்ணாமூச்சு ஆடும்போது என்ன கண்டுபிடிச்சிட்டு அப்பா நீ அவுட்டு...நான்தான் ஜெயிச்சேன்னு அவ சந்தோஷத்தில் கைக்கொட்டி சிரிக்கும்போது அந்த தோல்வியிலும் பலஆயிரம் சந்தோஷம் கொடுத்தவ என் ராசாத்தி.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அவளோட 6வது பிறந்தநாள் அன்னைக்கு....

"எழுந்திருச்சிட்டாளா?"

"இல்லை இன்னும் தூங்கிட்டுதான் இருக்கா... இன்னிக்கு லீவுதானே.. அதான் தூங்கட்டும்ன்னு விட்டுட்டேன்"

"தூங்கட்டும்...... ராத்திரி ஏதாவது கேட்டாளா?"

"ம். கேட்டுச்சு.. அப்பா எனக்கு என்ன வாங்கி வருவாருன்னு..."

"நீ என்ன சொன்ன!"

"காலையில பாருன்னு சொல்லிட்டேன் .....உம்முன்னு முகத்தை வச்சிக்கிட்டு தூங்கிட்டா"

"லூசு! சொல்லியிருக்க வேண்டியாது தானே..."

"அதுக்கு என்ன அவசரம்.. காலையில தான் தெரிஞ்சிக்கட்டுமே"

"போடி...! குழந்தை பாவம்..! ஏக்கத்துலயே தூங்கியிருக்கும்" சொல்லிட்டு அவளுக்கு பிடிச்ச சாக்லேட், புதுத்துணி எல்லாம் எடுத்துக்கிட்டு அவ காதுகிட்ட இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்லம்ன்னு சொன்னவுடன் அப்பான்னு கட்டிப் பிடிச்சிக்கிட்டு எனக்கு என்ன வாங்கி வந்திருக்கிங்கன்னு கேட்டா... நானும் அவளோட கண்ணை பொத்தி வெளியில் கூட்டிவந்து அவ ஆசை ஆசையாக கேட்ட சைக்கிளை காட்டினேன்.

முகம் முழுக்க ஆச்சரியத்தில் அப்படியே துள்ளி குதிச்சு ஏய்ய்ய்ன்னு கத்தி என்னை கட்டிப்பிடிச்சி முத்தம் கொடுத்தா. அதுதான் நான் அவக்கிட்ட இருந்து வாங்கின கடைசி முத்தம்.

நான் இதை ஓட்டப்போறேன்னு வெளியில் எடுத்துக்கிட்டு போனா... இரும்மா கோவிலுக்கு போயிட்டு வந்து ஓட்டலாமுன்னு சொன்னேன். இல்ல இப்பவே போகணுமுன்னு போனா. போனவ‌ போனவதான்... திரும்பி வரவேயில்ல. எங்க தேடியும் கிடைக்கல. மறுநாள் காலையில என் வீட்டு பின்னாடி ஒரு கோணிப்பையில உடம்பு முழுக்க ரத்தத்தோட சிதைஞ்சு போயிருந்தா என் ராசாத்தி.

ஊரே வந்துருந்துச்சு என் ராசாத்தியை பார்க்க. யார்யாரோ என்னன்னமோ சொன்னாங்க. அந்த வாரத்துல‌ எல்லா பேப்பரிலும், டிவி செய்தியிலும் என் ராசாத்தி பத்தித்தான் பேச்சு.

சைக்கோவின் காம வெறி செயலுக்கு குழந்தை பலின்னு போட்டாங்க. அந்த சைக்கோவை பிடிச்சாங்க. அவனும் ரொம்ப ஈசியாக வெளியில் வந்துட்டான்.
என் கண்ணு முன்னாடியே அவன் சுத்திக்கிட்டு இருந்தான். என்னால முடியல. அணு அணுவாக நான் ரசித்த ராசாத்தியை இப்படி ரத்தத்தில் மிதக்க விட்டுட்டு அவன் இப்படி சுத்திக்கிட்டு இருக்குறதை பார்க்க முடியல. அவன் ரத்த‌த்தில் மிதக்க விட்டதில் என்னோட ராசாத்தியும் ஒண்ணுன்னு அப்புறம் தான் தெரிஞ்சது. அவனுக்கு இன்னொரு வெறி பிடிக்கிறதுக்குள்ள அந்த நாயை நானே கொல்லணுமுன்னு முடிவு பண்ணினேன். அவனைத்தேடி போயி பிடிச்சேன். "ஏண்டா நாயே! உனக்கு காமத்த இறக்க என்னோட ராசாத்திதான் கிடைச்சாலான்னு அவனை கண்டந்துண்டமா என் ராசாத்தியை ரத்தத்தில மிதக்க விட்டா மாதிரி மிதக்க விட்டேன். என் மனசு நிறைஞ்சுருந்தது. என் ராசாத்தி அப்பா நீ ஜெயிச்சிட்டன்னு சொல்றாமாதிரி இருந்துச்சு.

