Friday, October 17, 2008
நானும்... என் சினிமாவும்...
இந்த தொடர் விளையாட்டுக்கு என்னை அழைத்த தம்பிக்கும் தல கானாவுக்கும் என்னோட நன்றிகள். இவுங்க ரெண்டு பேர்கிட்டயும் சினிமாவைப் பத்தி பேசுறதேயே ஒரு பதிவாக கூட போடலாம். அந்த அளவுக்கு சுவாரசியம் மிகுந்தவர்கள்.
சொந்தக்கூவல்
சினிமா அப்படின்னு நினைச்சவுடனே மனதுக்கு வருவது அப்பா தான். யாராவது எனகிட்ட உன் அப்பாவுக்கு என்னடா வாங்கி கொடுத்திருக்கன்னு கேட்டா "பிதாமகன்" படத்துக்கு நைட் ஷோ டிக்கெட் வாங்கி கொடுத்தேன்னு பெருமையாக சொல்லுவேன். எல்லாமே தாய்வழி செய்திகள் தான் எங்கள் வீட்டில். அப்பாவுக்கும் எனக்கும் உண்டான பேச்சுகள் மிகவும் குறைவு. அப்படியே இருந்தாலும் அது சினிமாவை பத்தித்தான் இருக்கும். சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினிக்கு ஆல்பட் தியேட்டர், கமலுக்கு தேவி இல்லைன்னா சத்யம். அவரோட பழைய நினைவுகள் அந்தந்த படங்கள் பார்க்கும் போது சொல்லுவார். அவர் சொல்லி மறுக்காமல் கேட்கும் ஒரே விஷயம் இதுவாகத்தான் இருக்கும். இன்னும் இருக்கு. ஆனா இத்தோட சொந்த கூவல் முடிச்சிக்கிறேன். கேள்வி பதிலுக்குப் போவோம்.
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
எந்த வயது என்பது எல்லாம் நினைவில் இல்ல...அம்மா, அக்கா பக்கத்துவீட்டு ஆளுங்கன்னு ஒரு சிறுபடை சூழ போன படம் "முப்பெரும் தேவியர்கள்". நான் அக்கா அம்மா அப்பாவுடன் பார்த்த படம் "மைடியர் குட்டிசாத்தான்". ஒரு முறை அம்மா ஊருக்கு சொல்லும் போது நானும் கூட வருவேன் என்று அடம் பிடித்த என்னை சமாளிப்பதற்காக அம்மா அப்பாவிடம் சொல்லி அப்பா கூட்டி சென்ற படம் "துர்கா". அன்னிக்கு இருந்து இன்னிக்கு வரை அந்தப்பொண்ணை எனக்கு பிடிக்காது. ரொம்ப வாய் அதுக்கு.பயங்கரமா பேசிக்கிட்டே இருந்துச்சு. :) அது தான் அப்பாவுடன் ஒன்னு சேர்ந்து இன்னியவரையில் பார்த்த படம். படத்தின் இடைவேளையில் அப்பா எனக்கு ஆசை சாக்லெட் வாங்கி கொடுத்தாரு. இதுல என்ன உணர்ந்திங்கன்னு கேட்டா இடைவேளையில் என்ன வாங்கி கொடுப்பாங்க என்ற நினைப்பிலேயே போயிடும். இதுல என்ன உணர்வதற்கான வாய்ப்பு ரொம்ப கம்மிங்க. அப்புறம் நமக்கு நாமே என்கிற திட்டம் வந்தவுடன் நண்பர்களுடன் பல படங்கள் பார்த்தாச்சி.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
"சரோஜா". பொதுவா எல்லா மொக்கை படத்தையும் பார்த்தாலும் சில படங்களை போஸ்டர் பார்க்கும் போதே முடிவு பண்ணிடுவேன். இதை உடனே பார்க்கலாமா வேண்டாமான்னு. அப்படி பார்க்கலாம் என்கிற படங்களைகூடத் தனியாக பார்க்க வேண்டுமா இல்ல கூட்டாளிங்க கூட பார்க்கலாமுன்னு கூட முடிவு பண்ணிடுவேன். எனக்கு பிடித்த இயக்குனர்கள் படம் வந்தால் தனியாக பார்ப்பதுதான் வழக்கம். அதுல ஒரு சென்டிமெண்ட் வேற ;) சரோஜா ரொம்ப நாளைக்குப்பிறகு பார்த்த செம படம்.....பசங்க கூட ஒன்றாக சேர்த்து பார்ப்பதே ஒரு தனி சுகம்.
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
கடைசியாக என்றால் "அழகிய தீயே". ஒரிஜினல் டிவிடி சென்ஷி வாங்கி வைத்திருந்தான். அருமையான திரைக்கதை. சினிமா உலகத்தில் மொத்தமாக நுழையாமல் சில காட்சிகளிலேயே அவர்களோட மொத்த உணர்வுகளையும் சொல்லியிருப்பாரு இயக்குனர். வசனங்கள் எல்லாம் டாப்பு. சிரிச்சுக்கிட்டே ஊசி போடுற மாதிரி இருச்சு அந்த படம்.
4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?
"நாயகன்", "தளபதி". இந்த ரெண்டு படமும் எத்தனை முறை பார்த்திருப்பேன்னு எனக்கேத் தெரியாது. இதுல தளபதி எல்லாம் தெலுங்கு, இந்தின்னு எந்த சேனலில் போட்டாலும் பார்ப்பேன். அப்படி என்னதாண்டா இருக்குன்னு அம்மாகிட்ட செல்லமாக திட்டு வாங்கிட்டே பார்க்கிற படங்கள் இவை ரெண்டும். இந்த முறை ஊருக்கு சென்ற போது கூட கே.டிவில் "நாயகன்" பார்த்தேன் அதுவும் டைட்டிலில் பெயர் போடுவது முதல் பார்க்கனுமுன்னு ஒரு வெறி. இந்த இரண்டு படங்களை பொறுத்தவரைக்கும் டீம் ஒர்க் நல்லாயிருந்த படம். அருமையாக வரும்ன்னு சொல்ல கூடிய படங்கள். இவை எல்லாத்தையும் கடந்து இரண்டிலும் ராசா தான் இசை. :)
5. அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?
தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் வேற வேற இல்லைங்க. பெருசா தாக்கலன்னாலும் அது வரையில் மனதில் உயரத்தில் இருந்த அவர்(!) ச்ச.. இவருக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலைன்னு நினைக்க வச்சாரு. இப்பவும் எங்கயாச்சும் அரசியல் சார்ந்த அவரோட செய்திகள் படிக்கும் போது கடுப்பாக இருக்கு. அவர் "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்".
5. ஆ உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
படத்தோட ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் இவங்களைத் தவிர நமக்கு இந்த ஒளிப்பதிவு மேல ரொம்ப பாசம் அதிகம். அதுவும் "பி.சி. ஸ்ரீராம்" மேல கொலைவெறி! இவர் மேல பாசம் ஓவராகி நானும் கையில கிடைச்ச கேமரா எல்லாம் வச்சி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்....(எங்க வெளிச்சம் வருது. அவரு வச்சா மட்டும் வருது. நான் வைத்தா ஒரே இருட்டாத்தான் வந்துச்சு) புகைப்படம் எல்லாம் எடுத்து பல்பு வாங்கிய பல விஷயம் இருக்கு. அவரு எடுத்த படங்கள் எல்லாம் என்னை ரொம்ப தாக்கியிருக்கு.
"கலைஞானி" உழைப்பு எப்போதும் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திகொண்டே இருக்கிறது.
6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
இது என்ன கேள்வி? வாசிக்க தொடங்கிய முதல் விஷயமே அதானே. இப்பவரைக்கும் அதை கண்ணும் கருத்துமாக செய்துக்கிட்டு வரேன். இப்பகூட பாருங்க இந்த கேள்வி பதில் பதிவு போடுற எல்லா பதிவையும் படிக்கிட்டு தான் இருக்கேன்.
7. தமிழ் சினிமா இசை?
இசைன்னு சொன்னாலே அவரை தவிர என்னால வேற யாரையும் நினைக்க முடியல. இன்னும் அந்த பழக்கம் என்கிட்ட இருந்துக்கிட்டே இருக்கு செய்திதாள்களிலோ, வார இதழ்களிலோ, இணையத்திலோ அந்த பெயரையோ, புகைப்படத்தையோ பார்த்தாலே போதும். உடனே அதை எடுத்து பாதுகாப்பாக வச்சிக்கிறது வழக்கம். அப்படி அந்த பெயரில் என்னதாண்டா இருக்குன்னு கேட்டா தெரியல. அப்படி என்னத்த செய்துட்டாருன்னு கேட்டா என்னதான் செய்யலன்னு மனசுக்குள்ள இருந்து உடனே ஒரு கேள்வி வருது. பல நேரங்களில் நண்பர்களுடன் சண்டை வேற ;) அவரோட இசையை தவிர வேற இசை எல்லாம் கேட்க மாட்டியான்னு கேட்டா?! கேட்பேன். ஆனா அவரு தான் எனக்கு எப்பவும். அந்த அவரு வேற யாரும் இல்ல. நம்மோட "இசைஞானி இளையராஜா".
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
கிடைச்சா போதும்னு ஒரு படத்தையும் விடுவது இல்லை. மலையாளம், இந்தி, ஆங்கிலம்ன்னு பார்த்துக்கிட்டே இருக்கேன்.....இன்னும் பார்ப்பேன். மலையாள திரைப்படங்கள் பற்றி சொல்லிக்கிட்டே போகலாம். அருமையான படைப்புகள் இருக்கு. இந்தியில் ராம்கோபால், அமிதாப் படங்கள் விடுவதேயில்லை மற்ற படி நண்பர்கள் சொல்லிப்பார்ப்பது உண்டு.
ஆங்கில படங்கள் இந்த ஸ்டார் மூவிஸ் வந்த காலத்தில இருந்தே பார்த்திருக்கேன்.
