Monday, October 22, 2007

வேற வழியில்ல அதனால இப்படி....




அவளும் அப்படி !



இவளும் இப்படி !


என்ற பதில்களில்


மூழ்கி "நீயும் இப்படி"


என திகைத்தேன்





அவர்கள் இப்படி தான் !

இவர்கள் அப்படி தான் !

என்ற பதிலில்கரை

இறங்கினால்

நானும் இப்படியே


இருக்கலாமோ

என குழப்பினேன்


நன்றி : ஏன் அப்படித்துவம்


டிஸ்கி : இது யாரையும் மனதில் கொண்டு போட்ட பதிவு இல்லை. முக்கியமா சூடானில் இருக்கும் பதிவரை மனதில் நிறுத்தி போட்ட பதிவு அல்ல.. அல்ல.. அல்லவே அல்ல..

Tuesday, September 18, 2007

நாங்களும் ஓட்டுவோம்ல....




இது கொசுவத்தி பதிவு மக்கா...

நம்ம சின்ன அம்மிணி அக்கா சமீபத்தில் சைக்கிள் ஓட்டியதை பத்தி பதிவா போட்டுயிருந்தாங்க, அதை படிச்சதும் நான் சைக்கிள் ஒட்டியது ஞாபகத்துல வந்துடுச்சி.
(சந்தோஷமான விஷயங்களை எல்லாம் இப்படி யாராவது ஞாபகப்படுத்தனாதான் உண்டு)

கொசுவத்தியை அப்படியே சுத்திக்கிட்டு போனா ஒரம்போ ஒரம்போ ருக்குமணி வண்டிவருதுன்னு நம்ம கார்த்திக் டவுசர் போட்டுக்கிட்டு பாட்டு பாடுவரே அதே மாதிரி நானும் டவுசர் போட்ட காலத்துல போயி நிறுத்துறேன்.

"புள்ளையா இது..."

"சனியனே..."

"கிரவுண்டுல போயி ஓட்ட வேண்டியது தானே..."

"இதுங்களுக்கு லீவு விட்டதும் விட்டாங்க நம்ம காலை ஒடிக்குதுங்க..."

ச்ச நிறுத்துன இடம் சரியில்லைங்க சைக்கிள் ஓட்ட பழக்கும் போது வாங்கிய திட்டுக்கள் தான் முதல்ல ஞாபகத்துக்கு வருது (இதெல்லாம் என்ன பெருமையா கடமை டவுசர் போட்ட காலத்துல ஓட்ட கத்துக்கிட்ட ஒவ்வொருத்தரோட கடமை) கிட்ட தட்ட எல்லோரும் இந்த மாதிரி திட்டு வாங்கியிருப்பிங்க.

எனக்கு முதல் போணி அப்பா தான். மனுசன் வேலையை முடிச்சிட்டு எப்படா படுப்போம்ன்னு வருவாறு அவரு வந்தவுடனே சைக்கிளை உள்ளே கொண்டுவரதுக்கு முன்னாடி போய்

"அப்பா....அப்பா வண்டியோட்ட கத்துக் கொடுப்பா"

"ம்க்கும் துரைக்கு இது மட்டும் தான் கொரைச்சல் புக்கை எடுத்து படிடான்னா படிக்காதே இதுக்கு மட்டும் தூங்காம முழிச்சிருந்து வந்துடுவியே"....இப்படி எல்லாம் வாயை துறந்து ஒரு நாளும் சொன்னது இல்ல.


"சரி வா ஆரம்பிப்போம்"ன்னு சைக்கிள் மேல ஏத்திவிடுவாரு.

"ப்பா நல்லா பிடிச்சிக்கப்பா.."

"சரிடா....முதல்ல மிதி"

வலது கால்ல ஒரே மிதிதான் இடது கால் முட்டியில சைக்கிள் பெடலலா ஓங்கி ஒரு அடி அப்படியே பொத்துன்னு விழுந்து சில்லரையை அள்ள வேண்டியது தான். பெத்த கடமைக்கு என்னையும் நாளைக்கு வேலைக்கு போற கடமைக்கு சைக்கிளையும் தூக்கிட்டு நம்ம தலையில ஒரு செல்ல தட்டு

"முதல்ல உன் சைசுக்கு இருக்குற வண்டியை ஓட்ட கத்துக்க அப்புறம் இந்த வண்டியை ஓட்டலாம்"

"சரி அப்ப காசு கொடு"

"இதுக்கு தாண்டா நான் வாயே தொறக்குறதுல்ல"....இந்தா புடின்னு காசை கொடுப்பாரு

காசை வாங்கியவுடன் கால் நேராக தெரு முனையில இருக்குற சைக்கிள் கடையை நோக்கி ஒடி 1 மணிநேரத்துக்கு சைக்கிளை எடுப்பேன். அதுவும் சிகப்பு கலருல ஒரு சைக்கிள் இருக்கும். அது என்ன மாயமோ தெரியல அப்ப எல்லாம் அந்த வண்டியை தவிர வேற எந்த வண்டியும் பிடிக்காது (வேற எந்த வண்டியும் எட்டாதுன்னுங்கிறது வேற விஷயம்)

அந்த சின்ன வண்டிக்கு ஏற்றார் போல சின்னதாக கேரியர் கூட இருக்கும். அந்த வண்டி எந்த கம்பெனி வண்டின்னு அந்த கடைக்காரனுக்கே தெரியாது அந்த அளவுக்கு ஒன்னு ஒன்னும் ஒவ்வொரு ஷேப்புல இருக்கும்.

"அண்ணா சைக்கிள்ள காத்து கொஞ்சம் கம்மியாருக்கு"...

"விழுந்துவார்ரத்துக்கு இதுபோதும் போடான்னு" சைக்கிள்கடைக்காரனின் வாழ்த்து செய்தியோட வண்டி மேல ஏறி வுட்கார்ந்து, பக்கத்துல இருக்குற கல்லுமேல ஒரு காலை வச்சி இன்னொரு காலால சைக்கிள் வலது பெடலை ஒரு மிதி. மிதிக்கிறதுக்கு முன்னாடி பெல் எல்லாம் அடிச்சி ஊருல இருக்குற எல்லா சாமிக்கும், மக்களுக்கும் நான் சைக்கிள் ஓட்டுறதை சொல்லிடுவேன்.

அப்புறம் தான் இருக்கு விஷயமே கை ரெண்டும் மைக்கல் ஜாக்சான் டான்சு ஆடும் பாருங்க அப்படி ஆடும். என் ஆட்டத்தை பாக்குறதுக்குன்னே எங்கிருந்து தான் வருவாங்களோ எல்லா வேலையும் வுட்டுட்டு வறவுங்க மேல எல்லாம் ஒரு இடி..."சனியனே புள்ளையா இது..."கிரவுண்டுல போயி ஒட்ட வேண்டியது தானே"..(திட்டாம ராசா பார்த்து ஓட்டுப்பான்னு கொஞ்சுவாங்களா..) ச்ச எப்படியும் நாமாகவே ஓட்ட கத்துக்க முடியாதுன்னு நினைச்சிகிட்டு இருக்குற சமயத்துல தான். ஊரில் இருந்து எங்க பெரியம்மா பையன் வந்தான்.
அண்ணா எனக்கு சைக்கிள் ஓட்ட கத்துக் கொடுன்னு ஒரு அப்லிக்கேசனை போட்டாச்சி.
சரி சித்தி பையன்னு பாசத்துல சொல்லிக் கொடுத்தான். "டேய் குனியாதடா, நேரா பாரு,
கைய எதுக்கு இந்த ஆட்டு ஆட்டுற, எப்ப செஞ்ச பாவமே என்க்கிட்ட மாட்டிக்கிட்டு தலை கீழா நின்னு தண்ணி குடிச்சான் நானும் கீழ எல்லாம் விழுந்து பல சில்லரைகள் எல்லாம் அள்ளி எப்படியோ ஓட்ட கத்துக்கிட்டேன்.

