Monday, February 11, 2008

ராசாத்தி...






நீண்ட பயணம் முடியப்போகும் நேரம் வெகு அருகில் வந்துவிட்டது. அடுத்து நிகழப்போகும் அந்த அற்புத‌த்தை நான் எப்படி சொல்வது... நான் என் ராசாத்திகிட்ட போகப்போறேன்... அவகிட்ட போயி அந்த அழுத்தமான ஈரமான முத்தத்தை வாங்கப்போறேன். இந்த ஜெயில் கம்பிகளுக்கு பின்னாடி நான் இருந்த ஒன்றறை வருஷ வாழ்க்கை முடியப்போகுது.

அதோ அந்த வெட்டவெளியில் அமைதியாக தெரியுது பாருங்க நிலா வெளிச்சம், அதுபோல அழகாக இருந்திச்சு என் வாழ்க்கை. நான் என்னோட மனைவி, என் ராசாத்தின்னு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தேன். கொஞ்சம் சந்தோஷமாக இருந்தால் பொறுக்காது போல இந்த கடவுளுக்கெல்லாம். வயித்தெறிச்சல் புடிச்ச சாமிங்க. ரெண்டு வருடத்திற்க்கு முன்னாடி ஒரு வெள்ளிக்கிழமை எல்லாம் இருளாக முடிஞ்சு போச்சு.

நான் இந்த சாமிங்ககிட்ட வேண்டிக்கிட்டது எல்லாம் என் ராசாத்தி நல்லாயிருக்கணும். எப்போதும் மகிழ்ச்சியா இருக்கணும், அவளுக்கு எந்த குறையும் வந்துடக்கூடாதுன்னு தான். அதனாலதான் என்னவோ எந்த குறையும் இல்லாம நானே பார்த்துக்கிறேன்னு அந்த சாமியே என் ராசாத்தியை என்கிட்ட இருந்து வாங்கிட்டார்.

இதே வானத்தில் இருந்து வர்ற‌ முதல் மழைத்துளி என் செல்லுக்கு முன்னாடிதான் வந்து விழுது. மழைன்னா ராசாத்திக்கு ரொம்பப்பிடிக்கும். அந்த மழைத்துளிகளை கையில் ஏந்திக்கிட்டு என் முகத்தில அடிச்சி அடிச்சி அவ சிரிப்பா பாருங்க.. இன்னைக்கு முழுக்க பார்த்துக்கிட்டு இருக்கலாம். அவளோட ஒவ்வொரு அசைவையும் என் மனசுக்குள்ள பதிவு பண்ணி வச்சிருக்கேன்.

எதைப்பார்த்தாலும் அவள் ஞாபகம்தான்... எப்போதும் அவளோட நான் இருந்த அந்த மகிழ்ச்சியான நினைவுகள்தான் வருது. அதான் ஒரேய‌டியா அவகிட்டயே போயிடலாமுன்னு எப்பவோ முடிவு பண்ணிட்டேன். இந்த சட்டம், நீதிமன்றம் எல்லாம் எனக்கு தூக்குதண்டனை கொடுத்தப்ப‌ கூட 'அட போங்கடா! நான் எப்பவோ இந்த முடிவை எடுத்துட்டேன். இதை ஊர் கூடி சொல்லறதுக்கு இத்தனை காலமா'ன்னு தோணுச்சு.

ஒரு மழைநாள்ல‌தான் பிறந்தா என் ராசாத்தி... விடியற்காலை 1.30 மணி இருக்கும். என் மனைவி பிரசவ வலியில துடிக்கிறதை பார்க்க தைரியம் இல்லாமல் அங்கும் இங்கும் அலைஞ்சிக்கிட்டு இருந்தேன். ஒரு மெல்லிய பனித்துளியை வெள்ளை துண்டுல‌ சுத்தி என்னோட அம்மா என்கிட்ட கொடுத்தாங்க. சந்தோஷத்தோட உச்சத்திற்க்கு போகும்போது வார்த்தைகள் செத்துப்போயிடுதுன்னு சொல்லுவாங்க. என் ராசாத்தியை என் கையில் வாங்குறப்ப‌ நான் அப்படிதான் இருந்தேன். அவளை முதன்முதலில் என் கையில் கொடுத்தப்போ எனக்கு ஏற்பட்ட உணர்ச்சிகளை இப்ப நினைச்சாலும் உடம்பு எல்லாம் சிலிர்க்குது.

"டேய் உன்னை மாதிரியே இருக்காடா" ன்னு அம்மா சொல்லும்போது ஒரு கர்வம் கலந்த புன்னகை வந்துச்சு பாருங்க.. அட.. அட... அதுதாங்க சொர்க்கம் .