இதோ.. இன்னிக்கு எனக்கு தூக்கு.! என் ராசாத்திகிட்ட‌ முத்தம் வாங்கப்போற பொன்னான நாள். அதே ஜெயிலர் வர்றார். கூடவே டாக்டரும் வராங்க. பார்ப்போம்.

47 comments:

பாச மலர் / Paasa Malar said...

அச்சச்ச்ச்சோ...என்னமோ பண்ணுது மனசு கோபி...

துளசி கோபால் said...

கொன்னுட்டீங்க........


மனசை என்னவோ செய்யுது இந்த நடை.

Anonymous said...

இந்தக்கதை நிசமாக இல்லாமல் போகட்டும். பெரும்பாலும் இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு நெனப்பேன். இப்படி இருக்கவே கூடாதுன்னு அனத்த வைக்குது இந்தக்கதை.

கானா பிரபா said...

ஆஹா மாதச் சம்பளம் வந்துடுச்சே
;-)

ராசாத்தி, திகில் படக் கலக்கல். நல்லாயிருக்கு தல

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹ்ம்.. இப்படி எத்தனை பேரு எங்க ஊருல தில்லி நொய்டால செத்துபோனாங்க.. தலைநிமிர்ந்து பேட்டிக்கொடுத்த கொலைகாரனையும் அதுக்கு உடந்தையா இருந்த போலீஸும் என்று எத்தனை பேரு .. கூண்டோட இல்ல அனுப்பனும்..
நல்லா எழுதியிருக்க்கீங்க கோபி...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தல
கண்கள் பனிக்க வைக்கும் நடை!...
ஆனால் கடைசிப் பத்தி வரும் வரை மட்டுமே! ராசாத்தி உயிர் இழக்கும் வரை மட்டுமே!

திகில் கொடுக்க கடைசிப் பத்தியை நுழைச்சீங்களோ என்னவோ தெரியலை!
அத்தனை அன்பும் ஒரே பத்தியில் காணாமல் போனது!
ஹூம்ம்ம்...நிஜத்திலும் அப்படித் தானே! அத்தனை அன்பும், ஒரே ஒரு வெறியில் கருகிப் போய் விடுகிறது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஒரு சுகப் பிரசவத்தைக் கூட இருந்து பார்த்தது போல் உணர்வு!

//என் மூச்சுகாத்து அவள் மேல‌ பட்டதுமே அவ கண்திறந்த அழகிருக்கே//

//தோள் மேல போட்டு உலாத்திக்கிட்டு இருந்தேன்னா பதிலுக்கு என் முதுகுல‌யும் தட்டி என்னை தூங்க வைப்பா//

Liked these lines soooooooo much!!!!
ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது!
வாழ்த்துக்கள் கோபி!:-)

Santhosh said...

etho oru sogam irukum appadinu kathai starting la theriyuthu.. analum nalla irunthathu gopi... good job.

அபி அப்பா said...

ஏன் கண்ணு சம்பளம் வாங்கிட்ட போல இருக்கே! சூப்பர் கதை கோபி! நச்சுன்னு இருந்துச்சுப்பா கதை! நொய்டா சம்பவம் தான் ஞாபகம் வருது!

CVR said...

நல்லா எழுதியிருக்கீங்க அண்ணாச்சி!!
வாழ்த்துக்கள்!! :-)

குசும்பன் said...

தம்பி நீயா?

நம்பவே முடியவில்லை மிக அருமையாக இருக்கு, பாதியில் கதையை யூகிக்க முடிஞ்சாலும் சொல்லி இருக்கும் விதம் மிக அருமையாக இருக்கு.

Unknown said...