இப்ப கத்துக்கிட்டாச்சி அப்புறம் என்ன ஏதற்க்கெடுத்தாலும் சைக்கிள் தான். ஏதாவது சாக்கு போக்கு சொல்லி சைக்கிளை வாடகைக்கு எடுத்து சுத்த வேண்டியது தான். எத்தனை நாள் தான் வாடகையில சுத்தறது?. சொந்த வண்டி வேணுமுன்னு அம்மா முலமாக என் அப்லிகேசனை தட்டி விட்டேன். ஒரு செக்கனண்டு BSA SLR வண்டியை சர்வீஸ் செய்து சாவியை கொடுத்தாரு அப்பா.

"முதல்ல பூஜை பண்ணிட்டு வண்டியை எடு..."

"எது இந்த வண்டியையா...அவன்வன் புசுது புதுசா வண்டியை வச்சி சீன் போட்டுக்கிட்டு இருக்கானுங்க செக்கனண்டு வண்டி எல்லாம் எவன் ஓட்டுவான்"

எனக்கு புதுசு தான் வேணும்முன்னு அந்த வண்டியை ரெண்டு நாளா தொடாமல் இருந்தேன். அப்புறம் வேற வழியில்லன்னு அந்த வண்டியை ஓட்ட ஆரம்பிச்சேன். அப்புறம் அந்த வண்டி இல்லாமா எங்கையும் போறதுல்ல. 5வருஷம் அதே வண்டி தான் வருஷம் வருஷம் சர்வீஸ்க்கு விடும் போதெல்லாம் கடக்காரன் இதுல என்னத்த இருக்குன்னு சர்வீஸ்க்கு விடுறன்னு ஒரு பார்வை பார்பான். அந்ந அளவுக்கு வண்டியை கண்டம் பண்ணிவிச்சிருப்பேன். என் கோவத்தை எல்லாம் அது மேல தான் காட்டியிருக்கேன்.

ஸ்கூல் முடிஞ்ச பிறகு நானும் என் நண்பர்களும் வண்டியை மாத்திப்போம். பிகருங்க முன்னாடி கட்டு கொடுக்கிறேன்னு சொல்லிட்டு சில்லரை அள்ளியது, டபுல்சு, ட்ரிபுல்சுன்னு கலக்கியது எல்லாமே அந்த வண்டியில தான். எதிர் காத்துல ஏறி நின்னுக்கிட்டு மிதிச்சிக்கிட்டே அந்த காத்தை அனுபவிக்கும் போது வரும் பாருங்க ஒரு சந்தோஷம் அட அட அப்படி ஒரு ஆனந்தம் அதுல. எனக்கு தெரிஞ்சி அந்த வண்டியை ஆயுதபூஜைக்கு மட்டும் தான் சுத்தமா தொடைப்பேன். அதுவும் வீட்டுல கத்து கத்துன்னு கத்திய பிறகு தான்.

என்னை படிக்க வைக்குறதே பெரிய விஷயம்ன்னு நினைச்சிக்ட்டு இருக்குற நிலைமையிலும் என் ஆசையை நிறா ஆசையாக்கக் கூடாதுன்னு எனக்குன்னு சொந்தமா ஒரு செக்கனண்டு வண்டியை தான் வாங்கி கொடுத்தாரு எங்க அப்பா. இது தான் என்னால முடிஞ்சதுன்னு வாய்விட்டு கூட சொல்லியிருக்காரு. அப்படி இருந்தும் கூட எப்போதாவது அப்பாவை ரயில்வே ஸ்டேசனுக்கு கொண்டு போயி விடுன்னு அம்மா சொன்னா.."சைக்கிளை ஸ்டாண்டுல போட்டுட்டு போக சொல்லும்மா...எனக்கு வேற வேலையிருக்குன்னு" போயிடுவேன். இன்னிக்கும் யாருமே ஓட்டலனாலும் கூட அந்த வண்டி தூக்கி போடமா என் வீட்டுல ஒரு ஒரமா வச்சியிருக்காரு.

சில பிரிவுகள் தேவைதான்னு தோணுது, அப்ப தான் கூட இருந்தையும், இருந்தவுங்களையும் பற்றி புரிஞ்சிக்கவும் உணரவும் முடியுது.

Friday, August 31, 2007

துணை





பனி பொழியும் அந்த காலை வேலையில் கையில் ஆவிபரக்கும் தேனீருடன் இளையராஜாவின் பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா பாடலை தன்னை மறந்து கேட்டு கொண்டுயிருந்த புஸ்பா ரயில் வரும் சத்தம் கேட்டு மெல்ல கண்விழித்தாள்.
தன் வாழ்க்கையில் ஒரு அங்கம் ஆகிவிட்ட ரயிலை பார்த்ததும் "வந்துட்டியா...கொஞ்சம் நேரம் பாட்டு கேட்கவிடாதேன்னு" செல்லமாக கோவித்துக் கொண்டால்.

எத்தனை தடவை இந்த பாடலை கேட்டிருப்பாள்...எங்க பாடினாலும் அப்படியே நின்னு கேட்டுக் கொண்டுயிருப்பாள். சொன்னால் புரியாத மகிழ்ச்சி அது. அவனுக்காக எத்தனை இரவுகளில் பாடியிருப்பாள். இதோ இப்போது கூட இரண்டு நாள் முன்பு அவன் பிறந்த நாளுக்கு போனில் பாடினாள். புஸ்பாவுக்கு 51 வயதுன்னு பார்ப்பவர்கள் யாரும் சொன்னது இல்லை. எப்போதும் முகத்தில் ஒரு புன்னகை அந்த புன்னகை தான் அவளுக்கு பலமும் பலவீனமும் கூட.

கோடம்பாக்கத்தில் இருந்து சென்ட்ரலுக்கு தினம் தோறும் பயணம். கிட்ட தட்ட 22 வருஷம் இதே ரயில் பயணம் கொஞ்சம் கூட சலிக்கவில்லை அவளுக்கு. தினமும் புதிது புதுதாக பிறப்பவளுக்கு எப்படி சலிக்கும் இந்த பயணம். ஒரு ரயில் விபத்தில் காதல் கணவனை பலிகொடுத்துவிட்டு கையில் 5 வயது குழந்ததையுடன் தனியாக நின்று வாழ்க்கையை ஜெய்த்தவள். மகன் விஜயனுக்கு இவள்தான் முதல் தோழி. விஜயன் அம்மா என்று சொன்னதை விட புஸ்பா என்று பெயர் சொல்லி அழைத்தது தான் அதிகம். அந்த அளவுக்கு அவன் எப்படி வாழ வேண்டும் என்று நினைத்தானோ அப்படி வாழ வழிவிட்டவள்.

அவன் காதலித்த பெண்கூடவே திருமணம் நடத்திவைத்தால். ரெண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு வெள்ளி இரவில் "அம்மா எனக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்திருக்கு போகிறேன்னு" சொன்னான். ஏர்போர்ட்டில் கூட தன் கண்ணீர் அவன் மனதுக்கு சங்கடத்தை கொடுத்துவிட கூடாது என்பதற்காக கண்ணீருக்கு கூட கட்டளை இட்டு காக்க வைத்தவள். அதற்கு அடுத்த நாள் இதே போன்ற ஒரு காலை வேலையில்தான் செழியனை பார்த்தாள். ஏக்கமும் சோகம் கொண்ட முகத்துடன் இவளை பார்த்த படி உட்காந்துயிருந்தான்.

--------------------------------------------------------------------------------------------

கையில் இருந்த தேனீரை குடித்த படியே செல்போனில் FMஜ அழுத்தினான் செழியன்.
"பிள்ளை நிலா" பாடல் முடியும் தருணம் "ச்ச பாட்டு முடிய போகுது மிஸ் பண்டிட்டமே"ன்னு ஒரு சின்ன எரிச்சலுடன் ரயிலுக்காக காத்துயிருந்தான்.

நுங்கம்பாக்கத்தில் இருந்து பீச்டேஸ்சனுக்கு தினம்தோறும் அவனது பயணம். சரியாக பெண்கள் கம்பார்ட்மென்ட்டுக்கு அடுத்த கம்பார்ட்மென்ட்லில் வலதுபுற ஜன்னலுக்கு அடுத்த இருக்கை தான் அவனுக்கு பிடித்த இருக்கை, அதுவும் இந்த ரெண்டு வருடங்களாகத்தான்.
இரண்டு நாளைக்கு முன்பு தான் தன்னோட 27வது பிறந்ந நாளை கொண்டாடினான் இதே பாடலுடன். அவன் முகத்தில் எப்போதும் ஒரு டென்சன் இருக்கும். "கொஞ்சமாச்சும் சிரியேண்டான்னு" அவன் அம்மா அடிக்கடி சொல்லுவாள் "அட போம்மா"ன்னு பதில் வரும் சிரிக்காமலே.

