Tuesday, January 03, 2012

என்றென்றும் ராஜா - ஆசிர்வதிக்கப்பட்டவன்


என்றென்றும் ராஜா - மீண்டும் இசை தெய்வம் 6 வருடங்கள் கழித்து 28 டிசம்பர் புதன் அன்று சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். நேரு உள்விளையாட்டு அரங்கில், சரியாக மேடையில், தெய்வத்தின் தரிசனத்துக்கு 20 நிமிடம் முன்னால் ஒரு ஓரமாக நிற்க இடம் கிடைத்தது; யார் செய்த புண்ணியமோ! பிரார்த்தனையோ தெரியவில்லை. பின்னால் நண்பர்கள் வருகிறார்களா இல்லையா என்பதை எல்லாம் மறந்து நான் படிக்கட்டுகளில் ஓடிக் கொண்டேயிருந்தேன்.... அந்த ஓட்டத்திற்க்கும் பதட்டத்திற்கும் கூட நம் தெய்வம் எந்த படத்திலெனும்ம் பின்னணி போட்டு வைத்திருப்பார்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது நம்ம ஹாய் செல்லம் - பிரகாஷ் ராஜ் ;-) கூடுதல் போனஸ் - சும்மா பின்னிடுச்சில்ல ;-)


இசை தெய்வத்தைப் பற்றி ஒரு வீடியோ முடிந்தவுடன்.. கதவுகள் திறந்தவுடன்... அரங்கத்தில் இருந்த பல ஆயிரம் ரசிகர்களின் உணர்ச்சி வெள்ளத்தில்,  கைத்தட்டலில் அரங்கமே குலுங்க... ஒரே ஜெப மொழியாக இசை தெய்வத்தை அழைக்க... அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் பலகோடி ஆத்மாக்களை தன் இசையால் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும் இசை தெய்வம் ஒரு வெள்ளை தீபம் நடந்து வருவது போல வந்து அனைவரையும் வணங்கியது.. ஆசிர்வதித்தது.... வந்திருந்த 7000+++ ரசிகர்களில் நானும் ஆசிர்வதிக்கப்பட்டவனானேன். 

"என் நண்பனே!!! இங்கே வா.." என அழைத்தவுடன், அவருடைய நண்பன் ஆர்மோனியப் பெட்டி மேடைக்கு கொண்டுவரப்பட்டது. "நீங்க எல்லாம் உட்கார்ந்துக்கிட்டு இருக்கீங்க. ஆனால் நான் நின்னுக்கிட்டு இருக்கேன். நான் இங்கே நிற்பது போல உங்க மனசிலும் எப்போதும் என்னோட இசை நிற்கிறது. அதுவே எனக்கு போதும்" என்று சொல்லிவிட்டு நேரடியாகவே ’ஜனனி ஜனனி’யில் அனைவரையும் உருக்கிவிட்டார். அதில் ஒரு சிறப்பு உண்டு - அதை சின்னத்திரையில் காண்க ! (இந்த மாதிரி நிறைய சின்னத்திரையில் காண்க வரும்.)

"அம்மாக்கள்தான் தாலாட்டு பாடுவாங்க.... ஆனால் நம்ம ராஜா சார் பல அம்மாக்களுக்கே தாலாட்டு பாடியிருக்கிறார் அதனால் முதல்ல அம்மா பாட்டு" என்று பிரகாஷ் சொல்ல. படம் மன்னன் - பாடல் - அம்மா என்று அழைக்காத... திரைப்படத்தில் பாடியவரே பாடினார் ! ஆனால் 100% சரியாக பாடினாரா என்பது நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்தப் பாடலும் அம்மாப்பாடல்தான் - விட்டால் முழு நிகழ்விலும் அம்மாப்பாடல்களே பாடியிருக்கலாம் அத்தனைப் பாடல்கள் இருக்கிறது! இருந்தாலும் பாலு சாருக்கும் ஒரு அம்மா பாட்டு - படம் - தூங்காதே தம்பி தூங்காதே - பாடல் - நானாக நானில்லை - திரைப்படத்தில் பாடியவரே பாடினர் - இசைத்தாயிடம் வரம் பெற்ற குழந்தைகளில் இவரும் ஒருவர்! என்ன குரல்!! 100+++% அப்படி ஒரு சுத்தம்!!!