"மச்சி நேத்து நைட்டு பார்த்தியா"
"இல்ல மச்சி"
"அடப்பாவி மிஸ் பண்ணிடியே! சரி இன்னைக்கும் போடுறான் பாரு. ஹிந்து பேப்பர்ல பார்த்தேன்னு"
வகுப்பு நடக்கும் போது இங்க எங்க உலக சினிமா தகவல்கள் ஒடிக்கிட்டு இருக்கும். அன்னிக்கு ஆரம்பிச்சது இன்னிக்கு வரைக்கும் பார்த்துக்கிட்டே இருக்கேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ரசனைகள் மாறுபட்டு இருக்கு.
9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்கிறேன் என்கிற தொடர்பை தவிர வேற எதுவும் இல்ல.
10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சினிமா என்பது ஒரு துறை....எல்லா துறைகளிலும் எப்படி எல்லாம் ஏற்றத்தாழ்வுகள் இருக்குமே அதே போலத்தான் இந்த துறைக்கும். எதிர்காலம் பற்றி எல்லாம் சொல்ல நான் ஜோசியக்காரன் இல்ல....ஆனா நம்பிக்கை மிகுந்த இயக்குனர்கள், தொழில்நுட்பகாரர்கள் இருக்காங்க. அதனால் நல்லாத்தான் இருக்குமுன்னு நினைக்கிறேன்.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
அப்படின்னு ஒன்னு வரும் போது பார்த்துக்கலாம் இப்போ பார்க்க வேண்டிய நிறைய படங்கள் இருக்கு போயி பார்க்கனும் வரட்டா ;)
அடுத்து இந்த தொடரை தொடர நான் அழைக்கும் நலம் விரும்பிகள் :)
1. தலைவர் பினாத்தலார்
2. மங்கை அக்கா
3. சந்தோஷ் அண்ணாச்சி
4. மாப்பி ராம்
5. இனியவள் புனிதா
Thursday, October 09, 2008
பதிவர் ஸ்கேன் ரிப்போர்ட் - சென்ஷி
ஏற்கனவே பலதடவை காதலிச்சுருக்கான்னு சென்ஷி சொன்னப்பாலும் நம்பாத மனசு சமீபத்துல அவனோட ஸ்கேன் ரிப்போர்ட்ட பார்த்ததும் நம்பிக்கை வந்துடுச்சு.
காதலிக்கு இதயத்தை கொடுப்பாங்கன்னு சும்மா பேச்சுக்குத்தான் சொல்லுவோம். ஆனா சென்ஷி மொதல் காதலிக்கு இதயத்தை கழட்டி கொடுத்துட்டு அடுத்தடுத்த காதலுக்கெல்லாம் கொடுக்க இதயம் இல்லாததால (என்ன ஒரு கஞ்சத்தனம்... கடவுளுக்கு!) கல்லீரல், மண்ணீரல்ல ஆரம்பிச்சு உள்ள இருக்கற மிச்ச சொச்ச எல்லா ஸ்பேர் பார்ட்டையும் கிட்னி உள்பட கழட்டி கொடுத்துட்டு மறுக்கா லவ்வு பண்ண ஆரம்பிச்சுட்டேன்னு பந்தா வுட்டுத்திரியுறான்.
புதுசா வர்ற காதலி(களு)க்கு கொடுக்க இனிமே அங்க எலும்பு மாத்திரம்தான் பத்திரமா இருக்குது. அத நினைச்சாத்தான் பக்குன்னு இருக்குது.
ப்ளீஸ். ..
இதோட நீ லவ்வு பண்றத நிறுத்திக்கடா மாப்பி!..
இல்லைன்னா இருக்கற எலும்பு கூட மிஞ்சாது...!!!!!!
Wednesday, September 17, 2008
எல்லாம் முடிஞ்சிடுச்சி....
சோம்பேறிக்கு தோலோட வாழைப்பழமுன்னு சொல்லுவாங்க. அந்த தோலோட இருக்குற பழத்தைக்கூட யாராவது எடுத்து கொடுத்தா நல்லாயிருக்குமுன்னு நினைக்கிறவன்நான். வர வர ரொம்ப சோம்பேறித்தனம்.இந்த சோம்பேறித்தனத்தை வச்சிக்கிட்டே ஊருக்கு போனேன். 35 நாள் நானும் என்ஜாய். என்னை வச்சி சிலபேர் என்ஜாய்ன்னு ஒருவழியாக எல்லா என்ஜாய்யும் முடிச்சிக்கிட்டு வந்தாச்சி.
சென்னையில் பேனர்கள் இல்லை. நல்லதுதான் ஆன்னு வாய பொளந்துக்கிட்டு பேனர்பார்த்தவனுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான் (வேற யாரு நான் தான்!). ஆனா சென்னைரயில்களில் ஜோடி நம்பர் ஒன்னுன்னு ஒரு ஒரு ஜோடிக்கும் பேனர். ஆனா எல்லா ஜோடியும் முறைச்சிக்கிட்டு நிக்குது. என்னென்னு தெரியல
----------------- *
சத்யம் படத்தை சத்திய சோதனையுடன் கஷ்டப்பட்டு பார்த்துட்டு வந்தேன்.மறுநாள் நண்பன் ஒருவன் போன்.
"மச்சி! நைட்டு ப்ளான் ஒகே தானே"ன்னுகேட்டான்.
நானும் "ஆமாண்டா, எல்லாம் ரெடி"ன்னு சொல்லிட்டேன்.
"நீ எப்ப வர"ன்னு கேட்டேன்.
அதுக்கு அவன் "நீ காலையில என்ன பண்ணுற"ன்னு கேட்டான்.
"பெருசா ஒன்னும் இல்லைடா சொல்லு, என்ன விஷயம்?"
"அப்படின்னா ஒண்ணு செய். காலையில 11.30 மணிக்கு சத்யம் தியேட்டருக்கு வந்துடு. படம் பார்த்துட்டு அப்படியே நேரா போயிடுவோம். என்ன ஓகே வா?"
கரும்பு தின்ன கூலியா! "ரைட்டுமச்சி! நான் ரெடி.. ஆமா, என்ன படம் அதை சொல்லு டா....?!"
"ச்ச அது சஸ்பென்ஸ்..."சரின்னு காலையில 11.30 சத்யம் தியேட்டர் வாசல்ல நின்னுக்கிட்டு இருக்கேன் வந்தான்..."நேரா வாடா போவோம்ன்னு சொல்லி படிக்கட்டு கிட்ட வந்துட்டான்.
"டேய் இப்பவாச்சும் சொல்லுடா என்ன படமுன்னு கேட்டேன்."
"அதெல்லாம்முடியாது பெயர் போடும் போது உனக்கே தெரியும் வாடா.
"டேய் இதெல்லாம் ஓவரு அதெல்லாம் முடியாது ஒழுங்கு மரியாதையா சொல்லி தொலை. இல்ல நான் இப்படியே எஸ்கேப்பு."
"மச்சி சத்யம் தியேட்டரில் சத்யம் படம் சூப்பர்ல மச்சி."
"போடா லூசு அந்த தெலுங்கு படமா...அய்யே அந்த கொடுமையை தான் நேத்துதான் பார்த்துட்டு வந்தேன்.....திரும்பவுமா.ஆனா ஒன்னு முதல் முறை
பார்த்ததுக்கும் போதை விட்டு ரெண்டாவது முறை பார்த்ததுக்கும் கொஞ்சம்
வித்தியாசம் இருந்திச்சி.படம் முழுக்க சிரிச்சிக்கிட்டேஇருந்தேன். எல்லாம் கூட வந்த ஒரு கும்பல் அடிச்ச கமெண்ட்ஸ்.
தாம்தூம்
தலைவலி வந்தது தான் மிச்சம். அதுவும் இரவு காட்சிக்கு சென்றுசரியான பல்பு வாங்கினேன்.
ஜெயம் கொண்டான்
முக்கியமாக அந்த வில்லனுக்காகத்தான் படத்திற்கு
சென்றேன். படம் தொடங்கி 20 நிமிஷம் காலியான உடன் தியேட்டருக்குள்சென்றோம். நான் ஏன்டா போவோமான்னு கேட்டேன். கூட வந்த மாப்பி தான் படத்தைஏற்கனவே பார்த்துட்டேன்டா வா. நான் என்ன ஆச்சுன்னு சொல்றேன்னு சொன்னான்.அவனை நம்பி உள்ளே போன மச்சி நானும் இந்த இடத்தில் இருந்துதான்டா படத்தை
பார்த்தேன்னனு டயலாக்கு விட்டான். "மகனே நீ எல்லாம்.....ன்னு
நொந்துக்கிட்டு மீதி படத்தை பார்த்தேன். மெகா சீரியல் பார்த்த மாதிரிஇருந்துச்சி. கடைசியில பேசுற நாலு வசனம் தவிர.
A Wednesday
இந்திப்படம்இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் தியேட்டருக்கு உள்ளே போன பிறகு தான் அதுஇந்தி படமுன்னே தெரிஞ்சது. அதுக்கு யார் காரணம் எல்லாம் கேட்காதிங்க.சத்தியமாக நான் இல்லை. ஆனா 2.30 மணிநேரம் போனதே தெரியல ஒரே நாள்ல நடக்கிறகதை. தீவிரவாதிகளால பாதிக்கப்பட்ட ஒருவர் அந்த தீவிரவாதிகளை போலீஸ்
உதவியுடன் கொலை செய்கிறார். நல்லா எடுத்திருக்காங்க. சில வசனங்கள்
புரிஞ்சது. அப்போ மீதி வசனம் எல்லாம் புரியலியான்னு எல்லாம்கேட்கக்கூடாது. பக்கத்துல உட்காந்தவுங்களுக்கு எனக்கு இந்தி தெரியாதுன்னு சந்தேகம் கொஞ்சம் கூட வரல அந்த அளவுக்கு நம்ம நடிப்பு.
சரோஜா
ஊருக்கு போனதிலயே செம படம் ஒன்னு பார்த்தேன்னு சொன்ன அது இது தான். அது இங்கீலிபிசு கதையோ என்னாமோ. ஆனா வெங்கட் பிரபு கலக்கிட்டாரு. தியேட்டர்உள்ளே போகும் போதே பிரண்ட்சிப் பாண்ட் கொடுத்தாங்க. தோஸ்து படாதோஸ்துன்னு.படம் முழுக்க காமெடி தான். அதுவும் பயபுள்ளைங்க கூட ரொம்பநாள் கழிச்சி பார்த்த கலக்கல் படம். செம என்ஜாய்!