பெண் பிள்ளை பிறந்ததிலிருந்து.... அம்மா சொல்வது வரைக்கும். அனுபவித்ததை எழுதியது மாதிரி இருக்கிறதே.
நன்றாக கதை சொல்லும் திறம் உமக்கு இருக்கிறது கோபி. வாழ்த்துக்கள்.

Unknown said...
This comment has been removed by the author.
Dreamzz said...

நல்ல கதை..

Thamiz Priyan said...

//"டேய் உன்னை மாதிரியே இருக்காடா" ன்னு அம்மா சொல்லும்போது ஒரு கர்வம் கலந்த புன்னகை வந்துச்சு பாருங்க.. அட.. அட... அதுதாங்க சொர்க்கம் .//
//மழலை குரலில் அவ 'ம்மான்னும் 'த்தைன்னும் சொல்லும் போது எப்படா அப்பான்னு சொல்வான்னு தவங்கிடந்திருக்கேன். //

அழகான உண்மைகள். மிக நன்றாக வந்திருக்கிறது. :)

Anonymous said...

:(
//மனசை என்னவோ செய்யுது இந்த நடை.//

கப்பி | Kappi said...

அருமை!

SathyaPriyan said...

முதல் முறை உங்கள் பதிவிற்கு வருகிறேன். வந்தவுடன் அங்கே இங்கே செல்ல முடியாமல் கட்டிப் போட்டு விட்டீர்கள்.

தோய்வில்லாத அசத்தலான நடை.

உங்களின் அனைத்து பதிவுகளையும் படிக்க தூண்டுகிறது இந்தப் பதிவு.

வாழ்த்துக்கள்.

இராம்/Raam said...

Good....

சென்ஷி said...

:)))

KALAKKITTA MAPPI

ENNANNAMO SOLLA THONUTHU..

ATHA ELLAM INGA SONNA NALLA IRUKATHU.

ATHANALA APPADIYE BLANKAA VITTUDAREN

SENSHE

நாடோடி இலக்கியன் said...

//என் மூச்சுகாத்து அவள் மேல‌ பட்டதுமே அவ கண்திறந்த அழகிருக்கே//
//"டேய் உன்னை மாதிரியே இருக்காடா" ன்னு அம்மா சொல்லும்போது ஒரு கர்வம் கலந்த புன்னகை வந்துச்சு பாருங்க.. அட.. அட... அதுதாங்க சொர்க்கம் .//

ரொம்ப நல்லா எழுதியிருகீங்க கோபி.கதைதான் என்றாலும் படித்து முடிக்கையில் மனதை கணக்க செய்துவிட்டது.

Divya said...

பதிவினை படிக்கும்போது ஏற்பட்ட உணர்வையும், படித்து முடித்த பின்பும் மாறாத தாக்கத்தையும் விவரிக்க வார்த்தைகள் பிடிபடவில்ல கோபி!

கதையின் நடை அருமையிலும் அருமை!! மனமார்ந்த பாராட்டுக்கள்!!

Divya said...

\\என் கண்ணுக்கு அவ மங்கலா தெரியுறா.. என்னன்னு தெரியல. என் கண் முழுக்க கண்ணீர் நிறைஞ்சிருக்கு. ஆம்பளப்புள்ளை அழக்கூடாதுன்னு சொன்ன அம்மா கூட வாய் மூடி கண்கலங்கி நிக்குறா. ஏண்டா அழுவுறன்னு அவளால‌ கேட்க முடியல பார்த்திங்களா! அழு.. நல்லா அழு... இந்த மாதிரி அழுகை கிடைக்குறதுக்கு எத்தன தடவ கோயில் கோயிலா ஏறி இறங்கியிருப்ப.\\

Ultimate expressions!!
chancey illa Gopi,

உங்கள் அழகான எழுத்து நடை , கதையோட ஒன்றிப்போக வைத்தது!!

எழுத்தில் செழுமையை உணர முடிகிறது, தொடரட்டும் உங்கள் அசத்தலான எழுத்து திறன்!!!

வாழ்த்துக்கள் கோபி!!

Divya said...

\\ நடுராத்திரி தூங்காம இருந்தவளை தூங்க வைக்குறதுக்கு தோள் மேல போட்டு உலாத்திக்கிட்டு இருந்தேன்னா பதிலுக்கு என் முதுகுல‌யும் தட்டி என்னை தூங்க வைப்பா என் ராசாத்தி. அந்த பால்வாசமும், பொக்கை வாய் சிரிப்புக்காவும் என்ன வேணுமுன்னாலும் செய்யலாம். \\

குழந்தையின் பால்வாசனையை கூட குறிப்பிட்டு எழுதியிருப்பது சூப்பர்!!