"சிம்ஃபொனி என்றால் என்ன சார்" அப்படின்னு பிரகாஷ் கேட்க.... அதை சொல்வதை விட செய்துவிடுகிறேன் என்று ஒரு சிறு சிம்ஃபொனி இசை வாசிக்கப்பட்டது. இசை தெய்வம் அந்த இசைப் பற்றி இப்படிச் சொன்னார்.

"சிம்ஃபொனி என்பது ஒரே நேரத்தில் 5 கவிஞர்கள் கவிதை சொல்வது போல" என்று சொல்லிவிட்டு அந்த இசையின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக வாசிக்கச் சொல்லி மீண்டும் தனித்தனியாக வாசித்த இசைகள் அனைத்தும் ஒன்றாக இணையும் போது எப்படி வருகிறது என்று இசைத்து காட்டினார்கள். மிகவும் அற்புதமான ஒன்று ! இந்த இசை இசைத்து கொண்டு இருக்கும் போது தெய்வம் மைக்கை கையில் எடுத்தது ஏதோ பேசப் போகிறார் என்று நினைத்தோம்...ஆனால் அவர் குரலில் மென்மையாக ”இதயம்ம்ம்ம்ம்ம் போகுதே.....” என்று பாட ஆரம்பித்தார்.....அனைத்து ரசிகர்களின் இதயமும் அவர் பின்னால் போய்க்கொண்டு இருந்தது. இந்த பாடலுக்கு இப்படி ஒரு சிம்ஃபொனி இசையை கொடுத்து அசத்திவிட்டார்.


பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்ட போது ’ஆகா ஏதோ பேச போறாரா’ன்னு நினைத்தோம்.. ஆனால் அவரோ ’சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்று ராஜாவைப் பார்த்துப் பாட ஆரம்பித்தார். என்ன ஒரு குரல் அது....மனுஷன் எங்கும் பிசகாமல் அப்படி பாடி முடித்தார். நன்றி சார் ;-)

’பருவமே...’ பாடலில் வரும் ஷூ ஒசை எப்படி கொண்டு வந்தார்கள் என்பதை இசை தெய்வம் சொன்னார். அந்த ஷூ இசை எப்படி வாசித்தார்கள் என்பதை சின்னத்திரையில் காண்க !

இசை தெய்வம் முதலில் எழுதிய பாடல் - அவருக்கு அவரே எழுதிய பாடல் போன்ற ஒரு பாடல் - எனக்கு என்றென்றும் பிடித்தப் பாடல் இதயக்கோவில் படத்தில் இதயம் ஒரு கோவில் பாடல் - தெய்வத்தின் குரலில் அதுவும் நேரடியாகக் கேட்டதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி !

இசைஞானி நிகழ்ச்சி நடக்கிறது, இந்த நேரம் பார்த்து இந்தாளு ஊரில் இல்லையேவென வருத்தப்பட்ட நெஞ்சங்களுக்கு இடையே திடீரென்று திரையில் தோன்றியது அந்த உருவம். இசை தெய்வத்தின் பலகோடி ரசிகர்களின் குரலாக ஒளி, ஒலியுடன் திரையில் தோன்றியது. ஒளியும் ஒலியும் அவர் பார்த்துக்கொள்ள அதற்கு உயிரை இங்கோ நாங்கள் கொடுத்துக் கொண்டு இருந்தோம். மேடையில் பேசிய கலைஞன், விஐபி, சகஞானி நம்ம கலைஞானி மட்டுமே.

படம் ஹேராம் என்றதும் அதிர்ந்தது அரங்கம் - அந்த பாடல் பாடிக்கொண்டு இருக்கும்போதே நடுவில் நின்று கொண்டு இருந்த இசைஞானியை காணவில்லை எங்கே என்று தேடினால் அவர் அவரோட வேலையை செய்ய போயிட்டார். அவர் என்ன செய்தாலும் நமக்கு அது விருந்து தான்...... ’நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி’ பாடலில் வரும் அந்த பியனோ இசைக்கு மேடையில் இசைஞானியே பியனோ வாசித்தார். ரசிகர்களின் உற்சாகத்தைச் சொல்ல வார்த்தை இல்லை! பாடகர் ஹரிஹரன் சிறு சொதப்பல்கள் செய்தார்.