----------------- *
விரல் இடுக்குளில் டிக்கெட்டை வச்சிக்கிட்டு தோல் பையில இருந்து சில்லறைஎல்லாம் எடுத்து கொடுத்திக்கிட்டு இருந்த கண்டக்டர்கள் எல்லாம் இப்போ இல்ல. ஒரு ரெண்டு மூணு அமுத்து! டக்குன்னு ஒரு பிட்டு பேப்பர் வருது.அப்படியே கிழிச்சி கொடுத்துக்கிட்டு போயிக்கிட்டே இருக்காங்க. நல்ல முறைதான். ஆனா என்ன! அடுத்த முறை பார்க்கும் போது அந்த குட்டி இயந்திரம்இருக்கும். இந்த கண்டக்டர்கள் இருப்பாங்களான்னு தெரியல.
----------------- *
டிவி சீரியல் எல்லாம் பார்க்குற கொடுமையை ஒரு ரெண்டு நாள் அனுபவிச்சேன். அதில் இந்த அரசி சீரியலில் வரும் லியாஸ் அலிகான் பேசுற விதமேஅப்படித்தானா.. இல்ல இந்த சீரியலுக்காக இப்படி பேசுறாரான்னு ஒரே சந்தேகம். என்ன சி சே எப்படி இருக்கிங்க.. சி சேன்னு அவரு பேசுற விதம்அய்யோ சாமி இயந்திர மனிதன் பேசுற மாதிரியே இருக்கு. இன்னும் விஜய் டிவியில ஏதாவது ஒரு போட்டி வச்சி அதுக்கு ஊரையே கூட்டி வச்சிகும்மியடிச்சிக்கிட்டு இருக்காங்க. ஆற்காடு வீராசாமி அவர்களின் புண்ணியத்தால் ஒரு நாளைக்கு சில மணிநேரங்கள் எந்த வித சீரியல் கொடுமையும் இல்லாமல் தூங்க முடிஞ்சது.
----------------- *
இந்த முறை கோவில் குளம் என்று செல்ல வேண்டியதாக இருந்துச்சி. மயிலை கோவிலில் ஆர்ம்பித்த பயணம் எங்க வூட்டு பக்கத்துல இருக்குற விநாயகர் கோவில்ல வந்து முடிந்தது. திருத்தணி முருகனுக்கு மொட்டையும் போட்டாச்சு.மொட்டை போடும் போது ஏர்போர்ட்டில் ஏதாவது பிரச்சனை வருமோன்னு ஒரு சின்ன பயம். மொட்டை போட்ட புண்ணியத்துல தலையில் இருந்த வெட்டு காயங்கள்தெரிந்தது. ஒவ்வொரு வெட்டு காயத்தையும் தொட்டு பார்க்கும் போது அம்மா நினைவுகள் வந்து சென்றது. அதிக பட்சம் எல்லாம் அம்மாக்கிட்ட வாங்கியவெட்டு தான்.. அந்த அளவுக்கு அம்மாவை இம்சை படுத்தியிருக்கேன்.
இந்த முறைதிருப்பதி தரிசனம் எல்லாம் நல்லபடியாக முடிந்தது. ஆனால் கோவிலில் கொடும்!பிரசாதம் கொஞ்சம் கூட நல்லவேயில்ல.சக்கரைப் பொங்கல்ன்னு ஒன்னு கடனுக்குன்னு தந்தாங்க அதில் இனிப்பே இல்ல பெருமாள் என்னைக்குஇவுங்களுக்கு நல்ல புத்தி கொடுப்பாரோ. அதே போல வேலூரில் உள்ள பொற்கோவில் மிகப்பிரமாண்டமாக இருந்துச்சி. எல்லாரும் ரொம்ப அழகாக செய்திருக்காங்க.அப்படி இப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஆனா எனக்கு என்னமோ அந்தகோவிலுக்குப் போகவே பிடிக்கல. அதனால வெளியிலேயே நின்னுட்டேன்.
இப்படியாக ஒரு வழியாக 35 நாள் எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்துட்டேன்.
Monday, July 21, 2008
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..::மைபிரண்டு::..
நேற்றைய கழிந்த இரவு முதலாய்
விடிகின்ற பொழுதுகளின் சந்தோஷத்தை
சுமக்கின்ற பறவைகளை அனுப்பி வைத்தேன்
அதன் சிறகினில் வாழ்த்துக்களை கோர்த்து வைத்தேன்.
நீர் கொண்ட கரு மேகங்களின்
காற்றிடைவெளி அதிகரித்து
உனக்கான சுவாசம் அனுப்பி வைத்தேன்
அதில் வாழ்த்துப்பாவையும் பாடி வைத்தேன்.
கவிதை சுமந்து வரும் எழுத்தின் வழி
கொஞ்சம் காற்றையும் சுமக்கச் சொல்லி வைத்தேன்
கண்கள் தொடுகின்ற திசையனைத்தும்
எந்தன் வாழ்த்துப்பா உன்னை போற்றட்டுமே
விடிகின்ற விடிவெள்ளி வெளிச்சத்துளி - தங்காய்
உனக்கான கதிராக இருக்கின்றது
விடை கொடுத்து அனுப்பிவை கவலைகளை - இன்று
பிறந்தநாள் கொண்டாடும் தங்கச்சியே..!
என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் மைபிரண்டு....
Saturday, July 12, 2008
காத்திருந்த காதலி: பாகம் 9
காத்திருந்த காதலி: வடகரை வேலன் பாகம் 1
பரிசல் காரன் பாகம் 2
வெயிலான் பாகம் 3
கிரி பாகம் 4
ஜெகதீசன் பாகம் 5
டிபிசிடி பாகம் 6
கயல்விழி முத்துலெட்சுமி பாகம் 7
மை ஃபிரண்ட் - பாகம் 8
முதல்ல எல்லா பாகத்தையும் படிச்சிட்டு ஒரு மாதிரி குழப்பத்தோட வாங்க.. இல்லைன்னா இந்த பாகம் புரியாது. எப்படியும் நீ எழுதியிருக்கிறது புரியப்போறதுல்லன்னு நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது. இருந்தாலும் ஒரு முன் எச்சரிக்கை அதான்.
கெளரியோட அப்பாவை மை ஃபிரண்ட் துரத்திட்டாங்க...அப்புறம் இந்த கெளரியை கார்த்திக்கோட டைரியை திறந்து பார்க்குற மாதிரி வச்சிட்டாங்க....மீதி நான் எழுதியிருக்கேன். இப்போ கதைக்கு உள்ளே போவோம். ரொம்ப உள்ள போயிட்டு என்னை காணோமேன்னு தவிக்கக்கூடாது. பத்திரமா ஒவ்வொருத்தரா கையைப்பிடிச்சுட்டு என் பின்னாடியே அப்படியே பொறுமையா வாங்க.
----------------------------------------------------------------------------------------------------------
ஆஸ்பத்திரியில் நால்வருக்கும் ஒன்றும் புரியாமல் குழம்பி போயிருந்தனர். சங்கர் அரைமயக்கத்தில் இருந்து முழுமயக்கத்திற்க்கு சென்றுவிட்டான். கார்த்திக் மனதில் சங்கர் என்ன சொல்லியிருப்பான். என்ன சொல்லியிருந்தால் கௌரி அப்பா வெளியே சென்றிருப்பார். ஒரு வேளை வெளியே போங்கன்னு சொல்லியிருப்பானோ! அதான் அவர் போயிட்டாரா....ச்ச எதுக்கு அடிக்குறானுங்கன்னு தெரியாமல் அடிவாங்குறேன். இது என்ன நம்ம நிலைமை வடிவேலு காமெடி மாதிரி ஆகிடுச்சி....
அப்பா : "டேய் உங்க ரெண்டு பேருக்கும் என்னடா ஆச்சு நல்லா தானே இருந்திங்க"
அம்மா : "உங்க ரெண்டு பேரையும் எந்த குறையும் இல்லாமத்தானேடா வளர்த்தோம். இப்ப என்னடா நடக்குது...ஒண்ணுமே புரியலியே கடவுளே!"
"இவுங்களுக்கு என்னத்த சொல்லி புரிய வைக்குறது. எனக்கே என்ன நடக்குதுன்னு புரிய மாட்டேங்குது."
கார்த்திக் : "சார்.... கதை எழுதற கோபி சார்....! உங்களைத்தான்.... கொஞ்சம் கதையை வேற எங்கயாச்சும் சுத்திட்டு அப்புறம் வாங்களேன். இங்க புலம்பல் ஓவராக இருக்கு....எனக்கு ஒண்ணும் புரியல ப்ளீஸ் ... டோண்ட் ரைட் ஃபீலிங்க்ஸ் :( !"
கதை எழுதற கோபி (அதாவது நான்): "கார்த்திக் இப்படி ரொம்ப பீல் பண்ணி கேட்டுகிட்டதானால நாம இப்போ கேளரி....ச்ச..கெளரி இருக்கும் இடத்திற்க்கு போக போறோம். எல்லாம் லைன்ல வாங்க....."===========================================================
சகமனுஷன், அது ஆணா இருந்தா என்ன, இல்ல பெண்ணா இருந்தா என்ன.. அவுங்க யாரை காதலிக்கிறாங்கன்னு தெரிஞ்சிக்கிறதுல இருக்குற ஒரு சுகமே தனி சுகம். கிசுகிசு படிக்குற கிராதகனுங்க.. நாம படிச்சவுங்கதானே (ஆமாம். பத்தாவது பார்டர்ல பாஸ் பண்ணிட்டு இப்படி அடிக்கற அலம்பலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல). இப்படி யாரும் இல்லாத வீட்டுல அதுவும் அதிகம் சம்பந்தமே இல்லாத ஒருத்தர் அறையில் அவரோட டைரியை எடுத்து படிக்கிறோமே என்பதில் வெட்கமோ குற்ற உணர்வுகளே அப்போது அவளுக்கு தோன்றவில்லை. ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி. அதனை அடைவதற்க்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் தான் அப்போது அவளுக்கு இருந்தது.