Fatherhood யை அனுபவித்த/அனுபவிக்கும் ஒரு தகப்பனின் உணர்வுகளை பிரிதிபலிக்கின்றது ஒவ்வொரு வரிகளும்!

உணர்வுபூரனமான உங்கள் கற்பனைத்திறனுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு கோபி!!

Unknown said...

கோபி,

கதை + நடை ரெண்டுமே நல்லாருக்குப்பா… கடைசி பாரா மட்டும்தான் கொஞ்சம் விலகியிருக்க மாதிரி இருந்துது. ஆனா அப்படிதான முடிச்சாகனும்?

தென்றல் said...

கோபி,

சோகம் இருக்கும்னு யூகிக்க முடிந்தது.. ஆனாலும்....

'திகிலும்' அந்தப் பாச நடையும் அருமை...

கலக்குங்க!!

நிலாரசிகன் said...

அருமை.

மங்களூர் சிவா said...

Nalla irukku Gopi.

வல்லிசிம்ஹன் said...

கோபிநாத்தா எழுதினது!!!!
இந்தக் கதை இந்த நடையில எப்படி இத்தனை சோகமா வந்திருக்கு:(((


உடலே சில்லுனு போச்சு.

வெட்டிப்பயல் said...

அருமையான நடை...

நிறைய எதிர்பார்ப்பை உருவாக்கிட்டீங்க கோபி...

manipayal said...

வணக்கம் கோபிநாத். நானும் எவ்வளவோ கதை படிச்சிருக்கேன். எழுதியிருக்கேன். ஆனால் இது simply super.Keet it up.

G3 said...

ஒரே கதைல முதல்ல அதிகமான சந்தோஷமும் கடைசியில அதிகமான துக்கத்தையும் வாரி வழங்கிட்டீங்க.

கதை சொன்ன விதம் ரொம்ப ரசிக்கும்படியா யதார்த்தமா எழுதி அசத்திட்டீங்க. நிறைய எழுத வாழ்த்துக்கள் :)

அரை பிளேடு said...

எனக்கு இதயத்தை வருடும் சோகம் பிடிக்கும் என்றாலும் இந்த சோக கதை......

இது இதயத்தை நசுக்கிப்போடும் சோகம். :(

ஆனால் அதுவே கதாசிரியராக உங்கள் வெற்றி.

மனிதர்களை கொல்பவர்களுக்கே தூக்கு தண்டனை தருவதில்லை.
மிருகத்தை கொல்வதற்கு தூக்கு தண்டனையா.

ஸ்ரீ said...

ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது :(. அழகான அருமையான கனமான கதை. திறமையாக கையாண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

ச.பிரேம்குமார் said...

மாப்பி, என்னய்யா இப்படி ஒரு கதை :(
நல்லா அதே சமயம் மனச கனமாக்குற மாதிரி ஒரு கதைய சொல்லிட்டீக

வாழ்த்துக்கள் மாப்பி

கோபிநாத் said...

@ பாச மலர்
\\அச்சச்ச்ச்சோ...என்னமோ பண்ணுது மனசு கோபி...\\
ஆஹா...!!! மிக்க நன்றி ;)

@ துளசி கோபால்
\\கொன்னுட்டீங்க........
மனசை என்னவோ செய்யுது இந்த நடை..\\
எல்லாம் டீச்சரின் நடையையும் படித்துதான் இப்படி எல்லாம்...நன்றி டீச்சர் ;)

@ சின்ன அம்மிணி
\\இந்தக்கதை நிசமாக இல்லாமல் போகட்டும். பெரும்பாலும் இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு நெனப்பேன். இப்படி இருக்கவே கூடாதுன்னு அனத்த வைக்குது இந்தக்கதை.\\

சில இடங்களில் இப்படி நடக்கிறது...இப்படி எல்லாம் நடக்கமால் இருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பமும். நன்றி ;)

@ கானா பிரபா
\\ஆஹா மாதச் சம்பளம் வந்துடுச்சே
;-)\\ -- ஆமாம் தல ;)

\ராசாத்தி, திகில் படக் கலக்கல். நல்லாயிருக்கு தல\\
மிக்க நன்றி தல ;)