தந்தையை இழந்து பின் அம்மாவுக்கு அதிகம் தொல்லை கொடுக்காமல் அம்மாவின் ஆசைகள்தான் தன்னோட ஆசைகள் என்ற முடிவுடன் வாழ்ந்து கொண்டுயிருந்தான். அம்மா என்ன படிக்க சொன்னாலோ அதையே படித்தான். ATM கார்ட்டு நிறைய சம்பளம். அம்மா ஆசை பட்டது போல முன்புறம் தோட்டம் வைத்த ஒரு வீடு. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு வெள்ளிக்கிழமை இரவு கட்டிலில் இருந்த அம்மாவின் கை தன்னை தொட்டவுடன் பதற்றத்துடன் எழுந்து

"என்னம்மா என்னம்மா பண்ணுது...

"ஒன்னும் இல்லைடா உனக்கு அதிகம் கஷ்டம் கொடுத்துட்டேண்டா உன்னை உன் இஷ்டம் போல வாழவிடல நான் எல்லாம் ஒரு அம்மாவாடா என்னை மன்னிச்சிடுடா"

"என்னமா லூசு மாதிரி பேசுற அப்படி எல்லாம் இல்லம்மா நான் நல்லா இருக்குறதுக்கு காரணமே நீ தானம்மா"

"இல்லடா நான் உனக்கு ரொம்ப கஷ்டம் கொடுத்துட்டேன் அடுத்த பிறவின்னு ஒன்னு இருந்தா நீ எனக்கு அம்மா நான் உனக்கு பிள்ளை" என சொல்லிவிட்டு கடவுளிடம் மனுக் கொடுக்க சென்றுவிட்டால். அடுத்த நாள் இதே போன்ற ஒரு காலை வேலையில் தான் புஸ்பாவை பார்த்தான். தன் ஏக்கத்தை அரவணைக்கும் புன்னகையை அவள் முகத்தில் பார்த்தான்.

ஸ்டேசணுக்குள் வண்டி வந்தததும் முகத்தில் புன்னகையுடன் ஏறினான்.

புஸ்பா: ஏன்டா ஒரே சிரிப்பு

செழியன்: ஒன்னும் இல்லம்மா

புஸ்பா: டேய் திருட்டு பையலே நானும் பார்த்துக்கிட்டு இருக்கேன் அந்த பெண்ணும் ஒரு வாரமா இதே கம்பார்ட்மென்ட்டுல வருது என்ன விஷயம்

செழியன்: ம்....அதுக்கு ஒரு சமையல்காரன் வேணுமாம்

புஸ்பா: ஒ...சார் தான் புல் குவாலிபைடு ஆச்சே அப்லை பண்றது

செழியன்: அம்மா கொஞ்சம் சும்மா இருக்கியா....இன்னிக்கு மெடிக்கல் செக்கப்புக்கு போகனும் நான் பர்மிஷன் சொல்லிட்டேன் ரெடியா இருங்க

புஸ்பா: உன்னால் தானே உயிர் சுமந்தேனே..................

Wednesday, August 08, 2007

கூட்டாஞ் சோறு நினைவுகள்


சனிக்கிழமை - 09.08.2006

விடியல் காலையில் 8 மணிக்கு விஜயனின் செல்போன் அடித்தது

விஜயன்: ஹலோ.....

தீபா: ஹலோ.....டேய் எல்லாம் ரெடியா டா நாங்க எல்லாம் இன்னும் 1 மணி நேரத்துல அங்க இருப்போம்

விஜயன்: என்ன எல்லாம் ரெடியா? ....யாரு நீங்க? எதுக்கு இங்க வரபோறிங்க?

தீபா: யாரு நீங்களா????? டேய் லூசு....நான் தீபா பேசுறேன் டா

விஜயன்: ஓ....அப்படியா.....சரி பேசுங்க

தீபா: டேய் வெறுப்பேத்தாத, இன்னும் ஒரு மணிநேரத்துல நானு, அனிதா, மாலதி அங்கஇருப்போம் எல்லாம் ரெடியாக இருக்கனும்

விஜயன்: ஏய்....என்ன ரெடியா இருக்கனும்? காலங்காத்தால நீ தான் வெறுப்பேத்துற...கொஞ்சம் நிம்மதியா தூங்க விடுவியா

தீபா: அடப்பாவிங்களா...இன்னுமாடா தூங்குறிங்கன்னு அதிர்ச்சியில் மாலதியிடம் போனை கொடுத்தால்

விஜயன்: ம்....ஆமா.....சரி என்ன விஷயம்? சீக்கிரம் சொல்லி தொலை

மாலதி: டேய் கும்பகர்ணங்களா இன்னிக்கு உங்க வீட்டில் தான் கூட்டாஞ் சோறு

விஜயன்: யாரு சொன்னா உனக்கு?

மாலதி: நீயும் புகழும் தானே சொன்னிங்க....இந்த வாரம் எங்க வீட்டில் கூட்டாஞ் சோறு அதுவும் பிரியாணின்னு

விஜயன்: நாங்க எல்லாம் ஒரு ஆளுன்னு நாங்க சொன்னதை எல்லாம் நம்பிட்டியா!!!! இரு புகழ்க்கிட்ட பேசு........மச்சி....இந்தா வீட்டில் இருந்து அம்மா பேசுறாங்க

புகழ்: அம்மா எப்படிம்மா இருக்கிங்க.......சொல்லும்மா என்ன விஷயம்

மாலதி: மகனே தூங்குமூஞ்சி.....சீக்கிரம் சமையலுக்கு எல்லாத்தையும் ரெடிப்பண்ணு ராசா

புகழ்: என்னம்மா ஆச்சு உனக்கு? மாலதியிடம் போனை வாங்கிய அனிதா

அனிதா: புகழ்....நான் அனிதா பேசுறேன் பிரியாணி என்னாடா ஆச்சு?

புகழ்: ச்ச...நீயா?

அனிதா: ஏய், நாங்க எல்லாம் ரெடியாகிட்டோம். இன்னும் 1 மணிநேரத்துல அங்க இருப்போம் எல்லாம் ரெடியாக இருக்கனும்......போனை துண்டித்துவிட்டு அனைவரும் கிளம்ப ரெடியானார்கள்

புகழும், விஜயனும் தூக்கம் கலைந்து இப்ப என்ன செய்வதுன்னு முழித்துக் கொண்டுயிருந்தனர்.

விஜயன்: மச்சி பிரியாணிக்கு என்னன்ன வேணும்கிறதை எல்லாம் வாங்கிட்டு வா....நான் ரூமை சுத்தம் பண்றேன்

புகழ்: பிரியாணிக்கு என்னென்ன வேணுமுன்னு எனக்கு என்ன டா தெரியும்....

விஜயன்: வீட்டில் இருந்து அம்மா சமையல் குறிப்புகள் எழுதி அனுப்பியிருக்காங்கல்ல..அந்த நோட்டை பாரு அதுல தேவையான பொருட்கள்ன்னு எழுதியிருக்குல்ல அதை மொத்தத்தையும் வாங்கிட்டு வா

புகழ்: சரி மச்சி என்று கூறிவிட்டு புத்தகத்தை தேடி கொண்டே "ஏண்டா நமக்கு இதெல்லாம் தேவையா....போனமா போட்டாதை தின்னமான்னு இருந்திருக்கனும். வாயவச்சிக்கிட்டு சும்மா இல்லாம வாங்கன்னு வேற கூப்பிட்டாச்சு....எப்படி சமாளிக்க போறோமோ"

விஜயன்: மச்சி...இதுக்கே சளிச்சிக்கிட்டா எப்படிடா...போயி வாங்க்கிட்டு வா சீக்கிரம்....இன்னும் 15 நிமிஷத்துல வந்துடுவாளுங்க என்று சொல்லிக் கொண்டுயிருக்கும் போதே....கதவருகில் தீபா, அனிதா, மாலதி மூவரும் "அய்யா....அம்மா....பிரியாணி இருந்த போடுங்க....அய்யா....அம்மா...ராத்திரியில்ருந்து ஒன்னுமே சாப்பிடலை அய்யா"

புகழ்: நாம பிரியாணி செய்ய போறது இந்த ஏரியா பிச்சைக்காரிகளுக்கு கூட தெரிஞ்சி போச்சு போல டா, என்று இருவரும் ஜன்னலின் வழியே எட்டி பார்த்தனர்.