அழகான டைரி ஈகிள் நிறுவத்தினரால் தயாரிக்கப்பட்ட டைரி அது. அழகான வேலைப்பாடுகள் நிறைந்திருந்தது. புதியதாக பைண்டிங் முறையில் செய்யப்பட்ட நேர்த்தியான டைரி. டைரியின் வேலைப்பாடுகளை ரசித்துக்கொண்டிருந்தவள் "இது அவன் காசு கொடுத்து வாங்கியிருப்பானா... இல்ல ஓசியில ஏதாவது கம்பெனியில இருந்து வாங்கியிருப்பானா.. ச்ச! இது என்ன அவனோட காதலியை பத்தி தெரிஞ்சிக்கலாமுன்னு வந்தா இப்படி டைரியை பத்தி யோசிச்சிக்கிட்டு இருக்கேன். சும்மாவா சொன்னாங்க பெரியவுங்க.. மனுஷன் மனசு குரங்குன்னு ஒரு இடத்துல ஒரு நிமிஷம் இருக்கா....தவிக்கிட்டே இருக்கு என்று எண்ணி தனக்கு தானே சிரித்துக் கொண்டாள். ச்சே! இது என்ன சிரிச்சிக்கிட்டு இருக்கேன். என்னோட காதலன் அங்கே விபத்துல இருக்காரு இப்படி சிரிச்சிக்கிட்டு இருக்கேன். இதை யாராவது பார்த்தா என்ன சொல்லுவாங்க. (டேய்! இதுக்கெல்லாம் ஒரே பேரு தாண்டா மெண்டல்). என்ன இது.. இப்படி லூசு மாதிரி (கன்ஃபர்ம் ஆயிடுச்சு பார்த்தியா) எண்ணங்களை ஓட விட்டுட்டுக்கிட்டு இருக்கேன். இப்படி மொத்தமாக படிக்கிற உங்களையும் லூசு மாதிரி யோசிக்க வைத்துக் கொண்டே டைரியின் முதல் பக்கத்தை திறந்தாள்.
(பேக் கிரவுண்டில் சுட்டும் விழிச்சுடரே.. கஜினி பட பாடல் ஒலிக்கத்தொடங்கினால் அது என் தவறில்லை. அசினை மட்டும் மனதில் கொள்ளுதல் நலம்)
அடங்கொய்யால.... எடுத்தவுடனே இவனும் டைரியில கவிதையில வாந்தி எடுத்து வச்சிருக்கானே.. :(
************************* ********
**************
*********************
*************
!
!!
(அடுத்தவங்க கவிதைய என் பதிவுல போட்டு திருட்டுப்பையன்னு சொல்லிட்டா என்ன செய்யறது.. அதான் ஒரு எச்சரிக்கை)
கௌரிக்கு அதை படித்தபோது ஏதோ புரிந்ததுபோல் இருந்தது. ஆனால் ஒன்றும் புரியாமல் தவித்தாள். கால்கள் தடுமாறின. தலை சுற்றியது. பின்னால் விழுவது போல இருந்து மீண்டு சுதாரித்தாள். டைரியில் பத்திரப்படுத்தியிருந்த பழைய மல்லிப்பூவை முகர்ந்ததால் இந்த வேதனை என்பது சிறிது நேரத்திற்கு பின் உணர்ந்தாள். கருமம் பிடிச்சவன். லவ் பண்றாங்கறத நெனைப்புல வச்சுக்க வேற ஏதுமே கிடைக்கலையா. காஞ்சு போன மல்லிப்பூவ வச்சிக்கிட்டு இவன் என்னத்த செய்யறான். இந்த மல்லிப்பூவின் நார் கிடைத்தாலாவது ஏதாவது துப்பு கிடைக்கலாம். டைரியின் பக்கங்களை மெல்ல பயத்துடன் திருப்பினாள். அடுத்தடுத்த பக்கங்களில் அவன் காதலி கண்டு பயந்த கரப்பான் பூச்சியை பாடம் செய்து வைத்திருந்தால் என்ன செய்வது என்ற எண்ணமே அவள் இதயத்துடிப்பை அதிகரித்து இதயத்தை வாய் வழியாக எடுக்கும் நினைவில் வந்தது.
இன்று.... 2002 - பிப்ரவரி - 10 ந்தேதி - லேண்ட் மார்க்கில் அவளுக்காக வேலண்டைன் கார்டு வாங்க நின்று கடனுக்கு அட்டை கிடைக்காமல் திரும்பி வந்தேன். (அடடா.. என்ன கொடும சார் இது..!)
2002- பிப்ரவரி - 12 ந்தேதி- பர்மா பஜாரில் உள்ள பெரிய ஒலிம்பிக் கார்டு கடையில் கஷ்டப்பட்டு ஒரு கார்டை லவட்டி வந்து அர்ஜண்டாய் அவள் பெயரை எழுதி பத்திரப்படுத்தியாயிற்று. இன்னும் இரண்டு நாட்களில் அவள் கையில் தந்து பரிசாய் ஒரு சாக்லேட்டாவது அவள் காசில் சாப்பிட வேண்டும். (லவ்வுக்காக லவட்டுறதுங்கறது இதுதான் போல)
2002- பிப்ரவரி- 14 ந்தேதி - காலை 10 மணி - இன்னும் ஒரு மணி நேரத்தில் அவளை சந்திக்கப் போகிறேன். அவள் என்ன சொல்வாளோ என்ற பயம் நெஞ்சை அரிக்கிறது. காலையில் சாப்பிட்ட எண்ணெய் அதிகமான பூரியின் வேலையாய் கூட இது இருக்கலாம்.
2002- பிப்ரவரி- 14 ந்தேதி - மாலை 7 மணி - கௌரி எனக்கு துரோகம் செய்வாள் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் இவனும் துரோகியாகிவிட்டானே என்ற எண்ணத்தில் நான் இரவு சாப்பிட பிடிக்காமல் கண்களை இறுக மூடிக்கொண்டு படுக்கையில் படுத்து விட்டேன். (காசில்லைடா.. வேற என்ன செய்வ)
கௌரிக்கு அதை படிக்கும்போது அதிர்ச்சியாக இருந்தது. காரணம் சங்கர், அவளிடம் பகிரங்கமாய் காதலை சொன்னதும் அதே எழவெடுத்த தேதியில்தான்.... ஒருவேளை.. ஒருவேளை.. கார்த்திக் லவ் பண்ண பொண்ணு பேரும் கௌரியா இருக்குமோ.. (இவ சுத்த லூசு பொண்ணு.. கடவுளே இவகிட்ட வந்து கார்த்தி இவளைத்தான் லவ் செஞ்சான்னு சொன்னாலும் நம்ப மாட்டா போல. தனியா புதுசா ஒரு கேரக்டர இவளே கிரியேட் செய்யறா...) ஆனால் அடுத்த பக்கத்தில் அவன் எழுதியிருந்த வரிகளை படிக்க படிக்க அவளுக்கு பதற்றமும் பயமும் உண்டாயிற்று.. "கௌரி இந்த உயிர் உன்னுடன் வாழ்வதற்கு வைத்திருக்கிறேன். உன்னுடன் வாழ்வதற்கு எவனும் குறுக்கே வந்தால் அவன் உயிரை எடுப்பதற்கும் துணிந்திருக்கிறேன்" இப்படிக்கு உன் அன்பு கதலன்... கார்த்திக் (நாசமா போனவன் காதலன்னு தப்பில்லாம உருப்படியா எழுத துப்பில்ல.. அத விட்டுட்டு இந்த நாதாறிக்கு லவ்வு ஒரு கேடு). டைரியை தோளில் மாட்டியிருந்த டம்பப்பையில் போட்டுக்கொண்டு அறையை விட்டு வெளியேற அவள் கண்கள் அதிர்ச்சியில் உறைந்தது.
காரணம் வெளியே.... (சஸ்பென்ஸ் வைக்கலாம்ன்னு நெனைச்சு நான் இதை எழுதாம விட்டு, நான் நெனைக்காதத அடுத்து வர்றவரு எழுதிட்டா என் கதை என்னாகறது). அரையடி ஸ்கேல் நீளத்திற்கு நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு மூன்றடி உயரத்தில் வீட்டு வாசலில் படுத்திருந்த அந்த தெரு நாய் அவளை கண்டு எழுந்து நின்று குரைக்க ஆரம்பித்தது. பயத்துடன் மீண்டும் வீட்டின் உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டு ஜன்னலின் வழியே நாயைப்பார்த்து பழிப்பு காட்டியதும்தான் அவளுக்கு நிம்மதியானது.
அந்த சமயம்..
வாசலில் வந்து நின்ற காரிலிருந்து அவளது அப்பா இறங்கினார். வீட்டிற்குள் இருந்த கௌரியை கண்டு முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு நாயை தாண்டி உள்ளே நுழைந்தார்.
ஜன்னலின் அருகே சென்று கௌரியை பார்த்து, "என்னமா இது. இப்படி நாய்க்கு போய் பயந்து உள்ள ஒளிஞ்சுட்டு இருக்கே. குலைக்கிற நாய் கடிக்காதுங்கறத பழமொழிய நீ கேள்விப்பட்டது இல்லையா"
பய உணர்வுடன் கௌரி, "அந்த பழமொழி எனக்கு தெரியும்ப்பா. ஆனா அது இந்த நாய்க்கு தெரியுமான்னு தெரியலையே.. அவசரத்துல எங்கயாச்சும் கடிச்சு வச்சுட்டா நான் என்ன செய்ய"
அப்பா: "தப்பும்மா. வாயில்லா ஜீவனை இப்படில்லாம் பேசக்கூடாது"
கௌரி: "அது வாயில நீங்க கைய வச்சு இந்த டயலாக்க சொன்னாக்கூட நான் நம்ப மாட்டேன்."
"ட்டம்மார்.." வெளியே பெருத்த சப்தத்துடன் காரின் டயர் வெயில் தாங்காமல் வெடித்தது.