@ கயல்விழி முத்துலெட்சுமி
\\ஹ்ம்.. இப்படி எத்தனை பேரு எங்க ஊருல தில்லி நொய்டால செத்துபோனாங்க.. தலைநிமிர்ந்து பேட்டிக்கொடுத்த கொலைகாரனையும் அதுக்கு உடந்தையா இருந்த போலீஸும் என்று எத்தனை பேரு .. கூண்டோட இல்ல அனுப்பனும்..
நல்லா எழுதியிருக்க்கீங்க கோபி...\\

இந்த கதை எழுத அந்த சம்பவங்களும் ஒரு காரணம்...மிக்க நன்றி அக்கா ;)

@ KRS

\\தல
கண்கள் பனிக்க வைக்கும் நடை!...\\
மிக்க நன்றி தல ;)

\\திகில் கொடுக்க கடைசிப் பத்தியை நுழைச்சீங்களோ என்னவோ தெரியலை!
அத்தனை அன்பும் ஒரே பத்தியில் காணாமல் போனது!\\

தல கடைசிப் பத்திதான் எல்லாத்துக்கும் காரணம்...

\\ஹூம்ம்ம்...நிஜத்திலும் அப்படித் தானே! அத்தனை அன்பும், ஒரே ஒரு வெறியில் கருகிப் போய் விடுகிறது!\\

அதான்...அதே தான்..!

\\Liked these lines soooooooo much!!!!
ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது!
வாழ்த்துக்கள் கோபி!:-)\\

உங்களின் வருகையும்...பாராட்டும் எனக்கு மிகந்த உற்சாகத்தை கொடுக்கிறது தல...மிக்க நன்றி ;)

@ சந்தோஷ்
\\etho oru sogam irukum appadinu kathai starting la theriyuthu.. analum nalla irunthathu gopi... good job.\\

ரொம்ப நன்றிண்ணே ;))

@ அபி அப்பா
\\ஏன் கண்ணு சம்பளம் வாங்கிட்ட போல இருக்கே! சூப்பர் கதை கோபி! நச்சுன்னு இருந்துச்சுப்பா கதை! நொய்டா சம்பவம் தான் ஞாபகம் வருது!\\
ரொம்ப நன்றி தல ;)

@ CVR
\\நல்லா எழுதியிருக்கீங்க அண்ணாச்சி!!
வாழ்த்துக்கள்!! :-)\\

நன்றி சிவி ;)

@ குசும்பன்
\\தம்பி நீயா?\\

ஆமாண்ணே நானே தான்..

\\நம்பவே முடியவில்லை மிக அருமையாக இருக்கு, பாதியில் கதையை யூகிக்க முடிஞ்சாலும் சொல்லி இருக்கும் விதம் மிக அருமையாக இருக்கு.\\

சில நேரங்களில் நம்பிதான் ஆகணும்...வேற வழியில்லை....மிக்க நன்றிண்ணே ;)

கோபிநாத் said...

@ சுல்தான்
\\பெண் பிள்ளை பிறந்ததிலிருந்து.... அம்மா சொல்வது வரைக்கும். அனுபவித்ததை எழுதியது மாதிரி இருக்கிறதே.
நன்றாக கதை சொல்லும் திறம் உமக்கு இருக்கிறது கோபி. வாழ்த்துக்கள்.\\
மிக்க நன்றி சுல்தான் சார்...உங்கள் வாழ்த்துக்கள் மிகுந்த உற்சாகத்தை கொடுக்கிறது...;)

@ Dreamzz
\\நல்ல கதை..\\
நன்றி டீரிம்ஸ் ;)

@ தமிழ் பிரியன்
\\அழகான உண்மைகள். மிக நன்றாக வந்திருக்கிறது. :)\\
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ் பிரியன் ;)

@ துர்கா
:(
//மனசை என்னவோ செய்யுது இந்த நடை.//
நன்றி துர்கா ;)

@ கப்பி பய
\\அருமை!\\
நன்றி கப்பி ;)

@ SathyaPriyan
\\முதல் முறை உங்கள் பதிவிற்கு வருகிறேன். வந்தவுடன் அங்கே இங்கே செல்ல முடியாமல் கட்டிப் போட்டு விட்டீர்கள்.
தோய்வில்லாத அசத்தலான நடை.\\

நன்றி சத்யா ;)