புகழும், விஜயும் கோரசாக "அய்யோ.....வந்துட்டாளுங்கடா ராப்பிச்சை காரிங்க...அலரிஅடித்துக் கொண்டு உடைகளை சரி செய்து....வீட்டை சுத்தம் செய்கிறோம் என்ற நினைப்பில் ஏதோ செய்து கொண்டுயிருந்தார்கள். வெளியில் இருந்து மூவரும் "பிரியாணி போடுற மகராசனுங்களா இன்னுமாடா தூங்கிக்கிட்டு இருக்கிங்க"ன்னு கத்த ஆரம்பித்தனர்.

புகழ் ஓடிபோயி கதவை திறந்தான்.....பின்னாலயே வந்த விஜயனும் கூட சேர்ந்து "வாங்க வாங்க ராப்பிச்சை...ச்சே...பகல் பிச்சை தாய்குலமே...வாங்க"...பணிவுடன் அழைத்தனார்.

தீபா: அய்யாங்க ரெண்டு பேரும் போன வாரம் எங்க வீட்டில் இப்படி தானேடா வந்து பிச்சை எடுத்திங்க

விஜயன்: ம்க்கும் இதெல்லாம் மட்டும் நல்லா ஞாபகத்துல இருக்குமே உனக்கு.....

அனிதா: சரி....சரி என்னென்ன வாங்கிட்டிங்க சீக்கிரம் ஆரம்பிக்கனும்....அப்ப தான் சாயந்திரம் பீச்சிக்கு போகலாம்

புகழ்: வாங்குறதுக்கு தேவையான காசும், பையும் தவிர வேற ஒன்னும் வாங்கல....என்று புகழ் பம்ம

தீபா: அப்பவே போன் பண்ணி சீக்கிரம் வாங்கி வையுங்கடான்னு சொன்னோம்ல

விஜயன்: ஆமா, சொன்னிங்க இப்ப யாரு இல்லன்னா

மாலதி: டேய்......காலையில இருந்து பச்சை தண்ணிக்கூட கூடிக்கல டா....

புகழ்: மாலதி அப்ப ரஸ்னா குடிக்கிறியா ஆனா பச்சையாக இருக்காது பரவாயில்லையா

மாலதி: என்ன நக்கலா....உங்ககூட பேசி பேசி இருக்குற கொஞ்ச எனர்ஜியும் போயிடும் போல இருக்கே எதுவும் தெரியலைன்னா சொல்ல வேண்டியது தானே நாங்களே எல்லாம் வாங்கிவந்துயிருப்போம்ல

விஜயன்: இதெல்லாம் நாங்க சொல்லனுமாக்கும்......இத்தனை நாளா எங்ககூட இருக்கிங்க இதுகூட தெரியாத உங்களுக்கு

அனிதா: சரி....சரி....விடு......புகழ் சீக்கிரம் போயி....எல்லா அயிட்டத்தையும் வாங்கிட்டு வா...அப்புறம் மறக்காம பிரியாணி அரிசி, பச்சடிக்கு தயிரு, கொஞ்சம் தக்காளி, வெல்லரிக்கா, ஜஸ்கிரிம், இப்ப எங்களுக்கு எல்லாத்துக்கும் சூப்பர் டீ...ஓகே

புகழ்: அப்ப இந்த கோழி கறி !!!!

மாலதி: டேய்.......இருக்குற பசிக்கு உன்னை அப்படியே தின்னுடுவேன்.....

தீபா: என்னடா இப்படி கொல்றிங்க கறி இல்லாமையா....சீக்கிரம் வாங்கிட்டு வாங்கப்பா....பீலிஸ்

புகழ்: ஓகே....ஓகே....கூல்....கூல்....நோ டென்சன்....இதெல்லாம் சகஜம்ப்பா ன்னு புகழ் கடைக்கு கிளம்ப

விஜயன்: எக்ஸ்குசுமி நாங்க கடைக்கு போயிட்டு வரதுக்குள்ள வீட்டை இதே போல அழகா வச்சிருங்க அலங்கோலமா எதுவும் பண்ணிடாதிங்க என்று விஜயனும் தன் பங்குக்கு ஒரு பிட்டை போட்டு விட்டு ஒடினான் வந்த மூவரும் வீட்டை சுத்தி பார்த்துக் கொண்டுயிருந்தனர்.

தீபா: ஏய் இங்க பாருங்க டி.....புக்கை எல்லாம் எப்படி போட்டு வச்சிருக்கானுங்கன்னு

மாலதி: புக்கை மட்டுமா.....அங்க பாரு துணியை கூட ஒழுங்க போட்டு வைக்காம இப்படிஅலங்கோலமா இருக்கு இதுல வேற இதுதான் இவுனுங்களுக்கு அழகாம்

அனிதா: ஏய் சும்மா எதுக்கு அவுனுங்களை குத்தம் சொல்லிக்கிட்டு நாம மட்டும் என்ன ஒழுங்கா. பேச்சுலர் வாழ்க்கையின்னா இப்படி தான் இருக்கனும். பாவம்டி அவுனுங்க பார்ட்டைம் வேலைக்கு போயிக்கிட்டு காலேஜிக்கும் வந்துக்கிட்டு.....பாவம்ப்பா

தீபா: சரி....சரி ......ஓவர் பீலிங்கஸ் எல்லாம் வேண்டாம் நாம இன்னிக்கு ஜாலியாக இருக்கனுமூன்னு வந்திருக்கோம்....

அனிதா: ஆமா...அவுனுங்க சுத்தம் செய்யலன்ன என்ன நாம சொய்வோம்......நம்ம புள்ளைங்களுக்கு நாம செய்யாம வேற யாரு செய்ய போறா....என்று ஆளுக்கு ஒரு வேலையாக எடுத்து கொண்டு ரூமை சுத்தம் செய்தனர்....பொருட்கள் வாங்க போன இருவரும் வந்துவிட்டனர்.

தீபா: புகழ் இங்க வா....என்னாது இது என்று கையில் இருந்த சிகரெட் பக்கெட்டை காட்டினால்.

புகழ்: ஒன்னும் தெரியாது போல...ஹைய்யா.....பெட்டி கோல்டு கலருல நல்லாயிருக்கே....இன்னாதுப்பா இது !!!

தீபா: டேய் கிண்டலா....நான் அன்னிக்கே இதை பிடிக்காதிங்கன்னு சொன்னேன்ல

விஜயன்: ஆமா சொன்னே அதான் வில்ஸ்ஸை விட்டுட்டு இப்ப கிங்சுக்கு மாறிட்டோம்...நீ சொல்லி நாங்க கேட்காம இருப்போமா

தீபா: உதை வாங்க போறிங்க ரெண்டு பேரும் இனி இந்த சிகரெட் பழக்கத்தை விட்டுடுங்க புரியுதா

புகழ்: ம்ம்...சரி சரி இன்னிக்கு மட்டும் எதுவும் சொல்லாதே.....ப்லிஸ் ஜாலி தான் முக்கியம்...ஓகே

அனிதா: சரி எண்ணெய் எங்கடா இருக்கு.....

புகழ்: இதோ.....விவிடி கோல்டு உங்க கேசத்திற்கு உகந்த எண்ணெய்...விவிடி கோல்டு

விஜயன், தீபா, அனிதா, மாலதி: ஹிஹிஹிஹிஹிஹி.....

அனிதா: அடபாவி சமையல் எண்ணெய் டா.....நாளைக்கு வாக்க பட போற இடத்துல எப்படி தான் பொண்டாட்டிக்கு சமைச்சி போட போறியோ ;-)))

விஜயன்: போதும்.....போதும்....பேச்சை குறைச்சிட்டு சமையலை ஆரம்பிங்க....நாங்க குளிச்சிட்டு வரோம்

மாலதி: ஹைய்....இது நல்ல கதையா இருக்கே....ராசா இது கூட்டாஞ் சோறு எல்லோரும் ஒன்னா ஆளுக்கு ஒரு வேலை செய்யனும்....