உடம்பு எல்லாம் செக்கச்செவேலுன்னு இருக்கு. கண்ணை மூடிக்கிட்டு என் ராசாத்தி என்கிட்ட ஏதோ சொல்றா... உனக்கு அப்பான்னு ஒரு பதவி கொடுத்திருக்கேன்னு சொல்றா மாதிரி இருக்கு. ச்சீசீ...! குழந்தை எல்லாம் அப்படி சொல்லுமா..

ஆனா அதுதானே உண்மை.. என்னை அப்பான்னு கூப்பிட ஒரு குரல். நடக்குறதுல, பேசுறதுல , கோவத்துல எல்லாம் உன்னைப்போல இருக்குடான்னு ஊரே சொல்றதுக்கு ஒருத்தி வந்துட்டா. என் மூச்சுகாத்து அவள் மேல‌ பட்டதுமே அவ கண்திறந்த அழகிருக்கே.. அதற்கு எத உதாரணமா சொல்ற‌துன்னு தெரியல.. அப்படி ஒரு அழகு. அப்படியே மெல்லமெல்ல நாலாபக்கமும் கண்ண சுத்திட்டு எங்க என் அப்பான்னு ஆசையா அவ பார்க்குறா.!

என் கண்ணுக்கு அவ மங்கலா தெரியுறா.. என்னன்னு தெரியல. என் கண் முழுக்க கண்ணீர் நிறைஞ்சிருக்கு. ஆம்பளப்புள்ளை அழக்கூடாதுன்னு சொன்ன அம்மா கூட வாய் மூடி கண்கலங்கி நிக்குறா. ஏண்டா அழுவுறன்னு அவளால‌ கேட்க முடியல பார்த்திங்களா! அழு.. நல்லா அழு... இந்த மாதிரி அழுகை கிடைக்குறதுக்கு எத்தன தடவ கோயில் கோயிலா ஏறி இறங்கியிருப்ப.

மழலை குரலில் அவ 'ம்மான்னும் 'த்தைன்னும் சொல்லும் போது எப்படா அப்பான்னு சொல்வான்னு தவங்கிடந்திருக்கேன். வேலை முடிச்சுட்டு ராத்திரி எவ்வளவு நேரம் ஆனாலும் என் குரல் கேட்டவுடனே ஓடி வந்து அப்பான்னு கூப்பிட்டுக்கிட்டே கழுத்தோட கட்டி பிடிச்சிப்பா. நடுராத்திரி தூங்காம இருந்தவளை தூங்க வைக்குறதுக்கு தோள் மேல போட்டு உலாத்திக்கிட்டு இருந்தேன்னா பதிலுக்கு என் முதுகுல‌யும் தட்டி என்னை தூங்க வைப்பா என் ராசாத்தி. அந்த பால்வாசமும், பொக்கை வாய் சிரிப்புக்காவும் என்ன வேணுமுன்னாலும் செய்யலாம். எனக்கும் அவளுக்கும் ஒரு புரிதல் இருந்திச்சு. யாரு எது கொடுத்தாலும் ஒரு அனுமதி பார்வை என்கிட்ட வந்துட்டு போகும். உனக்கு அம்மா புடிக்குமா இல்ல அப்பா புடிக்குமான்னு கேட்டா டக்குன்னு அப்பான்னு சொல்லுவா. பொண்ணுக்கு ஆணைதானே பிடிக்கும்ன்னு கூட சொல்லாம். இருந்தாலும் எனக்கு அது புதுசாக இருந்துச்சு. "பொம்பளப்புள்ளை மேல இவ்வளவு பாசம் வைக்காதேடா. இன்னொரு இடத்துக்கு போற பொண்ணு அப்புறம் ரொம்ப கஷ்டமாகிடும்ன்னு"அம்மா சொல்லுவாங்க. ஆனா அதெல்லாம் எனக்கு தெரியல.

வாழ்க்கையில தோத்துப்போறதுலயும் ஒரு சந்தோஷம் இருக்குன்னா அது குழந்தைங்ககிட்‌ட தோத்து போறதுல‌தான். நான் என் ராசாத்திக்கிட்ட நிறைய தோத்துருக்கேன். கண்ணாமூச்சு ஆடும்போது என்ன கண்டுபிடிச்சிட்டு அப்பா நீ அவுட்டு...நான்தான் ஜெயிச்சேன்னு அவ சந்தோஷத்தில் கைக்கொட்டி சிரிக்கும்போது அந்த தோல்வியிலும் பலஆயிரம் சந்தோஷம் கொடுத்தவ என் ராசாத்தி.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அவளோட 6வது பிறந்தநாள் அன்னைக்கு....

"எழுந்திருச்சிட்டாளா?"