\\உங்களின் அனைத்து பதிவுகளையும் படிக்க தூண்டுகிறது இந்தப் பதிவு.
வாழ்த்துக்கள்.\\
நேரம் கிடைக்கும் போது படியுங்கள் ;) நன்றி ;)

@ இராம்
Good....\\
நன்றி மாப்பி..;)

@ சென்ஷி
\\:)))
KALAKKITTA MAPPI
ENNANNAMO SOLLA THONUTHU..
ATHA ELLAM INGA SONNA NALLA IRUKATHU.
ATHANALA APPADIYE BLANKAA VITTUDAREN\\
ஆஹா...மாப்பி ஆப்பு பார்க்கும் போது வைப்பியா..சரி சரி...நன்றி ;)

@ நாடோடி இலக்கியன்
\\ரொம்ப நல்லா எழுதியிருகீங்க கோபி.கதைதான் என்றாலும் படித்து முடிக்கையில் மனதை கணக்க செய்துவிட்டது.\\
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நாடோடி ;)

@ Divya

\\பதிவினை படிக்கும்போது ஏற்பட்ட உணர்வையும், படித்து முடித்த பின்பும் மாறாத தாக்கத்தையும் விவரிக்க வார்த்தைகள் பிடிபடவில்ல கோபி!
கதையின் நடை அருமையிலும் அருமை!! மனமார்ந்த பாராட்டுக்கள்!!\\
மிக்க நன்றி திவ்யா ;)

\\என் கண்ணுக்கு அவ மங்கலா தெரியுறா.. என்னன்னு தெரியல. என் கண் முழுக்க கண்ணீர் நிறைஞ்சிருக்கு. ஆம்பளப்புள்ளை அழக்கூடாதுன்னு சொன்ன அம்மா கூட வாய் மூடி கண்கலங்கி நிக்குறா. ஏண்டா அழுவுறன்னு அவளால‌ கேட்க முடியல பார்த்திங்களா! அழு.. நல்லா அழு... இந்த மாதிரி அழுகை கிடைக்குறதுக்கு எத்தன தடவ கோயில் கோயிலா ஏறி இறங்கியிருப்ப.\\

Ultimate expressions!!
chancey illa Gopi,
உங்கள் அழகான எழுத்து நடை , கதையோட ஒன்றிப்போக வைத்தது!!
எழுத்தில் செழுமையை உணர முடிகிறது, தொடரட்டும் உங்கள் அசத்தலான எழுத்து திறன்!!!
வாழ்த்துக்கள் கோபி!!\\

உங்களை போல பலரின் எழுத்து திறமையை பார்த்தும் படித்தும் தான் இப்படி எல்லாம் எழுத முடிந்தது. அதற்காக நான் தான் நன்றி சொல்ல வேண்டும். நன்றியோ நன்றி ;))

\\குழந்தையின் பால்வாசனையை கூட குறிப்பிட்டு எழுதியிருப்பது சூப்பர்!!
Fatherhood யை அனுபவித்த/அனுபவிக்கும் ஒரு தகப்பனின் உணர்வுகளை பிரிதிபலிக்கின்றது ஒவ்வொரு வரிகளும்!
உணர்வுபூரனமான உங்கள் கற்பனைத்திறனுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு கோபி!!\\

உங்களின் வருகைக்கும் இப்படி வரிக்கு வரி ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள் திவ்யா ;)

கோபிநாத் said...

@ அருட்பெருங்கோ

\\கோபி,
கதை + நடை ரெண்டுமே நல்லாருக்குப்பா… கடைசி பாரா மட்டும்தான் கொஞ்சம் விலகியிருக்க மாதிரி இருந்துது. ஆனா அப்படிதான முடிச்சாகனும்?\\

நன்றி மாப்பி...கேள்வியும் நீயே கேட்டு பதிலும் நீயே சொல்லிட்ட ! ;)

@ தென்றல்
\\கோபி,
சோகம் இருக்கும்னு யூகிக்க முடிந்தது.. ஆனாலும்....
'திகிலும்' அந்தப் பாச நடையும் அருமை...
கலக்குங்க!!\\
நன்றி தென்றல் ;)

@ நிலாரசிகன்
\\அருமை.\\
முதல் வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி நிலாரசிகன் ;)

@ மங்களூர் சிவா
\\Nalla irukku Gopi.\\
நன்றிண்ணே ;)