புகழ்: சரிப்பா..ஆரம்பிங்க ஒரு 15 நிமிஷத்துல வந்துடுகிறோம்.

சரி போங்கடான்னு சொல்லிவிட்டு எண்ணெயை பாத்திரத்தில் விட்டு....சூடானதும் கடுகு...பச்சை மிளகாய் இன்னும் இத்தியாதி இத்தியாதி எல்லாம் போட்டு....கூடவே கறியையும் போட்டு ஒரு வழியாக கறியை ரெடி செய்து விட்டனர். மற்றொரு புறத்தில் ஒரு குக்கரில் சாதம் ரெடியாகி கொண்டுயிருந்தது. மாலதியும் புகழும் பச்சடிக்கு ரெடி செய்து கொண்டுயிருந்தனர். தீபா பாத்திரங்களை கழுவி இடத்தை சுத்தம் செய்துக் கொண்டுயிருத்தால். அனிதாவும் விஜயனும் பிலாஸ்க்கில் இருந்த டீ யை ஊற்றி அனைவருக்கும் கொடுத்து கொண்டுயிருந்தனர்.

புகழ்: வாசனை அப்படியே ஆளை தூக்குதுப்பா...கலக்குற அனிதா

அனிதா: உண்மையாவாடா.....ரொம்ப தேங்கஸ் டா...உனக்கு நாளைக்கு நான் ஜஸ்கீரிம் வாங்கி தறேன்னா

விஜயன்: அடப்பாவி நாம எல்லாம் தானே சேர்ந்து செய்தோம். அது என்ன அனிதா மட்டும் கலக்குறா நாங்களும் தான் கலக்குறோம் என்று விஜயன் தீபாவை பார்த்து ஒரு பிட்டை கொளுத்தி போட்டான். விஜயன் கொளுத்தி போட்டது வினாகலை தீபா புகழை வீட்டை சுத்தி சுத்தி அடித்துக் கொண்டுயிருந்தால்.

மாலதி: விடாத தீபா போடு நல்லா போடு அவன...ஒரு குச்சி ஜஸ்க்காக எப்படி எல்லாம் பொய் சொல்லறான் பாரு....விடாத அவனை அடி...நல்லா அடி.

புகழ்: மச்சி வாடா இவ என்னை கொல்லாமா விட மாட்டா போல இருக்கு....நீ என் உயிர் நண்பன் இல்லையா....வா டா மச்சி

விஜயன்: சாரி மச்சி என்ன இருந்தாலும் நீ தீபாவை இந்த அளவுக்கு அசிங்கப்படுத்தியிருக்க கூடாதுன்னு எரியும் நெரிப்பில் இன்னும் கொஞ்சம் எண்ணெயை ஊத்தினான்

புகழ்: அனிதா நீ யாவது வா.....அய்யோ இதுக்கு மேல நான் எங்க ஓடுவேன்

அனிதா: போதும் போதும் எல்லாரும் வாங்க உப்பு காரம் எல்லாம் சரிய இருக்கான்னு பாருங்க.....சீக்கிரமா வாங்க

புகழ்: ஆஹா....ஆஹா....ஒட்டல் பொன்னுசாமி எல்லாம் இனி நம்மக்கிட்ட தான் பிரியாணி செய்ய கத்துக்கனும்....சூப்பர் அனிதா

தீபா: ம்....நல்லாயிருக்கு

மாலதி: கொஞ்சம் காரம் அதிகம் தான் ஓகே....

விஜயன்: சூப்பர் பிரியாணிப்பா

அனிதா: ஏய் லூசுங்களா.....இன்னும் சாதத்தை இந்த கறியோட சேர்க்கமாலே பிரியாணி சூப்பர்ன்னு சொல்றிங்களா....அய்யோ...கொடுமை

புகழ்: ஒ....அப்ப இது பிரியாணி இல்லையா......

அனிதா: ஆமா....இது வெறும் மசாலா போட்ட கறி மட்டும் தான்....இனிமேல் தான் சாதத்தோட சேர்க்கனுமுன்னு அனிதா புகழ்க்கு விளக்கி கொண்டுயிருக்க அதை எதையும் காதில் வாங்காமல் தீபா, மாலதி, விஜயன் மூவரும் பாத்திரத்தை காலி செய்து கொண்டுயிருத்தனர்.

அய்யோ....இதுக்கு மேல நாம பேசிக்கிட்டு இருந்தோம்.....நம்மக்கு அந்த வெறும் சோறு தான் கொடுப்பாங்க போலன்னு மற்ற இருவரும் தள்ளிக் கொண்டு பாத்திரத்தில் தலையைவிட்டு கறியை கடிக்க தொடங்கினர். ஒரு வழியாக கறியை தனியாக சாப்பிட்டு விட்டு சாதத்திற்கு பச்சடியை போட்டு கூட ஊறுகாய் சேர்த்து சாப்பிட்டு முடித்து ஏவ்வ்வ்வ்வ்வ்வ்ன்னு ஏப்பமும் விட்டாச்சி.
---------------------------------------------------------------------------------------

வியாழக்கிழமை 09.08.07
----------------------------------------
விஜயன் செல்போன் அழைப்பு மணிகேட்டு பழைய நினைவுகளில் இருந்து எழுந்தான். தீபாக்கிட்ட இருந்து தான் கால்

விஜயன்: சொல்லு தீபா.....

தீபா: டேய் எங்கடா இருக்கே சென்னை வந்திட்டியா.....சரி இரு எல்லோரும் கான்பரன்ஸ் கால்ல இருக்கோம்

விஜயன்: அடங்க மாட்டிங்களா நீங்க........இன்னும் அரைமணி நேரத்துல வந்துடுவேன்....அதுக்குள்ள எதுக்கு கான்பரன்ஸ்.

தீபா: ஒன்னும் பேசாதே இருடா.... என்று அவனையும் இணைப்பில் இணைத்தாள்

மாலதி, புகழ், அனிதா: ஹலோ...

விஜயன்: ஏய் மக்கா நான் விஜிடா..எல்லாரும் எப்படி இருக்கிங்க

புகழ்: ம்....எங்களுக்கு என்ன நல்லா தான் இருக்கோம் மச்சி....நான் பஸ் டாண்டுக்கு கிளம்பிட்டேன் இன்னும் ஒரு அரைமணி நேரத்துல வந்துடவல்ல....

அனிதா: ஏய்..அதெல்லாம் அவன் வந்துடுவான்...அவனுக்கு என்ன உன் ரூம் தெரியாதா என்ன?

மாலதி: ஏய்..அனி அவனுக்கா ரூம் தெரியாது.....பாவம் பசங்க 1 வருஷம் கழிச்சி நேருல பாக்குதுங்கல்ல அதுங்களுக்குல்ல ஆயிரம் மேட்டர் இருக்கும் அப்படியே ஒரு தம் அடிச்சிக்கிட்டு கிசு கிசு எல்லாம் பேசிட்டு ஒன்னா ரூமுக்கு வருவானுங்க....என்னடா புகழ் நான் சொல்லறது சரிதானே

புகழ்: எப்படி மாலதி உன்னால மட்டும் தான் எங்க மனசை புரிஞ்சிக்க முடியுது!!!!

தீபா: நீ இன்னிக்கும் என்க்கிட்ட வாங்க போற.....விஜி ஏதவாது பேசுடா....லைன்ல இருக்கியா இல்லையா

விஜயன்: ம்....இருக்கேன்....ஏய் மக்கா இன்னிக்கு ஆகஸ்டு 9 போன வருஷம் இதே நாள்ல தான் கூட்டாஞ் சோறு செய்தோமே ஞாபகம் இருக்கா....

புகழ்: அதை எப்படிடா மறக்க முடியும்....கடைசிவரைக்கும் முழு பிரியாணியே சாப்பிடல

விஜயன்: இன்னிக்கு முழு பிரியாணி செய்து கலக்கிடுவோமா......