(இதுக்குப் பேரு சஸ்பென்சான்னு யாரும் கேக்கப்படாது. என்னை மாதிரி அடுத்து வர்றவங்க கஷ்டப்படக்கூடாதுன்னு நானே ஒரு பிட்டை எடுத்துப்போட்டிருக்கேன். அம்புட்டுதான்)
=======================================================================
சரி இத்தோட என்னோட கடமை முடிந்தது (இந்த மாசத்து கடமைன்னு எல்லாம் கிண்டல் பண்ணக்கூடாது) அடுத்து நான் அழைக்கும் நபர்..... தற்போது அமெரிக்காவில் இந்த பக்கம் ஒரு வெள்ளை இந்த பக்கம் ஒரு கருப்பின்னு நடுவுல நம்ம ஆளு அதாங்க நம்ம கதாசிரியார் கப்பி பய ;)
Saturday, June 14, 2008
சிவாஜி வாயில ஜிலேபி - தசாவதாரம் அல்வா
படத்தை பற்றி நிறைய விமர்சனங்கள் வந்துவிட்டது இனியும் வரும்.
சிறிய வயதில் தீபாவளிக்கு 1 மாதம் முன்னே எந்த பட்டாசு வாங்குவது, கடைசி நேரத்தில் வெடிக்காமல் போனால் எதிரிக்கூட்டத்தில் முன் மானம் போகுமே என்று ஒன்றுக்கு பலமுறை வெயிலில் காயவைத்தும் தீபாவளிநாள் அன்று ஒரு 5000 வாலா வெடிச்சரத்தை நடுத்தெருவில் வைத்து மொத்தக்கூட்டமும் காதை பொத்திக்கொண்டு அய்யோ சரம் வெடிக்கறாங்க என்று 10அடி தூரத்தில் அவர்களை நிற்கவைத்துவிட்டு, தீயை கொளுத்தியவுடன் அந்த சரம் வெடிக்காமல் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று போகாமல் சும்மா சர சரன்னு வெடித்து ஊரையே ஒரு நிமிடம் நம்மைபார்க்க வைக்கும் போது மனிதில் ஏற்படும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அதுபோலத்தான் கலைஞானியின் இந்த தசாவதாரம் படம்.
இத்தனை வருடங்களில் நமக்குள் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்திருக்கிறார்கள். படம் தொடங்கியதும் வெடிக்க ஆரம்பிக்கிறது. முடியும்வரையில் வெடி வெடி தான். இத்தனை வருட உழைப்பு ஒன்றும் ஃபிலிம் காட்டுவதற்கு இல்லை என்பது படத்தை பார்க்கும் போது புரிகிறது.
12ம் நூற்றாண்டில் தொடங்கி அமெரிக்க விஞ்ஞானி வழியாக ஒவ்வொரு கமலாக உள்ளே வருகிறார்கள். ரெட்டியாக வரும் கமல் அவரை பார்த்தவுடனே திரைஅரங்கில் சிரிப்பு சத்தம் கேட்க தொடங்கிவிடுகிறது. 10 கமலுக்கும் ஒவ்வொரு இடத்தில் அவர்களின் திறமை காட்ட வைத்திருக்கிறார்கள். எந்த கமலும் வேஸ்டாகவில்லை என்றே எனக்கு தோன்கிறது. ஆனால் பலபேருக்கு தோன்றும் ஒரே சந்தேகம். எதற்காக அந்த 12ம் நூற்றாண்டு காட்சிகள் என்பது தான். படத்திற்கு எங்கும் சம்பந்தமே இல்லை, ஆனால் அந்த பாடலும், அந்த சண்டை காட்சிகளும் அற்புதமாக இருக்கிறது. தல கே.ஆர்.எஸ் இந்த படத்தை வைத்து பதிவு போட மேட்டர் இல்லாமல் காட்சிகள் கற்பனை கலந்தது என்று முன்னே சொல்லிவிடுகிறார்கள்.
குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால் அந்த கேள்விகள் நம் மனதில் தோன்றியவுடனே இன்னொரு கமலின் அறிமுகம் கிடைத்துவிடுகிறது. அதனால் அந்தக்கேள்வி நம் மனதில் தோன்றிய வேகத்தில் மறைந்துவிடுகிறது. இடைவேளைக்குள் 8 கமல்களை காட்டிவிடுகிறார்கள்.
ஒளிபதிவர் ரவிவர்மனின் உழைப்பை பாராட்ட வேண்டும். ஒவ்வொரு காட்சியை அவர் நமக்கு அறிமுகப்படுத்தும் விதம் மிக அற்புதமாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கிறது. பின்னணி இசையமைத்திருக்கும் தேவி ஸ்ரீபிராத் அவர்களும் நன்றாக உழைத்திருக்கிறார்.
கே.எஸ் ரவிகுமார் இந்த படத்தில் என்ன செய்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் கே.எஸ்.ரவிகுமார் இல்லை என்றால் படம் எப்படி இருந்திருக்குமோ என்ற பயம் வருகிறது. கமல் என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் அவர் போகும் பாதை சரியா தப்பா என்பதை சுட்டிக்காட்ட ஒருவர் தேவை. அந்த தேவையை கே.எஸ்.ரவிக்குமார் மிகச்சரியாக பூர்த்தி செய்திருக்கிறார்.
திரைக்கதை அமைத்ததில் ஒட்டைகள் இருந்தாலும் அதை எல்லாம் அந்த 10 கமல்களை காண்பித்து வாயடைத்துவிடுகிறார்கள். தனது முந்தைய படங்களின் தோல்வியும், சகா நண்பன் சூப்பர் ஸ்டார் சிவாஜியில் செய்த தவறுகளும் கமலுக்கு நல்ல படமாக இருந்திருக்க வேண்டும். மொத்தில் தசாவதாரம் ஆளவந்தான் போல் இல்லை. தைரியமாக திரைக்கு சென்று காண வேண்டிய படம். நம்மவர் எடுத்திருக்கும் படம். அதில் நம்மவரின் உழைப்பை நாம் கண்டிப்பாக பாராட்ட வேண்டிய படம்.
ஆமா அதுக்கு எதுக்கு தசாவதாரம் அல்வான்னு தலைப்பு வச்சிருக்கான்னு கேட்குறிங்களா...அல்வாவும் ஒரு இனிப்பு தானே....எப்படி நம்ம அல்வா.
Monday, April 28, 2008
பெளர்ணமி நினைவுகள்...
எப்பவும்போல வழக்கமான இடத்தில உட்காந்தே யோசிச்சேனுங்க. அப்படி இருந்தும் வழக்கமாக வர்ற ஐடியா கூட இந்த முறை வரமாட்டேங்குது. இது என்னடா இப்படி ஆகிப்போச்சேன்னு ஒரே யோசனையில இருக்கும்போதுதான் நம்ம மாப்பி "சென்ஷி" ஞாபகம் வந்துச்சு. சரி..அவனுக்கு ஒரு போனை போட்டு ஐடியா கேட்போம். அவன் இப்ப எல்லாம் நிறைய பதிவுகளில் விவாதம் பண்றான். தமிழ்மணத்தில் அரசியல் எல்லாம் அத்துபடியாச்சேன்னு நினைச்சி அவனுக்கு ஒரு போனை போட்டேன். (மக்களே இப்ப வழக்கமான சென்ஷியே இல்ல அவன்....ம்ம்ம் நம்புங்க)
நானும் போனை போட்டு வழக்கமாக கேட்குறமாதிரியே ஆரம்பிச்சேன்,
"என்ன மாப்பி எப்படி இருக்கே"
அவனும் வழக்கமாக கொடுக்குற அல்வாவையே கொடுத்தான்,"ஹாய்டா செல்லம் நீ எப்படி இருக்கே"
நான்: ம்ம்ம்....ஏதோ போகுதுப்பா.....
சென்ஷி; ஆமா ஏன்டா ரெண்டு நாளா போனே போடுல
நான்: ஆணி அதிகம் மச்சி அதான்.. சரி நான்தான் போடல நீயாவது மிஸ்டு கால் கொடுத்திருக்கலாமுல்ல
சென்ஷி: ம்...உன் ஆபிசுக்கு போனை போட்டு உனக்கு கனெக்ட் பண்ணுறதுக்குள்ள தாவு தீர்ந்து etisalat பில்லு கிழியுது.
நான்: சரி ஆபிசுக்குதான் வேண்டாம். என்னோட செல்லுக்காச்சும் ஒரு மிஸ்டு கால் கொடுத்திருக்கலாமுல்ல
சென்ஷி: மிஸ்டுகால் எதுக்குடா
நான்: ம்ம்ம்...நீ உயிரோடதான் இருக்கேன்னு தெரிஞ்சிக்க..
சென்ஷி: அடப்பாவி இதுல இப்படி எல்லாம் வேற இருக்கா!!
நான்: பதிவு போட ஏதாவது ஐடியா கொடேன். உனக்கு இந்த பின்நவீனத்துவம், முன்நவீனத்துவம், விவாதம், அரசியல் இதெல்லம் அத்துப்படியாச்சே....இப்போ தமிழ்மணத்துல எந்த பதிவுல மவுசு அதிகம் க்ளிக் ஆகுதுன்னு கொஞ்சம் சொல்லேன்.
சென்ஷி: மச்சி இதுக்கு எல்லாம் செலவு கொஞ்சம் அதிகம் ஆகும்.. பரவாயில்லையா!
நான்: செலவுதானே! அதுபாட்டுக்கு எவ்வளவு ஆனா என்ன?! நீ சொல்லு மச்சி.. உனக்கு நான் தனியா ஸ்பெசலா கவனிக்கிறேன்.