@ வல்லிசிம்ஹன்
\\கோபிநாத்தா எழுதினது!!!!
இந்தக் கதை இந்த நடையில எப்படி இத்தனை சோகமா வந்திருக்கு:(((
உடலே சில்லுனு போச்சு.\\
நன்றிம்மா ;)

@ வெட்டிப்பயல்
\\அருமையான நடை...
நிறைய எதிர்பார்ப்பை உருவாக்கிட்டீங்க கோபி...\\
நன்றி வெட்டி ;) எதிர்பார்ப்பை நிறைவு செய்ய முயற்சிக்கிறேன். ;)

@ manipayal
\\வணக்கம் கோபிநாத். நானும் எவ்வளவோ கதை படிச்சிருக்கேன். எழுதியிருக்கேன். ஆனால் இது simply super.Keet it up.\\

உங்களின் இந்த பின்னூட்டம் மிகுந்த உற்சாகத்தை கொடுக்கிறது...கண்டிப்பாக சிறந்த முறையில் எழுத முயற்சிக்கிறேன்...நன்றி ;)

@ G3
\\ஒரே கதைல முதல்ல அதிகமான சந்தோஷமும் கடைசியில அதிகமான துக்கத்தையும் வாரி வழங்கிட்டீங்க.
கதை சொன்ன விதம் ரொம்ப ரசிக்கும்படியா யதார்த்தமா எழுதி அசத்திட்டீங்க. நிறைய எழுத வாழ்த்துக்கள் :)\\

நன்றி ஜி3...கண்டிப்பாக நிறைய எழுத முயற்சிக்கிறேன் ;)

@ அரை பிளேடு
\\எனக்கு இதயத்தை வருடும் சோகம் பிடிக்கும் என்றாலும் இந்த சோக கதை......
இது இதயத்தை நசுக்கிப்போடும் சோகம். :(
ஆனால் அதுவே கதாசிரியராக உங்கள் வெற்றி.\\
நன்றி தல ;)
\\மனிதர்களை கொல்பவர்களுக்கே தூக்கு தண்டனை தருவதில்லை.
மிருகத்தை கொல்வதற்கு தூக்கு தண்டனையா.\\

இதுக்கு எனக்கு பதில் சொல்ல தெரியல தல...எனக்கு தோணுச்சி அப்படி வச்சுட்டேன்...அதிகமாக எல்லாம் யோசிக்கவில்லை தல ;)

@ ஸ்ரீ
\\ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது :(. அழகான அருமையான கனமான கதை. திறமையாக கையாண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.\\
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஸ்ரீ ;)

@ பிரேம்குமார்
\\மாப்பி, என்னய்யா இப்படி ஒரு கதை :(
நல்லா அதே சமயம் மனச கனமாக்குற மாதிரி ஒரு கதைய சொல்லிட்டீக
வாழ்த்துக்கள் மாப்பி\\
நன்றி மாப்பி ;)

துரியோதனன் said...

நல்லா இருந்தது. கடைசியா கண் கலங்க வச்சிட்டிங்க

Arunkumar said...

amazing story writing skills...
romba romba rasichen Gopi..

avaroda saavula oru artham irukkudhu... kadhai super..

pls write more !!!

Praveena said...

மனதை உலுக்கும் இத்தகைய கதையை படித்து வெகு நாட்களாகி விட்டது,
அருமையான எழுத்து நடை.

காட்டாறு said...

எளிமையான நடையில், ஒய்யாரமாய் ஆரம்பித்து, உருக்கமாய் ஓடி, பதறலாய், அமைதியாய் ஒரு முடிவு. நல்லா இருக்குது கோபி.

நான் சாக விரும்புகிறேன் , ஏனெனில் said...

//வாழ்க்கையில தோத்துப்போறதுலயும் ஒரு சந்தோஷம் இருக்குன்னா அது குழந்தைங்ககிட்‌ட தோத்து போறதுல‌தான்// இந்த ரெண்டு வரியால மனசில ஆணி அடிச்சிட்டீங்க

Unknown said...

தமிழ் பதிவுலக வாசகர்களின் கதையார்வத்திற்கு விருந்து படைக்க நல்லதொரு கதையாசிரியர் கிடைச்சாச்சு.....