அனிதா, மாலதி, புகழ், தீபா: கலக்கிடுவோம் மச்சிசிசிசிசி ;-)))

Saturday, July 28, 2007

புலி கொடுத்த சிங்கபொம்மை- வலைபதிவர் சந்திப்பு



மாலை 4.30 மணிக்கு சந்திப்பு என்று அபி அப்பா பதிவு எல்லாம் போட்டு அறிவித்திருந்தார். அறிவிப்பு வந்தவுடன் சித்த"ஆப்பு" குசும்பன் இடம் இருந்து போன் "கோபி நீ கண்டிப்பா வரனும்"...."என்ன சீத்த"ஆப்பு" இப்படி கேட்டுபுட்டிங்க நீங்க கூப்பிட்டு வராமல் இருப்பனோ"...ன்னு ஒரு பிட்டை போட்டு வச்சேன். தனியாக சென்று கூட்டத்தில் மாட்டி கொள்லாமல் இருக்க பல கூட்டங்களை கண்ட எங்கள் கவிமட தலைவர் பெனாத்தலாரோடு இணைத்து கொண்டு சந்திப்புக்கு கிளம்பினோம்.பார்க்கை அடைந்தவுடன் எனக்கு அதிர்ச்சி

"சார்... "

"என்னப்பா.."

"நாம சரியா 4.30 மணிக்கு வந்துட்டேம் சார்"

"பெனாத்தலார்னா பஞ்சுவலிட்டின்னு உனக்கு தெரியாதா!!!" ன்னு அவரும் ஒரு பிட்டை போட்டு பார்க்கையே அதிரவைத்தார்

பார்க் உள்ளே சென்றவுடன் மீண்டும் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி நாம் அபி அப்பா எங்களுக்கு முன்னாடியே வந்துவிட்டார்.
(நோட் பண்ணுங்கடா டேய் இதெல்லாம் நோட் பண்ணுங்க)

அவருடன் நட்சத்திரம் அய்யனார், சித்த"ஆப்பு" குசும்பன், சென்ஷி, சிறுகதை புயல் தம்பி, லொடுக்கு அவர் குடும்பத்தினருடன் வந்திருந்தார். பெனாத்தலாரிடம் வழக்கம் போல ஆள்மாறாட்ட வேலைகள் நடந்தன. பின்பு 2 நிமிடம் கழித்து உண்மை அவருக்கு தெரிவிக்கப்பட்டது. வலைபதிவர் சந்திப்புன்னு வந்துட்ட பிறகு இதெல்லாம் சகஜம்ப்பா ன்னு மறுபடியும் ஒரு பிட்டை போட்டார்.

சிறிது நேரத்திரத்திற்கு பிறகு சந்திப்பின் ஸ்பன்சர் சூடான் புலி சூடாக வராமல் கூல்லாக வந்து சேர்ந்தார். அமீரகத்தின் பெண்பதிவர் சகோதரி ஜெசிலா அவர்கள் குடும்பத்துடன் வந்து சேர்ந்தார். ஆவலுடன் எதிர்பார்க்கபட்ட லியோ சுரேஷ், மகேந்திரன் பெ மற்றும் மின்னது மின்னல் மிஸ்சிங். அமீரகத்தின் மற்றொரு பதிவர் சுல்தானும் அனானி தியாகுவும் வந்து சேர்ந்தனர்.

பின்பு வழக்கம் போல் கும்மி தேவையா?....யார் அந்த அனானி? கவிதையின் அடுத்த கட்டம் என்ன? அபி அப்பா ஏன் பதிவுகளை படிப்பதில்லை? அபி அப்பா சீரியசாக எப்போ எழுதுவார் (சிரிக்காதிங்க...உண்மையிலே கேட்டோம்) இப்ப யாருக்கும் யாருக்கும் சண்டை? நீ யார் பக்கம்? பக்கத்துல எங்க நல்ல சட்னி வடை கிடைக்கும்? புலி கொண்டு வந்த பைக்குள்ள என்ன இருக்கு? இப்படி பல விஷயங்கள் விவாதிக்க பட்டு கலைத்து போயி டீ சாப்பிட முடிவு செய்தோம்.

சுட சுட டீ சாப்பிட்டு விட்டு அய்யனாரும் பெனாத்தலாரும் அவர்களுக்கு தெரிந்த எழுத்தாளர்கள் புத்தகங்கள் பற்றி பேசி கொண்டுயிருந்தார். பெனாத்தலார் பல வருடங்களுக்கு முன்பு படித்த அசோகமித்திரனின் கதையை வரிகளை கூட மறக்கமால் சொல்லிக் கொண்டுயிருந்தார்.

அய்யனாரும் சிறுகதை, நாவல், கவிதை என்று ஒரு எரியாவையும் விட்டு வைக்காமல் போட்டு தாக்கி கொண்டுயிருந்தார்.

சென்ஷி பதிவையும் அதற்கு போட்ட பின்னூட்டத்தையும் ஞாபகத்தில் வைத்து கொண்டு பேசியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

நியூசிலாந்திலிருந்து வல்லியம்மா கூறிய வாழ்த்தை அபி அப்பா மறக்காமல் பதிவு செய்தார். (பதிவர்கள் சார்பாக வல்லியம்மாவுக்கு நன்றிகள்) சந்திப்பின் போது மின்னலும், டெல்லியில் இருந்து முத்துலட்சுமி அக்காவும் போன் மூலமும் அனைவரிடமும் தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனார்.

பெனாத்தலார் கூடிய விரைவில் FLASH (Macromedia Flash) பற்றியை செய்திகளை வலைதளத்தில் பகிர்ந்து கொள்ள போகிறேன் அதற்கான வேலைகள் நடந்து கொண்டுயிருக்கிறது என்று கூறினார் (கூடிய விரைவில் FLASH போட்டி ஒன்னு வரும்).

தம்பி சமிபத்தில் எழுதிய சிறுகதைகள் நன்றாக இருப்பதாக அனைத்து பதிவர்களும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தினர்.

Web Page Design பற்றி சொல்லிக் கொடுக்க போவதாக குசும்பன் தெரிவித்தார்.

அறிவு பசி அடைங்கியவுடன், வயிற்று பசி தானே அலரம் அடிக்க ஆரம்பித்ததை முன்னிட்டு பக்கத்தில் உள்ள அண்ணாச்சி கடைக்கு (ஆசிப் அண்ணாச்சியில்ல) ஒட்டல் சரவண பவனுக்கு சென்று வயிற்று பசியையும் முடித்து கொண்டோம்.


பின்பு சூடான் புலி அனைவருக்கும் நினைவு பரிசாக ஒரு சிங்கபொம்மையை பரிசாக வழங்கினார். பின்பு அபி அப்பா எவ்வளவு கெஞ்சியும் அபி அப்பாவுடன் புலி போகாதது மர்மமாகவே உள்ளது.







புலி கொடுத்த சிங்கபொம்மை

இந்த சந்திப்பின் மூலம் வருங்காலத்தின் ரெண்டு பெண் பதிவர்கள் கிடைத்தினர்....லொடுக்கு அவர்களின் குட்டி தேவதையும், சகோதரி ஜெசிலா அவர்களின் குட்டி தேவதையும் தான் வருங்கால பெண்பதிவர்கள். ஜெசிலாவின் மகள் கண்மணி டீச்சரையே கலாய்த்தவர் என்பது மிகவும் குறிப்பிடதக்கது. எங்கள் சந்திப்பை விட அந்த ரெண்டு குழந்தைகளின் நட்பு மிகவும் அழகான ஒன்று, அதனை பற்றியே ஒரு பதிவு போடலாம். கடைசி வரையில் அந்த குழந்தைகளிடமும் குசும்பனின் குசும்புகள் பலிக்கவில்லை என்பதை இங்கே கூறி கொள்ள விரும்புகிறேன்.


வாரத்தின் விடுமுறை நாளை பல புதிய நண்பர்களோடு பகிர்ந்து கொண்டது மனத்திற்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

சந்திப்பில் பங்கு பெற்றோர்

அபி அப்பா

பினாத்தால் சுரேஷ்

லொடுக்கு

ஜெசிலா

சுல்தான்

குசும்பன்

அய்யனார்

சென்ஷி

நாகை சிவா

கதிர்

அனானி நண்பர் தியாகு

இவர்களுடன் நான்.