சென்ஷி: நீ வழக்கமா உள்குத்துவச்சி பேசற மாதிரியே பேசுற....சரி போன வருஷம் ஒரு பதிவுல எந்த பதிவுன்னு சரியாக ஞாபகம் இல்ல, ஆனா சூப்பர் பதிவு. அதுல வழக்கம்போல செந்தழல் ரவி தான் முதல் பின்னூட்டம். அடுத்த பின்னூட்டம் லக்கின்னு நினைக்கிறேன். நான் தான் மூணாவது பின்னூட்டம். இதுல மேட்டர் என்னன்னா.. செந்தழல் ரவிக்கு போட்ட பின்னூட்டத்துக்கு லக்கி ரீப்பிட்டே போட, நான் டக்குன்னு லக்கி போட்ட ரீப்பிட்டே பின்னூட்டத்துக்கு ரீப்பிட்டே இப்படிக்கு டில்லியில் இருந்து சென்ஷின்னு போட்டேன்....எப்படி மச்சி சூப்பர் இல்ல
நான்: டேய்....டேய்...ஆரம்பிச்சிட்டியா. நான் உன்னை என்ன கேட்டேன் நீ என்ன சொல்லிக்கிட்டு இருக்கே.....நானே ஒரு ஐடியாவும் கிடைக்க மாட்டேங்குதேன்னு உன்கிட்ட கேட்டா நீ என்னடான்னா உன் பின்னூட்ட சரித்திரத்தை சொல்லிக்கிட்டு இருக்கே...அதுவும் ரீப்பிட்டு. உன் கூட சேர்ந்ததுக்கு தமிழ்மணத்துல ரீப்பிட்டே கோபின்னு பேரு வாங்குனதுதான் மிச்சம்.... ஐடியா கொடுடான்னா....
சென்ஷி: சரி சரி கூல் மச்சி....இன்னிக்கு நேத்தா நாம இப்படி எல்லாம் ரீப்பிட்டே போடுறோம்.
"வெளங்கிடுவோம்டா"ன்னு சொல்லிட்டு போனை வச்சிட்டு நண்பன் ஒருவன் எடுத்திருந்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டுயிருந்தேன். ஒவ்வொரு புகைப்படங்களிலும் ஒவ்வொரு அழகு ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பழைவு நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொண்டுயிருந்தது. நினைவுகள் இல்லைன்னா தனிமை ரொம்ப கொடுமையாகிடும் போல. அதே நினைவுகள் அதிகமானாலும் தனிமை கொடுமையாகிடும்.
அவன் அனுப்பியிருந்த புகைப்படங்களில் முழுநிலா கொண்ட புகைப்படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. மின்சாரம் இல்லாத இரவுகளில் நிலாவின் ஒளி எங்கள் வாசல் முழுவதும் பரவியிருக்கும். வாசலில் விழும் ஒலியில் கைகளை எல்லாம் அகட்டி திரட்டி விதவிதமாக உருவங்கள் வரவழைத்து நிழலில் விளையாடிக் கொண்யிருப்போம். மிகப்பெரிய வாசல் கொண்ட அந்த வீட்டில் மொத்தம் ஆறு குடித்தனங்கள். எல்லோரும் அந்த வாசலில்தான் துணி துவைப்பது, மிளகாய் எல்லாம் காயவைப்பது... எங்களுக்கு நெட்டி ஆடுவது போன்றவை எல்லாம். என் சித்தப்பா எனக்கு ஏபிசிடி சொல்லி கொடுத்ததும் அந்த வாசலில் வைத்துத்தான்.. சும்மா இல்லைங்க... முட்டிப்போட்டு கண்களில் சுக்கு இழைத்துப்போட்டு சொல்லிக் கொடுத்தார். கடைசி வரை சுக்கு கரைந்தது தான் மிச்சம். எனக்கு தெரிஞ்சது எல்லாம்...
"ஏபிசிடி
உங்கப்பன் தாடி
வந்தா வாடி
வராட்டி போடி" தான். (முத்துக்கா வீட்டு பாடம் செய்துட்டேன்)
பல சுபகாரியங்களை பார்த்திருக்கிறது அந்த வாசல். சில இறுதி பயங்களும் அந்த வாசலில் வைத்து தான் தொடங்கியிருக்கிறது. அம்மாவுக்கு உதவி செய்கிறேன்னு என்று அம்மாவுக்கு இம்சை கொடுத்து ஓட ஓட அடிவாங்கியதும் அந்த வாசலில் வைத்து தான். ரத்த சொந்தங்களாக இல்லாமல் பழகியபழக்கத்தில் வந்த சொந்தங்களும் கிடைத்ததும் அந்த வாசலில்தான். வெறும் பக்கத்து வீட்டு ஆளுங்க தானே என்று இல்லாமல் அவங்க வீட்டில் ஒருவன்போல என்னையும் அன்பாக பார்த்த சொந்தங்கள். நான் பள்ளி முடிந்து வீடு வரும் எனக்கு வீட்டில் அம்மா இல்லை என்றால் எப்படியும் இவர்களின் ஒருவர் வீட்டில் இருந்தாவது எனக்கு தேவையான சிற்றுண்டிகள் வந்துவிடும்.
எனக்கும் சாப்பாட்டுக்கும் ரொம்ப தூரம் (எவ்வளவு கிலோமீட்டர்ன்னு எல்லாம் கேட்ககூடாது.. உத்தேசமா கையிலேந்து வாய் வரைக்கும்ன்னு வச்சுக்குங்க). ஆனா இந்த சிற்றுண்டிகள் எல்லாம் தின்னுக்கிட்டே இருப்பேன். சரியாக சாப்பிடாமல் அடம்பிடிக்கும் நேரத்தில் அம்மாவின் கடைசி ஆயுதமாக அம்மாவின் கையால் பால் சோறு கிடைக்கும். நன்றாக காய்ச்சிய பாலை அம்மா மெதுவாக ஊதி ஊதி அந்த ஏடுகளை எல்லாம் தள்ளித்தெளிந்த பாலை ஊற்றி தேவையான அளவுக்கு உப்பு போட்டு நன்றாக பிசைந்து எலுமிச்சை ஊறுகாய் தொட்டு ஊட்டுவாங்க. அந்த வாசல் முழுக்க ஓடி ஓடி ஒவ்வொரு வாயாக வாங்கி வழிச்சி தின்பேன். நிலாவுடன் சேர்த்து பால்சோறு கிடைக்கும் தருணங்கள் இனி எப்போது!?.
சில வருடங்களுக்கு முன்னால் பெளர்ணமிகளில் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றதுண்டு. இரவுகளில் பயணம் செய்வது எனக்கு பிடித்தமான ஒன்று. யாருக்குத்தான் பிடிக்காது!அந்த இருள் கலந்த அமைதியை ரசிப்பதில் யாருக்கு வெறுப்பு வந்துவிடும். அந்த இரவின் அமைதியிடம் முழுமனதையும் பறிகொடுத்து ஆழ்ந்து அந்த அமைதியை ரசிப்பது மனதுக்கு நிறைவாக இருக்கும். கிரிவலம் செல்லும் போதும் இரவு பயணங்கள் தான். அதுவும் அந்த இரவுகளில் மலையை சுற்றி நண்பர்களுடன் நடைப்பயணம் செய்வது ஒரு சுற்றுலா போல இருக்கும். வெளியில் இருந்து கொண்டே அண்ணாமலையாருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு நடக்க ஆரம்பித்தோம். சிறுவர்கள், பெரியவர்கள், பக்திமான்கள் என்று மக்கள் கூட்டம். உணர்ந்து பலபேர்.. உணராமல் விளையாட்டுக்கு சிலபேர் என்று அவரவர் கையில் ஆயிரம் ஆயிரம் சுமைகளுடன் அந்த அண்ணாமலையாரிடம் இறக்கி வைக்க நேரம் பார்த்து நடையில் வேகத்தை கூட்டியும் குறைத்தும் கொண்டு நடந்துக் கொண்டுயிருப்பார்கள்.
அண்ணாமலையாரை சுற்றி இருக்கும் மற்ற லிங்கங்களை பார்க்கும்போது மனதில் ஒரு சோகம் வந்து அமர்ந்துக்கொள்ளும். யாரும் சரியாக பராமரிக்காமல் விட்டுவிட்டது போல களையிழந்து இருக்கும். சிவன் கோவில்கள் எல்லாம் இப்படி கலை இல்லாமல் வர்ணங்கள் இல்லாமல் ஒருவித பாழடைந்தது போல இருக்கிறது என்று தோன்றும். பயணம் தொடங்கும்போது பழைய நினைவுகளுடன் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கிண்டல் செய்துக்கொண்டே வருவோம். சிறிது நேரம் கடந்தவுடன் அந்த பேச்சு அப்படியே எதிர்காலத்தில் எப்படி எல்லாம் வர வேண்டும். யார் யார் எல்லாம் எந்த நிலையில் இருப்போம் என்று கற்பனைகளுடன் பேசி கொள்வோம். கடைசியில் "அடப்போடா! அடுத்த நிமிஷம் என்ன நடக்க போகுதோ.. இதுல அடுத்த வருஷத்துக்கு போயிட்ட...எதுவாக இருந்தாலும் அனுபவிக்கலாம் மச்சி" என்று எதிர்கால பேச்சுக்கு விடை கொடுத்துவிட்டு எந்தவித பேச்சும் இல்லாமல் கடைசிப்பயணம் செல்லும். கடைசி தூரப்பயணத்தில் எங்களை அறியாமல் இடைவெளி வந்துவிடும். அது பேச்சின் கலைப்பா அல்லது ஒவ்வொருவர் மனதுக்குள்ளும் தேவைப்படும் தனிமையா.. அறியாமலே இடைவெளியுடன் பயணம் தொடரும். ஒரு குழந்தைப்போல தனக்குள்ளேதான் கண்ணுக்கு மட்டும் தெரியும் அந்த கற்பனை பிம்பத்துடன் விளையாடுவது போல எங்களுக்குள் இருக்கும் எங்களை சிதைக்காத கற்பனையுடன் மனதுக்குள் பேசிக் கொண்டே கடந்து போகும் கடைதூரம். இதனால் ஒவ்வொருவரும் மனதால் ஒன்றாக சேர்வதற்க்கு சில நிமிடங்கள் பிடிக்கும்.