பொதுவா அனுபவிச்சு எழுதுறது தான் எழுத்து... தகப்பன் ஆகும் முன்னே ஒரு தகப்பனின் உணர்வுகளை இவ்வளவு அழகாய் உள்வாங்கி அப்படியே எழுத்துக்களில் செதுக்கியிருக்கப்பா... ராசாத்தி நிச்சயம் படிக்கிறவங்க மனசுல்ல நீண்ட நாள் நிலைச்சுருப்பா என்பதில் எந்த மாற்று கருத்துமில்ல... தொடர்ந்து கதைகளை எழுதுமாறு கேட்டு கொள்கிறேன்... வாழ்த்துக்கள்

Geetha Sambasivam said...

ராசாத்தி, ராசாத்தி, ராசாத்தி,
கோபி, அப்பான்னா எப்படி இருப்பாங்கனு நல்லாப் புரிஞ்சு வச்சிருக்கீங்க, கதை நிகழ்வுகள் நடக்கிற ஒன்று என்றாலும் அதன் தாக்கம் ஒரு அப்பாவிடம் எவ்வாறு இருக்கும்னு புரிய வைக்கிறீங்க.

கோபிநாத் said...

@ துரியோதனன்
\\நல்லா இருந்தது. கடைசியா கண் கலங்க வச்சிட்டிங்க\\

நன்றி துரியோதனன் ;)

@ Arunkumar
\\amazing story writing skills...
romba romba rasichen Gopi..

avaroda saavula oru artham irukkudhu... kadhai super..

pls write more !!!\\

நன்றி அருண்....கண்டிப்பாக நிறைய எழுத முயற்சிக்கிறேன் ;)

@ Praveena Jennifer Jacob
\\மனதை உலுக்கும் இத்தகைய கதையை படித்து வெகு நாட்களாகி விட்டது,
அருமையான எழுத்து நடை.\\

நன்றி ப்ரவீனா..;)

@ காட்டாறு
\\எளிமையான நடையில், ஒய்யாரமாய் ஆரம்பித்து, உருக்கமாய் ஓடி, பதறலாய், அமைதியாய் ஒரு முடிவு. நல்லா இருக்குது கோபி.\\

காட்டாறு அக்கா...உங்க பின்னூட்டம் கூட கவிதை மாதிரியே இருக்கு....நன்றி ;)

@ நான் சாக விரும்புகிறேன் , ஏனெனில்

//வாழ்க்கையில தோத்துப்போறதுலயும் ஒரு சந்தோஷம் இருக்குன்னா அது குழந்தைங்ககிட்‌ட தோத்து போறதுல‌தான்// இந்த ரெண்டு வரியால மனசில ஆணி அடிச்சிட்டீங்க

மிக்க நன்றிங்க....உங்க பெயரை கொஞ்சம் மாத்திவைக்க கூடாதா!? ;)


@ தேவ் | Dev
\\தமிழ் பதிவுலக வாசகர்களின் கதையார்வத்திற்கு விருந்து படைக்க நல்லதொரு கதையாசிரியர் கிடைச்சாச்சு.....

பொதுவா அனுபவிச்சு எழுதுறது தான் எழுத்து... தகப்பன் ஆகும் முன்னே ஒரு தகப்பனின் உணர்வுகளை இவ்வளவு அழகாய் உள்வாங்கி அப்படியே எழுத்துக்களில் செதுக்கியிருக்கப்பா... ராசாத்தி நிச்சயம் படிக்கிறவங்க மனசுல்ல நீண்ட நாள் நிலைச்சுருப்பா என்பதில் எந்த மாற்று கருத்துமில்ல... தொடர்ந்து கதைகளை எழுதுமாறு கேட்டு கொள்கிறேன்... வாழ்த்துக்கள்\\

உங்க பின்னூட்டமும் உங்கள் விமர்சனமும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது அண்ணா ;) மிக்க நன்றி ;)

கண்டிப்பாக தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.

@ கீதா சாம்பசிவம்

\\ராசாத்தி, ராசாத்தி, ராசாத்தி,
கோபி, அப்பான்னா எப்படி இருப்பாங்கனு நல்லாப் புரிஞ்சு வச்சிருக்கீங்க, கதை நிகழ்வுகள் நடக்கிற ஒன்று என்றாலும் அதன் தாக்கம் ஒரு அப்பாவிடம் எவ்வாறு இருக்கும்னு புரிய வைக்கிறீங்க.\\

மிக்க நன்றி தலைவி ;))

ஜி said...

:(((

arumaiyaana nadai Gopi....