Tuesday, July 03, 2007

கிடேசன் பார்க்கில் விருந்து....வாங்க வாங்க

ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு மக்கா ;))))


பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
பதிவில் மூலமும், மெயிலிலும், போன் செய்தும் வாழ்த்து கூறிய அனைத்து பாசக்கார மக்களுக்கு என் மீண்டும்...மீண்டும் நன்றிகள்.

தனி பதிவு போட்ட கவிதாயினி காயத்ரி அவர்களுக்கும், சங்கத்துக்கும் என் நன்றிகள்.

சரி நன்றி சொன்ன மட்டும் போதுமா?...அதான் ஒரு சின்ன விருந்து எல்லோரும் வாங்க நல்லா சாப்பிட்டு போங்க.


Vegetarian எல்லாம் இங்க வாங்க ;))





Non-Vegetarian எல்லாம் இங்க வாங்க :))


அந்த கோழி மட்டும் காயத்ரிக்கு (என்ன போதுமா?)


சாப்பாடு மட்டும் இல்லைங்க மக்கா...ice cream எல்லாம் இருக்கு வயிறு நிறைய சாப்பிடுங்க.





இது யாருகுன்னு சொல்லுங்க பார்ப்போம் ;))))))



மீண்டும் உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ;)

Monday, May 21, 2007

கிளம்பு காத்து வரட்டும்

நான் ஆணி புடுங்குறதை பார்த்து எங்க மேனேஜர்

"ராசா...என் தங்கம்....போதும் நீ புடிங்கினது....இனியும் புடிங்கி சுவத்தை ஓட்டை ஆக்காதே....நீ ஆணி புடிங்கின திறமையை பார்த்து கம்பெனியே உனக்கு லீவு கொடுத்திருக்கு....கிளம்பு காத்து வரட்டும்ன்னு சொல்லிட்டாரு". (ஆணி புடிங்கின மாதிரி ஆக்ட் வுட்டதுக்கே லீவா....அப்ப உண்மையில் ஆணி புடிங்கியிருந்தா....நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு)

"கொஞ்சம் நல்ல சாப்பாடு....அம்மா கையால"

"ஒரு ரெண்டு மூணு கல்யாண சாப்பாடு....... நட்பு வட்டாரத்தின் கல்யாணங்கள்" ( அது என்னமோ தெரில மக்கா இந்த வருஷம் ஆரம்பிச்சதுல இருந்தே ஒரே கல்யாணம் தான். இந்த வருஷம் கல்யாண வருஷம் போல)

"வீட்டுல புதுசா வந்திருக்க ரெண்டு குட்டிகள்"......(அக்கா பொண்ணு அண்ணன் பையன்)

"இன்னும் ஒரு மாதத்தில் வர போற இன்னொரு அண்ணன் வாரிசு"

"அப்புறம் வெயிலோடு கொஞ்சம் விளையாட்டு"

"ஊர்ல இருக்குற எல்லா தியேட்டருக்கும் ஒரு ரவுண்டு"

"அப்படியே பாசகார பசங்களோட ஒரு சின்ன ட்ரீப்.....பாண்டிசேரிக்கு"







இப்படி எல்லாம் கணக்கு போட்டு கிளம்புரேன் மக்கா.....ஒரு மாதம் இந்த தமிழ்மணத்தையும் உங்களையும் எப்படி தான் பிரிஞ்சியிருக்க போறேன்னு நினைக்கும் போது அழுகையா வருது...நான் அழுது என் சோகம் உங்களை தாக்கிடும்ன்னு நினைக்கும் போது வர அழுகை கூட நின்னுடுது.


எங்க பாசகார குடும்பத்தை பத்துரமா பார்த்துக்குங்க.....இந்த கிடேசன் பார்க்கை வேற அபி அப்பாவை நம்பி ஒப்படைச்சிட்டு போறேன். என்னமோ எதையோ விட்டுட்டு போற மாதிரியே ஒரே பீல்....சரி ஓகே.....மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் கிளம்புறேன்.

Sunday, May 13, 2007

அம்மா......அம்மா.....அம்மா.....


உலகில் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும் இந்த செல்ல மகனின்
அன்னையர் தின வாழ்த்துக்கள்





அன்புள்ள அம்மாவுக்கு

அன்னையர் தின வாழ்த்துக்கள்

எப்படிமா இருக்க? நல்லா இருக்கியா?


நானும் ஏதாவது எழுதி பதிவு போடலாமுன்னு உட்காந்தா "அம்மா" என்ற ஒரு வார்த்தையை தவிர வேற ஒன்னும் வரமாட்டேன்கிதும்மா

வாழ்த்துக்கள்ம்மா ;-)

Thursday, May 03, 2007

அபி பாப்பாவின் நன்றி அறிவிப்பு கூட்டம் - கிடேசன் பார்க்

எல்லா ஆணியையும் முடிச்சிட்டு இழுத்து ஒரு பெரு மூச்சு விட்டுட்டு.....ஒரு டீ சாப்பிடலாமுன்னு வெளிய வந்தா கிடேசன் பார்க்கில் இருந்து போன் யாருடா இதுன்னு யோசிச்சிக்கிட்டே போனை எடுத்து

நான் ; ஹலோ.....

அருமையான குரலில் ஒரு குழந்தை பேசிச்சி

ஹலோ.....சித்தா எப்படி இருக்கீங்க

நான் ; இன்னாது சித்தாவா.....நான் சித்தன் எல்லாம் இல்லைமா....அவரு அண்ணாமலை சீரியலோட போயிட்டாரே.....என் பேரு கோபிநாத்

குழந்தை ; அய்யோ......இதுக்கு தான் அப்பா கூட அதிகமா சேராதிங்கன்னு சொன்னேன்.

நான் ; அப்படியா....சரி.... யாரு கண்ணு நீ கிடேசன் பார்க்குல நீ என்ன பண்ற?

குழந்தை ; ம்ம்ம்......அல்வா கொடுத்துக்கிட்டு இருக்கேன்

நான் ; நாங்க தானே வழக்கமா அல்வா கொடுப்போம்......நீ யாருக்கு கொடுத்துக்கிட்டு இருக்க

குழந்தை ; காலையில எனக்கு வாழ்த்து சொல்லி பதிவு போட்டாரு இல்ல நம்ம காதலன் சித்தப்பூ அவருக்கு தான் அல்வா கொடுத்துக்கிட்டு இருக்கேன்





நான் ; இப்ப தான் நம்ம மரமண்டைக்கு புரிஞ்சது......பேசுறது அபி பாப்பா.....செல்லம்.....கண்ணு....இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;-))))

அபி பாப்பா ; ம்ஹும்...இப்ப வாச்சும் கண்டு பிடிச்சிங்களே.......ரொம்ப கஷ்டம் சித்தா உங்களோட.....

நான் ; சரிடா......கண்ணு கொஞ்சம் ஓவரு ஆணி அதானலதான் சட்டுன்னு கண்டு பிடிக்க முடியல

அபி பாப்பா ; சரி சீக்கிரம் வாங்க.....வாழ்த்து சொன்ன அனைவருக்கும் அல்வா கொடுக்க வேண்டும்

நான் ; இதே வந்துட்டேன் கண்ணு......போனை துண்டித்து விட்டு கிடேசன் பாரக்குக்கு ஓடினேன்.

கிடேசன் பார்க்குக்கு போனா அபி பாப்பா பட்டு பாவாடை சட்டையில கலக்கலா இருந்திச்சி.....அல்வா வாங்குறதுக்கு முன்னாடி நின்னுக்கிட்டு இருந்தாரு சென்ஷி....அவருக்கும் அய்யனாருக்கும் இதுல போட்டி வேற

நான் போயி மைக்கை எல்லாம் சரி பண்ணிட்டு பாப்பாவை பவ்வியாமாக மேடைக்கு அழைத்து பேச சொன்னேன்

அபி பாப்பா ; அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் என் மாலை வணக்கம்,

கை தட்டல் காதை கிழிச்சது......தம்பி அடிச்ச விசில் வானை பிளந்தது....பாப்பா தன் இரண்டு கைகளையும் தூக்கி அமைதி .....அமைதின்னு சொல்லுச்சி

என் பாசமிகு சித்தப்பூ.....சென்ஷி அவர்களுக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்....மற்றும் அந்த பதிவில் பின்னூட்டம் மூலம் வாழ்த்து சொல்லியிருக்கும் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.