என் இனிய பொன் நிலவே - அந்த வெள்ளை நிலவு கூட வானத்தில் இருந்து இறங்கி வந்து கேட்டுக் கொண்டு இருக்கும் அந்த அளவுக்கு பின்னி எடுத்துடார் ஜேசுதாஸ்!

என் இனிய பொன் நிலவில் அசத்தியவர் பூவே செம்பூவே’வில் சின்ன இடத்தில் இசை முடியும் முன்பாகவே பாடிவிட்டார். விடுவோமா நாங்க.... உடனே கொடுத்தும்ல்ல குரலை..... அவ்வளவுதான் டக்கென்று ஜேசுதாஸ் கையைப் பிடித்த இசைஞானி இருங்கண்ணே’வென்று சொல்ல மீண்டும் இசை வாசிக்கப்பட்டது.. ஆனால் மீண்டும் ஜேசுசார் அதே தவறை செய்தார்..... ரசிகனே இவ்வளவு துல்லியமாகக் கவனிக்கும்பொழுது விடுவாரா நம் படைப்பாளி.... மீண்டும் வாசிக்கச் சொன்னார்.. வாசித்தார்கள்.. மீண்டும் பிழை.... அப்பொழுதுதான் ஜேசுசாருக்கு தான் செய்த தவறு புரிந்தது. அம்முறையில் சரியாக பாடியும் முடித்தார்.

ஆனால் மேடையை விட்டு ஜேசுசார் நகரவில்லை. "தவறு என்னோடதா இல்லை அவர்களோடதா (ஆர்கெஸ்ட்ரா)” என்றார். "உங்களோடதுதான்" என்றதும் ”அப்படின்னா எனக்காக மீண்டும் வாசிங்க.. நான் பாடிடறேன்” என்றார். மீண்டும் அதே ஆர்ப்பரிக்கும் இசையுடன் மிக மிக மிக சரியாக வாசித்தனர் ஆர்கெஸ்ட்ராவினர். மிக அற்புதமாக பாடி முடித்தார் ஜேசுசார். முடித்தவுடன் "சரியாக வரும் வரை எத்தனை டேக் வேணும்ன்னாலும் போவோம் நாங்க” என்றார். இதன் மூலமாய் மூன்று முறை அந்தப் பின்னணி இசையை கேட்கும் வாய்ப்பு கிட்டியது! - உண்மையில் மனதாற வாசித்தவர்களுக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் சொன்னாலும் தகும். வரம் பெற்றவர்கள்! என்ன ஒரு துல்லியம்! நிறுத்து என்றால் நிறுத்தினார்கள்.. வாசி என்றால் மிக மிக மிக சரியாக விட்ட இடத்தில் இருந்து அவர்கள் செய்து காட்டிய மாயம் இருக்கிறதே யப்பா....!! என்ன செய்வது வாத்தியார் அப்படி! வரம் பெற்றவர்கள் இசைக்கலைஞர்கள் மாத்திரமில்லை.. அந்த இசைக்கருவிகளும்தான்.. வயலின் இருக்கிறதே.... விடுங்க.. பாருங்க... ! தயவு செய்து  ஜெயா டிவி இதை எடிட் செய்யாமல் ஒளிபரப்ப வேண்டும்.

’ஆயிரம் மலர்களே மலருங்கள் இந்தப் பாடல் மறைந்த பாடகர் மலேசிய வாசுதேவன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது.

’நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’யில் சரியாகப் பாடாத ஹரி, ’என்மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே’ பாடலில் 200% மிக அற்புதமாகப் பாடினார்.

’மடை திறந்து... தாவும் நதியலை’ - ஆர்கெஸ்ட்ராவும் + பாலு சாரும் கூட்டணியிட்டு ஒருவரையொருவர் மிஞ்சினார்கள்! ரசிகர்களை எவ்வளவு உற்சாகத்துக்கு கொண்டு போக முடியுமோ அந்த அளவுக்கு கொண்டுபோனது இந்தப் பாடல். சினிமா வசனம் போல, ”சும்மாவே ஆடுவோம்.. இதுல கால்ல சலங்கையும் கட்டிவிட்டது” இந்தப் பாடல். அதுவும் அதில் வரும் வரிகள்.... சொல்லவா வேண்டும் ஒவ்வொரு ராஜா ரசிகனும் கொண்டாடிய பாடல்.