"இல்லை இன்னும் தூங்கிட்டுதான் இருக்கா... இன்னிக்கு லீவுதானே.. அதான் தூங்கட்டும்ன்னு விட்டுட்டேன்"

"தூங்கட்டும்...... ராத்திரி ஏதாவது கேட்டாளா?"

"ம். கேட்டுச்சு.. அப்பா எனக்கு என்ன வாங்கி வருவாருன்னு..."

"நீ என்ன சொன்ன!"

"காலையில பாருன்னு சொல்லிட்டேன் .....உம்முன்னு முகத்தை வச்சிக்கிட்டு தூங்கிட்டா"

"லூசு! சொல்லியிருக்க வேண்டியாது தானே..."

"அதுக்கு என்ன அவசரம்.. காலையில தான் தெரிஞ்சிக்கட்டுமே"

"போடி...! குழந்தை பாவம்..! ஏக்கத்துலயே தூங்கியிருக்கும்" சொல்லிட்டு அவளுக்கு பிடிச்ச சாக்லேட், புதுத்துணி எல்லாம் எடுத்துக்கிட்டு அவ காதுகிட்ட இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்லம்ன்னு சொன்னவுடன் அப்பான்னு கட்டிப் பிடிச்சிக்கிட்டு எனக்கு என்ன வாங்கி வந்திருக்கிங்கன்னு கேட்டா... நானும் அவளோட கண்ணை பொத்தி வெளியில் கூட்டிவந்து அவ ஆசை ஆசையாக கேட்ட சைக்கிளை காட்டினேன்.

முகம் முழுக்க ஆச்சரியத்தில் அப்படியே துள்ளி குதிச்சு ஏய்ய்ய்ன்னு கத்தி என்னை கட்டிப்பிடிச்சி முத்தம் கொடுத்தா. அதுதான் நான் அவக்கிட்ட இருந்து வாங்கின கடைசி முத்தம்.

நான் இதை ஓட்டப்போறேன்னு வெளியில் எடுத்துக்கிட்டு போனா... இரும்மா கோவிலுக்கு போயிட்டு வந்து ஓட்டலாமுன்னு சொன்னேன். இல்ல இப்பவே போகணுமுன்னு போனா. போனவ‌ போனவதான்... திரும்பி வரவேயில்ல. எங்க தேடியும் கிடைக்கல. மறுநாள் காலையில என் வீட்டு பின்னாடி ஒரு கோணிப்பையில உடம்பு முழுக்க ரத்தத்தோட சிதைஞ்சு போயிருந்தா என் ராசாத்தி.

ஊரே வந்துருந்துச்சு என் ராசாத்தியை பார்க்க. யார்யாரோ என்னன்னமோ சொன்னாங்க. அந்த வாரத்துல‌ எல்லா பேப்பரிலும், டிவி செய்தியிலும் என் ராசாத்தி பத்தித்தான் பேச்சு.

சைக்கோவின் காம வெறி செயலுக்கு குழந்தை பலின்னு போட்டாங்க. அந்த சைக்கோவை பிடிச்சாங்க. அவனும் ரொம்ப ஈசியாக வெளியில் வந்துட்டான்.
என் கண்ணு முன்னாடியே அவன் சுத்திக்கிட்டு இருந்தான். என்னால முடியல. அணு அணுவாக நான் ரசித்த ராசாத்தியை இப்படி ரத்தத்தில் மிதக்க விட்டுட்டு அவன் இப்படி சுத்திக்கிட்டு இருக்குறதை பார்க்க முடியல. அவன் ரத்த‌த்தில் மிதக்க விட்டதில் என்னோட ராசாத்தியும் ஒண்ணுன்னு அப்புறம் தான் தெரிஞ்சது. அவனுக்கு இன்னொரு வெறி பிடிக்கிறதுக்குள்ள அந்த நாயை நானே கொல்லணுமுன்னு முடிவு பண்ணினேன். அவனைத்தேடி போயி பிடிச்சேன். "ஏண்டா நாயே! உனக்கு காமத்த இறக்க என்னோட ராசாத்திதான் கிடைச்சாலான்னு அவனை கண்டந்துண்டமா என் ராசாத்தியை ரத்தத்தில மிதக்க விட்டா மாதிரி மிதக்க விட்டேன். என் மனசு நிறைஞ்சுருந்தது. என் ராசாத்தி அப்பா நீ ஜெயிச்சிட்டன்னு சொல்றாமாதிரி இருந்துச்சு.

இதோ.. இன்னிக்கு எனக்கு தூக்கு.! என் ராசாத்திகிட்ட‌ முத்தம் வாங்கப்போற பொன்னான நாள். அதே ஜெயிலர் வர்றார். கூடவே டாக்டரும் வராங்க. பார்ப்போம்.