வாழ்த்து சொன்ன அனைவருக்கும் ப.பா.சங்கத்தின் டீச்சர் கண்மணி அவர்களும் அவரின் மாணவ மணிகளும் சேர்ந்து செய்த அல்வா வழங்கப்படும் வாயார....(முடியுமா) சாப்பிட்டு விட்டு போங்க...

எல்லாரும் தட்டை தூக்கிட்டு கேட்டை நோக்கி கண்ணு மண்ணு தெரியாம ஓடுறாங்க.

Tuesday, April 17, 2007

கிடேசன் பார்க்கில் ராயல் ராமுவுக்கு அல்வா

கிடேசன் பார்க்கே நிரம்பி வழிகிறது அந்த அளவுக்கு கூட்டம். ஏண்டா....அல்வா தானே கொடுக்குறோமுன்னு சொன்னோம் சாப்பாடா போடுறோமுன்னு சொன்னோம்.....சாப்பிடுற தட்டை எல்லாம் தூக்கிக்கிட்டு வந்திருக்கானுங்க. இவனுங்களை எல்லாம் என்ன செய்யுறது. சரி விடுன்னு சொல்லிட்டு மைக்குல

"எல்லாம் கீவுல ஒழுங்கா வரணும். எல்லாருக்கும் அல்வா நிச்சையம் உண்டு என்று மைக்குல நான் சொல்லிக்கிட்டு இருந்தேன்."...........நேரம் வேற ஆயிக்கிட்டே இருக்கு இன்னும் கிடேசன் பார்க்கின் தலைவரை காணோம். இந்த பொருளாளர் வேற இன்னும் வரவில்லை.....இருக்குற கூட்டத்தை பார்த்தா இந்த அல்வா பத்தாது போல இருக்கு....என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே பொருளாளர் அபி அப்பா வந்துவிட்டார்.

நான்; ஏன் இவ்வளவு லேட்டு?

அபி அப்பா; கிளம்பும் போது ஒரு பஞ்சாயத்து அதை முடிச்சுவச்சுட்டு வரேன்."

நான்; இன்னைக்குமா......சரி அதை விடுங்க.....தலைவர் எங்க? "

அபி அப்பா; அவரு பாவனா நடித்த தீபாவளி (லி) படத்தை 50வது தடவையாக வலியுடன் பார்த்துக்கிட்டு இருந்தாறு (இதில் இருந்தே உங்களுக்கு தெரியும் தலைவர் யாருன்னு....வேற யாரு தம்பி தான்) அதான் கொஞ்சம் லேட்டா வரேன்னு சொன்னாரு.....இன்நேரத்துக்கு வந்துருக்கணுமே...சரி இரு ஒரு போனை போட்டு பார்க்குறேன்.

அபி அப்பா; ஹலோ....தல எங்க இருக்கு

த.தம்பி; ம்ம்ம்....கழுத்துக்கு மேல தான் இருக்கு.

அபி அப்பா; ம்ம்ம்....தெளிவாதான் இருக்கீங்க போல....சரி எங்க இருக்கீங்க? எப்ப வருவீங்க?

த.தம்பி; எதிர்பாலின ஈர்ப்புனால ஈர்க்கப்பட்டு திசை தெரியாமல் நடு ரோட்டுல நிக்குறேன்.

அபி அப்பா; அட பதிவை பற்றி எல்லாம் அப்பறம் பேசிக்கிலாம் சீக்கிரம் வாப்பா...

நான்; சரி....இந்த துணை தலைவர் எங்க?

அபி அப்பா; இதோ வந்துக்கிட்டே இருக்காரே.....ஆமா எதுக்கு பின்னாடியே நடந்து வராரு?

நான்; இதுதான் பின்நவீனத்துவ நடை

து.த.அய்யனார்; என்னப்பா....ஆரம்பிச்சுடுலாமா? என்று உள்குத்தாக கேட்க

அபி அப்பா; ஓ....ஆரம்பிச்சுடலாமே....என்று உள்குத்தாய் பதில் சொல்லி கொண்டு இருக்கும் போதே த.தம்பி வந்துவிட்டார்.

த.தம்பி; எப்படி ஷார்ப்பா வந்தேன் பார்த்தியா......சரி ஆரம்பிச்சுடலாமா?

நான்; நீயுமா என்று மனதில் நினைத்துக் கொண்டு ....சரி சங்கத்துக்கு தகவல் கொடுத்தாச்சா?

அபி அப்பா; நான் நேத்தே சங்கத்து சிங்கங்கள் எல்லாத்துக்கிட்டையும் பேசிட்டேன். தேவ் வேற பதிவு போட்டு நேத்து எல்லாம் அங்கதான் கும்மி.

அய்யனார்; கோபி யாரோ சிக்சர் சிக்சர்ன்னு கத்துறாங்க.....யாருப்பா அது

அபி அப்பா; அட நம்ம பாஸ்டு பவுலர்......

பாஸ்டு பவுலர்; அபி அப்பா......குரங்கு ராதா எங்க?

அபி அப்பா; நானே அவன்க்கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கேன் இதுல நீங்க வேற...

நான்; சரி...தல இதுக்கு மேல வெயிட் பண்ணா நம்மளையும் அல்வாவா கின்டிடுவானுங்க சீக்கிரம் மேட்டரை சொல்லிட்டு அல்வாவை கொடுத்துட வேண்டியது தான்.


தலைவர் தம்பி ; என் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய கிடேசன் பார்க் ரசிகர்களே... இன்று ஒரு அருமையான பொன் நாள்....என் அன்பு அண்ணன்.....பெங்களூர் நாயகன்..அபி அப்பா நானுன்னு கேட்க, தம்பி மைக்கை அபி அப்பாக்கிட்ட கொடுக்கறாரு...

அபி அப்பா; சங்கத்து சிங்கம்.......தங்கம்......கவிதை காதலன்.....எங்கள் அன்பு ன்னு ஆரம்பிக்க......அய்யனாரு நடுவுல கையை நீட்ட....இப்ப மைக் அய்யனார்க்கிட்ட போகுது

அய்யனார் ; என் பாசத்திற்குரிய தம்பி.....விடிய விடிய பல வளைபதிவுகளுக்கு சென்று கும்மி அடிக்கும் கும்மி கிங்.....கடலை மன்னன்......தம்பி அட போதும் சீக்கிரம் பேரை சொல்லுப்பான்னு மைக்கை வாங்கி....

த.தம்பி; என் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய கிடேசன் பார்க் ரசிகர்களே.....குறுக்கே அபி அப்பா விழுந்து வேண்டாம் தல நான் அழுதுடுவேன்னு ஒரு சிக்னல் கொடுக்கிறாரு


எங்கள் சிங்கம்

என் அண்ணன்

மூத்தவளைப்பதிவாளர்

சங்கத்து சிங்கம்

கவிதை காதலன்

கடலை மன்னன்

தமிழ்மணத்தின் ராயலாக இருக்கும் திரு. ராம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு உங்க எல்லாருக்கும் துபாய் கிடேசன் பார்க் மன்றத்தின் சார்பாக அல்வா கொடுக்கப்படும்.






வாயார அல்வாவை சாப்பிட்டு மனதார வாழ்த்து சொல்லி விட்டு போங்கள் என்று தன் பேச்சை முடித்துக் கொண்டார் தலைவர். நான் நடுவுல "ஜயா நானும் இங்க தான் இருக்கேன்"னு சிக்கனல் கொடுக்க கடைசியா மைக் என்க்கிட்ட வந்தது.

என் அன்புக்கும், நட்புக்கும் உரிய அன்பு மாப்பி ராயல் ராமுவுக்கு
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மக்கா.....ஒரு முக்கியமான விஷயம் அல்வாவை சாப்பிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னா மட்டும் போதாது.

அபி அப்பா; ஆமாம்..... கை கழுவனும்.

நான்; இரு அண்ணாத்த........வருஷா வருஷம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மட்டும் சொல்லிக்கிட்டு இருந்தா போதுமா......சீக்கிரம் அவருக்கு ரங்கமணி சங்கத்துல சேரணுமுன்னு வாழ்த்திட்டு போங்க......புரியுதா.