இங்கே வந்தப்பின்னும் பல பெளர்ணமிகள் பார்த்திருக்கிறேன். கூட்டுக்குள் அடைப்பட்ட ஒரு கிளியை போல, வேலியாக பின்னப்பட்ட இரும்பு கம்பிகளுக்கு உள்ளிருந்து. பள்ளிக்கு செல்ல பயப்பட்ட வயதில் அம்மாவின் விரல்பிடித்து செல்வேன். பள்ளியின் வாசலில் எங்கள் இருவரின் விரல்களும் பிரிவை உணர்ந்ததும் அழுகையை முட்டிக் கொண்டு வரும். ஏனோ தெரியவில்லை இப்போது அந்த ஞாபகங்கள் வருகிறது.
Tuesday, March 11, 2008
செல்வியின் டைரி
நான் எப்போவாவது மனநிறைவு அடைஞ்சிருக்கேனான்னு யோசிக்கும்போது சட்டுன்னு எதுவும் ஞாபகத்துல வரமாட்டேங்குது. அப்போ இதுவரைக்கும் மனநிறைவே அடைஞ்சது இல்லையா!? இல்ல எது மனநிறைவுன்னு சரியா எனக்கு தெரியலியா!? முதல்ல எதுஎதெல்லாம் மனநிறைவுன்னு முடிவு பண்ணனும். அப்பதான் அது எனக்கு கிடைச்சதா, இன்னும் இல்லையான்னு தெரியும். யோசிச்சு பார்த்தா இதுதான் மனநிறைவுன்னு எந்த வரைமுறையும் இல்லன்னு தோணுது. நேத்து ராத்திரி அப்பா கூட பேசினபோது இதுவரைக்கும் நான் அனுபவிக்காத ஒருவித மன அமைதி வந்துச்சே! அதுகூட மனநிறைவுன்னு சொல்லலாம்.
இவ்வளவு நாள் அவருக்கு தேவையானது எல்லாம் செய்துக்கிட்டு இருக்கேன். அப்பா சந்தோஷமாக இருக்கணும்னுதானே நினைச்சேன். ஆனா அவரோட மனசுல இருக்குற வலியை இறக்கிவைக்க மறந்துட்டேன்னு நேத்து தான் எனக்கு புரிஞ்சது.
சிரிக்கும் போது நம்ம மனசுக்குள்ள எப்படி ஒரு பரவசம் ஒரு நிம்மதி வருதே! அதே போல அழுகையிலும் வரும். அதுவும் நமக்கு ஆதரவாக உள்ளவங்க கூட இருந்து அணைச்சாங்கன்னா; வரும் பாருங்க கண்ணீர் அப்படி வரும். சமீபத்துல கூட ஒரு படத்துல பார்த்தேன்;
little miss sunshine...ன்னு. வலையுலகத்துல கப்பி பய கூட இதை பத்தி விமர்சனம் எழுதியிருப்பாரு. அந்த படத்துல ஒரு தாய் தன்னோட மாமனார் இறந்த துக்கத்துல இருப்பா. அப்போ அந்த தாயோட மகன் அவனோட குட்டி தங்கச்சிக்கிட்ட ஒரு பேப்பரில் எழுதிக்காட்டுவான். போயி அம்மாவை அணைச்சிக்கன்னு. அந்த குட்டிப்பொண்ணு ஆதரவா அணைச்சவுடனே அந்த தாய் துக்கம் தாங்காம ஓன்னு அழுவா. அதே அந்த அதரவான அரவணைப்பு ஒரு சமயத்துல அவ அண்ணனுக்கும் தேவைப்படும். அப்போ அந்த குட்டிப்பொண்ணு தானே புரிஞ்சிக்கிட்டு அண்ணனை ஆதரவா அரவணைப்பா. அவனும் அந்த மன வலியை எல்லாம் கண்ணீரில் இறக்கி வச்சிட்டு அவ தோள் மேல கையைப் போட்டுக்கிட்டுப் போவான். அந்த காட்சிகள் மேலும் உணர்த்தியது அரவணைப்பின் தாக்கத்தை.
நேத்து அப்பாவுக்கும் இந்த மாதிரி ஒரு அரவணைப்பு தேவைப்படுச்சி. அதை நான் உணர்ந்து செய்தேன். அப்போ எனக்கு கிடைச்ச மன நிம்மதியை எப்படி சொல்றதுன்னு தெரியல. உங்களுக்கு என் அப்பா பேரு தெரியாது இல்ல. அப்பா பேரு சொக்கலிங்கம். 66 வயசு. அவருகூட இந்த மாதிரி நான் பேசியதில்லை. நேத்தைக்கு வரைக்கும். அவரோட வாழ்க்கையில மூணு பொண்ணுங்க வந்திருக்காங்க. நேத்து பேசிக்கிட்டு இருக்கும்போது அப்பா அவரோட பழைய கதை எல்லாம் சொன்னாரு.
ச்ச கதையா அது! அவரோட வாழ்க்கை. என்ன ஒரு அழகான வாழ்க்கை வாழ்ந்திருக்காரு. அதில் சந்தோஷம், துக்கம், ஏமாற்றம் எல்லாம் இருக்கு. அவரு கை எல்லாம் ஆட்டி ஆட்டி முகத்தை எல்லாம் மாத்தி மாத்தி சொன்ன அழகு இருக்கே...எனக்கே நம்ம அப்பாவா இதுன்னு தோணுச்சி. இதுவரைக்கும் இப்படி நான் அப்பா கூட பேசியது இல்லை.
நேத்து ராத்திரி வழக்கம்போல அப்பாவுக்கு மருந்து கொடுக்க அவரோட ரூமுக்கு போனேன்.
"அப்பா! சும்மா படிச்சது போதும்.. இந்த மாத்திரையை சாப்பிட்டு தூங்குங்க."
உடலில் உள்ள மொத்த வலிமையையும் கைகளில் வாங்கி நிமிர்ந்து உட்காந்தார் அப்பா. பார்க்குறதுக்கே பாவமாக இருந்துச்சு. மாத்திரை வாங்கி உற்று பார்த்து "ஏழுமலை ஏழுகடல் தாண்டி ஒரு கிளி வயித்துல உயிர் இருக்குன்னு பாட்டி கதை சொல்லும் போது எல்லாம் நம்பல. ஆனா இந்த மாத்திரைகளை பார்க்கும்போது எல்லாம் அதெல்லாம் நிஜம்ன்னு தோணுதும்மா. இந்த மாத்திரைகள் இல்லன்னா நான் எப்போவோ போய் சேர்ந்திருப்பேன் இல்ல. உனக்கும் பாரமாக இருந்திருக்க மாட்டேன்"
"ஆரம்பிச்சிட்டிங்களா! இதுல எனக்கு என்னப்பா பாரம் வந்துடப்போகுது"
"ம்... சரி பசங்க எல்லாம் தூங்கிட்டாங்களா?"
"ம்... ரெண்டும் பென்சிலுக்கு சண்டை போட்டு ரெண்டு உதை வாங்கி இப்பத்தான் தூங்கிச்சுங்க". கட்டிலில் அப்பாவின் அருகில் உட்கார்ந்து அவர் கைகளை பற்றி கொண்டேன்.
"ஏம்மா குழந்தைகளை அடிக்கிற..! சின்னகுழந்தைங்கதானே.."
"எரிச்சல்படுத்திட்டாங்கப்பா...அதான் ரெண்டு போட்டேன். நானும் சின்னக்குழந்தையா இருக்கும்போது இப்படித்தான் அக்காங்களோட சண்டை போடுவேனாப்பா.."
"சண்டை போடுவியாவா!!?...யப்பா.. அந்த மூணு பேருல நீதான் தாதா..உன் சவுண்டுக்கு அவுங்க ரெண்டு பேரும் பயந்தே உன்னை எதுவும் செய்ய மாட்டாங்க... ஆனா நீ எதையும் பெருசா கேட்டு அடம்பிடிக்க மாட்டே.. எது கிடைக்குதோ அதையே ரசிச்சு ஏத்துக்குவ.."
"ம்...! பார்த்திங்களா.. உங்களுக்கு செலவு வைக்காம இருந்திருக்கேன்"ன்னு என் பெருந்தன்மையை சந்தடிய சாக்கில வாசிச்சிட்டேன். சரி தூங்குங்கன்னு கைகளை பறித்துக்கொண்டு புறப்பட தயாரானேன். அந்த கைகளின் பிரிவை உணர்ந்துருப்பாருன்னு நினைக்கிறேன்.
"ம்மா செல்வி"ன்னு ஒருவித தவிப்போடு என்னை கூப்பிட்டார்.
"என்னப்பா..தண்ணி வேணுமா?"
"எப்படிம்மா இருக்க?"
இந்த வார்த்தையை கேட்டவுடன் சட்டுன்னு நின்னுட்டேன். என்ன சொல்லறதுன்னு தெரியல. அதிர்ச்சியும் குழப்பமுமாக இருந்துச்சு எனக்கு. "எனக்கு என்னப்பா நல்லா தானே இருக்கேன்"னு சொல்லிட்டு மீண்டும் ஆதரவாக கைகளை பற்றினேன்.
"என்னப்பா திடீர்ன்னு கேக்குறிங்க"
"ஒண்ணும் இல்லம்மா. கேட்கணுமுன்னு தோணுச்சி. கேட்டேன்... காலையில எழுந்தேன்னா சமையல், புருஷன், குழந்தைகள், உன் வேலைன்னு ஓடிக்கிட்டே இருக்க.. நீ எப்படியிருக்கன்னுகூட கேட்க முடியறதுல்ல...அதான்.."
மனதுக்குள் ஏதே உணர்ந்தவளாய் "நீங்க எப்படிப்பா இருக்கிங்க..?"
அந்த வார்த்தைகளுக்காக காத்துக்கொண்டிருந்தவர்போல தவிப்பும் மகிழ்ச்சியுடன் மீண்டும் மொத்த வலியை திரட்டி நிமிர்ந்து உட்காந்து "ம்... எனக்கு என்னம்மா குறை, நல்லாயிருக்கேன்ம்மா...இனி சாவு ஒண்ணுதான் பாக்கி.."
...........
"அட சும்மா சொன்னேம்மா... நெருப்புன்னு சொன்ன வாய் சுட்டுடவா போகுது... அப்பா அதுக்குள்ள எல்லாம் போகமாட்டேன். உன் புள்ளைங்க கல்யாணத்தை எல்லாம் பார்த்துட்டுதான் போவேன்.."