இந்தியில் இருந்து வந்த பால்கி, இசை தெய்வத்தோட பின்னணி இசை பற்றி ஒரு தொகுப்புடன் சொன்னார். சின்னத்திரையில் போடும் போது கண்டிப்பாக பாருங்கள். ஏன் பின்னணி இசைக்கு இசைஞானி தான் சரி என்று உருகி உருகி பேசுகிறார்கள் என்பது இதுவரை புரியாதவர்களுக்குக் கூட புரிந்தாலும் புரியலாம்.

அழகர்சாமியின் குதிரை படத்தின் பின்னணி இசை வாசிக்கப்பட்டது.

"சார் இப்போ உங்க செல்லம்" என்றவுடன் - இசைஞானி "இளையராஜாவோட இளையராஜாவா" என்று செல்லமாக அழைத்தவுடன், ஒருபக்கம் சந்தோஷமாக இருந்தாலும் ஆகா இந்த குட்டி சாத்தான் ஏதாச்சும் சித்து வேற செய்யுமோவென பயமும் வந்தது. நல்லவேளையாக பாடிய 2 பாடல்களும் எந்த வித சொதப்பலும் இல்லாமல் பாடினார்.

ஏதோ மேகம் ஏதோ தாகம் - இளம் பாடகர் கார்த்திக் மிக அற்புதமாக பாடினார். அதே போல ஸ்ரீராம் பார்த்தசாரதியும் இளம் காற்று வீசுதே பாடினார்.


ஜேசுதாஸ் + பாலு சார் இருவரும் அதுவும் கூடவே இசைஞானி இப்படி ஒரு கூட்டணி இருக்கும் போது அந்த பாடல் பாடாமல் இருப்பார்களா! காட்டுக்குயிலு - இருவரும் மிக மிக அற்புதமான பாடினார்கள். ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகம்.

கண்ணன் ஒரு கைக்குழந்தை பாடல் பதிவின் போது நடந்த சம்பவங்களை ஜேசுசாரும் இசைஞானியும் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக பூங்காற்று புதிதானது, கேளடி கண்மணி பாடகன் சங்கதி, யார் தூரிகை என்ற பாடல்களில் சிலவரிகள் பாடினார்கள். வாசித்த அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்தோம். கூடவே கிட்டார் இசைக்கலைஞர் (சரியாக அவர் பெயர் நினைவில்லை) பற்றியும் அவர் குடும்பத்தினர் பற்றியும் இசைஞானி நெகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் பகிர்ந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் நிறைவாக புத்தாண்டை முன்னிட்டு அன்றும் இன்றும் என்றும் என்றொன்றும் "தமிழனின் புத்தாண்டு பாடல்" பாடினார்கள். சும்மாவே பாலு சார் அசத்துவார். இந்தப் பாடலுக்கு சொல்லவா வேண்டும். மனுஷன் அணு அணுவாக பாடி பின்னிட்டார்.

என் சோகம் என்னோடு தான் என்ற வரிகளுக்கு முழு அர்த்தமாக நின்றார் இசைஞானி. எந்த ஒரு நிலையிலும் ஒரு சின்ன அசைவிலும் கூட தன் மனத்தில் உள்ள வலியையோ இல்லை வருத்தத்தையோ ஒரு துளி கூட காட்டிக்கொள்ளாமல். எங்கிருந்தோ எப்படி எல்லாமோ பல வலிகளை கடந்து சுமந்து வந்திருக்கும் ரசிகனுக்கு என்ன தேவையோ அவன் எதை எதிர்பார்த்து வந்திருப்பான் என்பதை உணர்ந்து அதை முழு தரத்துடன் கொடுப்பதில் என்றென்றும் ராஜா எங்கள் இசை தெய்வம் என்பதை மீண்டும் மீண்டும் உரக்க சொல்லிக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியே !

வந்திருந்த அனைத்து ரசிகர்களையும் பார்த்து ”சரி பார்ப்போம் வருகிறேன்" என்று கையை அசைத்து அந்த வெள்ளை தீபம் நகர்கிறது. மீண்டும் தாயின் கருவறைக்குச் சென்று அந்த அமைதியையும் பாதுகாப்பையும், கதகதப்பையும் கிடைக்கப்பெற்ற எந்த மனுஷனாவது போதும் என்று சொல்லிவிட்டு விலகுவானா! அப்படியொரு சூழ்நிலையில் இருந்த பல ஆயிரம் ரசிகர்களை நகர்த்தினார் இசை தெய்வம். அங்கு வந்திருந்த பல ஆயிரம் ரசிகர்களுக்கு இதுவும் ஒரு இசை தெய்வத்தின் இசை இரவு மட்டுமே ! மற்றபடி என்றென்றும் இசை தெய்வத்தின் ரசிகர்களின் வாழ்க்கையில் எல்லா இரவுகளும் இசைஞானியுடன் தான் !

நிகழ்ச்சியை நடத்திய இயக்குனர் சுபாஸ்ரீ தணிகாசலம் தனது Facebookயில் இப்படி சொல்லியிருக்கிறார்

"oru aindhadi vaamanan netru isaiyaal ulagai alandhaar!! avar pidiththa kudaiyil oru kambiyaai naan... 45 days of practice, 5 hours of ecstasy ...15 years of media and music reality shows has culminated to the best moment of my life. i have to re post my previous message as i am speechless "MUSIC IS MY RELIGION and ILAYARAJA IS GOD"

பாடல்கள் தொகுப்பு

1) ஜனனி ஜனனி - இசைஞானி
2) அம்மா என்றழைக்காத - ஜேசுதாஸ்
3) நானாக நான் இல்லை தாயே - பாலு
4) இதயம் போகுதே - சிம்ஃபொனி ஸ்பெசல்
5) பருவமே - சித்ரா - பாலு
6) இதயம் ஒரு கோவில் - இசை தெய்வம்
7) நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி - ஹரிஹரன்
8) என் இனிய பொன் நிலவே - ஜேசுதாஸ்
9) கண்மணியே காதல் கற்பனை என்பது - பாலு
10) ஆயிரம் மலர்களே மலருங்கள்
11) புத்தம் புது காலை - சித்ரா
12) சின்னக்கண்ணன் அழைக்கிறான் - பாலமுரளி கிருஷ்ணா
13) விழியிலே மலர்ந்தது - பாலு
14) பூவே செம்பூவே - ஜேசுதாஸ்
15) ஒரு ஜீவன் அழைத்தது - இசைஞானி, சித்ரா
16) ஏதோ மேகம் ஏதோ தாகம் - கார்த்திக்
17) மடை திறந்து - பாலு
18) ஒரு ராகம் பாடலோடு - ஜேசுதாஸ்
19) சுந்தரி நீயூம் சுந்தரன் நானும் - ஹரிசரண்
20) நான் தேடும் செவ்வந்தி பூவிது
21) கும் சும் கும் - பா படம் - பவதாரணி
22) ஆயிரம் தாமரை மொட்டுக்களே - பாலு
23) பூங்கதவே தாழ் திறவாய் - தீபன் சக்கரவத்தி - உமா ரமணன்
24) சுந்தரி கண்ணால் ஒரு செய்தி - பாலு, சித்ரா
25) இளங்காத்து வீசுதே - ஸ்ரீராம் பார்த்தசாரதி
26) என்மனவானில் சிறகை விரிக்கும் - ஹரிகரன்
27) ராஜா கைய வச்ச - யுவன்
28) நினைவோ ஒரு பறவை - யுவன்
29) இது ஒரு நிலாக்காலம் - ரீட்டா
30) வச்ச பார்வை தப்பாதடி - ஜேசுதாஸ்
31) காட்டு குயிலு - ஜேசுதாஸ், பாலு
32) கண்ணன் ஒரு கைக்குழந்தை - ஜேசுதாஸ்
33) இளமை இதே இதே - பாலு


எல்லாவற்றையும் வார்த்தையில் பகிர்ந்து விட்டால் உணர்வதற்க்கு !? என்னால் வார்த்தையில் பகிந்துக்கொள்ள முடிந்ததை பகிர்ந்து இருக்கிறேன். பொங்கல் அன்று மீதியை அனைவரும் முடிந்தால் உணருங்கள் !