அப்பாவின் தலைமுடியை கோதிவிட்டபடியே என் செல்ல அப்பா என்று புன்னகைத்தேன்.
"எங்கம்மா கூட இப்படிதான் செய்யும்..."
"எப்படி இப்படியா" என்று மறுபடியும் தலைமுடியை கோதிவிட்டு சாய்ந்து பார்த்தேன்.
"ஆமா... எனக்கு மனசு கஷ்டமாக இருக்கும்போதெல்லாம் அதை உணர்ந்து ஆறுதலாக பேசி இப்படித்தான் செய்யும் எங்கம்மா.. அது எப்படிதான் அதுக்கு தெரியுமோ! என் முகத்தை வச்சே கண்டுபிடிச்சிடும். ஏண்டா ஒரு மாதிரி இருக்கேன்னு டக்குன்னு கேட்டுடும்... அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லையேன்னு பொய் சொல்லிட்டு எப்படி கண்டுபிடிச்சாங்கன்னு ஆச்சரியப்பட்டிருக்கேன்.. ஒரு நாள் கேட்கவே கேட்டுட்டேன்"
"என்னன்னு..."
"எப்படிம்மா உனக்கு மட்டும் தெரியுதுன்னு"
"பாட்டி அதுக்கு என்ன சொன்னாங்க" ஆர்வத்தை அடக்கமுடியாமல் கேட்டேன். என் ஆர்வத்தை புரிந்துக்கொண்டு 'நான் உன்னை பெத்தவடான்னு' அழுத்தமான ஒரு சிரிப்பை கொடுத்துட்டு போயிட்டாங்க. இன்னும் அந்த சிரிப்புக்கு அர்த்தம் தெரியாமல் இருக்கேன்.."
"ம்...."
"அதுக்கு அப்புறம் என் தலைமுடியை இப்படி கோதியது ராசாத்திதான்.."
"அட ராசாத்தியா! இவுங்க யாரு எனக்கு தெரியாம?"
"ராசாத்தி... இவ எதுக்கு என் வாழ்க்கையில் வந்தா.. எதுக்கு போனா.. எங்க ரெண்டு பேருக்குள்ள அப்படி என்ன இருந்துச்சுன்னு ஒண்ணும் பிடிபடல... இன்னும் கூட என் மனசுக்குள்ள இருக்கா.."
"உங்க காதலியாப்பா அவுங்க!?" அப்போது தான் அப்பாவுக்குதான் தன்னோட பொண்ணுக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கோம்ன்னு நினைச்சாரா என்னன்னு தெரியல. மவுனமாக இருந்துட்டாரு. மனசில் இருப்பதை கொட்டிவிட வேண்டும் என்று நினைக்கும் போது அருகில் இருந்து அதை கேட்க ஆதரவாக ஒரு மனிதன் கிடைத்தால் அது யாராக இருந்தால் என்ன?!
"என்னப்பா...! என்கிட்ட சொல்லக்கூடாதுன்னா வேண்டாம்..."
"ச்சே... இதுல என்னம்மா இருக்கு... அவ பேரு ராசாத்தி. அந்த பேர சொல்லும்போதே முகத்துல ஒரு சிரிப்பு வரும். இந்த வாலிப வயசுல நாம பேசுறதை எல்லாம் கேட்டுக்கிட்டு கன்னத்துல கைவச்சு 'ம்' கொட்டி ரசிக்க ஒருத்தி கிடைச்சான்னா அதைவிட சொர்க்கம் வேற எதுவும் இல்ல. அப்படி ஒரு சொர்க்கத்துல என்னை வச்சு ரசிச்சவ ராசாத்தி. என்னையும் அவளையும் வச்சு பல கிசுகிசுக்கள் வந்துச்சி"
"என்ன கிசுகிசுப்பா!!!"...அப்பாவின் ராசாத்தியோடு ஐக்கியமானோன்.
"வேற என்ன காதல்னுதான்.... நான் கூட ஒரு கட்டத்துல அதெல்லாம் உண்மையாக கூடாதுன்னா நினைச்சிருக்கேன்."
"ஆஹா.... அப்பா உங்கள் காதல் கதை கேட்டால் தப்பா... பொல்லாத அப்பா" ன்னு சின்னக்குழந்தை மாதிரி ராகம் போட்டு பாட்டு பாட ஆரம்பிச்சுட்டேன்.
என்னோட குழந்தைதனத்தை பார்த்து வாய்விட்டு சிரித்துவிட்டு தொடர்ந்தார் "அவளும் காதலிச்சா. ஆனா என்னை இல்ல பாலுன்னு இன்னொருத்தனை. ஆனா என்கிட்ட அவளுக்கு இருந்த அன்பு மட்டும் மாறவேயில்ல. அவுங்க காதலில் பிரச்சனை வந்துச்சு. பாலுவால் அவனோட வீட்டுல சம்மதம் வாங்க முடியல. அதை அவகிட்ட எப்படி எல்லாமோ சொல்லிப்பார்த்தான். அவளும் சரி சரின்னு சொல்லிட்டு திடீர்ன்னு ஒருநா என் கண்ணு முன்னாடி தன்னைத்தானே எரிச்சுக்கிட்டா.."
அதிர்ச்சியில் நான் அப்பாவின் கையை மேலும் இறுக பற்றிக்கொண்டேன்.
"ச்ச..! பாவம்ப்பா...!! அப்புறம் என்னப்பா ஆச்சு..?"
"ராசாத்தியின் மரணத்தை மறக்கடித்தவ தாமரை."
"ஐய்ய்ய்யா...அம்மா என்டிரியா..."
ஒருவித வெட்கப்புன்னகையுடன் "ம்ம்ம்ன்னு" சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தார். தாமரை எங்க அம்மாவோட சாய்ஸ். எளிமையான முறையில் நடந்துச்சு எங்க கல்யாணம். வாழ்க்கை இன்னும் இருக்குன்னு எனக்கு உணர்த்தியவள். வாழ்க்கை துணைன்னு சொல்லறதை விட என் வாழ்க்கையே அவள்தான்ன்னு சொல்லணும்.
என்னைவிட அதிகம் பேசிக்கிட்டே இருப்பா. எப்போதும் ஒரு படபடப்பும், குழந்தைத்தனமும் இருக்கும் அவகிட்ட"
அப்பா, அம்மாவை எந்த அளவுக்கு நேசித்திருக்காரு.. மனதில் பெருமைப்பட்டு கொண்டேன்.
"சுகத்தை மட்டும் பங்கு போட்டுக்கொள்ளாமல் என் கனவுகளையும் தன் கனவுகளாக நினைச்சு என் தோளோடு தோள் நின்னா தாமரை. நான் குழப்பமாக முடிவுகள் சரிவர எடுக்கத் தடுமாறும்போது 'எந்த முடிவுக்கும் நான் கூட இருப்பேன்ங்க. கவலைப்படாமல் செய்யுங்க'ன்னு தைரியத்தை கொடுப்பா. அப்படித்தான் ஒருநா காலையில உங்க பாட்டி முன்னாடி நின்னு காலுல விழுங்கன்னு சொல்லி ரெண்டு பேரும் ஆசிர்வாதம் வாங்கினோம். என்னடீன்னு கேட்டதுக்கு பாட்டி பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டு வெட்கத்தோட வாய்க்குள்ளவே ஏதோ சொல்றா.. எனக்கு காதுல விழல. இதுல உங்க பாட்டி வேற இன்னும் நீ சரியான மக்குடா. இன்னும் சின்ன புள்ளையாவே இருன்னு சொல்லி சிரிக்கிறாங்க. எனக்கா டென்சன்.. சொல்லித்தொலைங்களேன்னு கத்திட்டேன். ம்ம்ம்... சின்னப்புள்ளைக்கு புள்ளை பிறக்கப்போகுதுன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. எனக்கு அப்படியே சந்தோஷத்தில் வாயடைச்சுப்போயி நிக்குறேன். அப்போ உங்க அம்மாவை பார்க்கணுமே. கன்னம் எல்லாம் சிவந்து, அட.. அட..! இன்னும் கண்ணுக்குள்ள இருக்கு அந்த முகம்."
"அப்போ அக்கா பிறக்கும் போது சந்தோஷப்பட்டிங்க நான், சின்ன அக்கா பிறக்கும் போது எல்லாம் வருத்தப்பட்டீங்களாப்பா" என்று உள்குத்துக்குள் ஒளித்துவைத்து கேள்வியை கேட்டுட்டேன்.
சட்டுன்னு அப்பாவின் முகம் வாடிப்போச்சு...
"சாரிப்பா சும்மா தான் கேட்டேன்... ஏதோ ஒரு வேகத்துல கேட்டுட்டேன். சாரிப்பா.."
"ச்சே! இதுக்கு எதுக்கும்மா சாரி... எனக்கு எந்த வருத்தமும் இல்லை... எந்த குழந்தையானாலும் சரி. அது என் குழந்தை. என்னோட ரத்தம்ன்னு முடிவுபண்ணியிருந்தேன். அதான் கடைசியாக நீ வந்து இருந்த கொஞ்ச குறையையும் தீர்த்துவச்சுட்டியே.... உண்மையில் உன்னை நினைச்சா பெருமையா இருக்கும்மா. என்னையும், அம்மாவையும் தனியா விடாம உன்னோடவே வச்சுக்கிட்டு ஆதரவா பார்த்துக்கிட்டுயிருக்க பாரு. இதுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய போறேன். எனக்கு தோண்றது எல்லாம் உனக்கு மேலும் எரிச்சல்கள் தராம போய் சேர்ந்துட்டா போதும்."
என் கண் எல்லாம் கண்ணீர். அப்பாவை அப்படியே இறுக்க அணைச்சிக்கிட்டேன்.
அந்த அணைப்பில் ஒருவிதமான ஆதரவு கிடைத்தவுடன் வெகுநாளாய் மனதில் அடைத்திருந்த ஏதே ஒன்று உடைந்து ஓவென அழத்தொடங்கிட்டார் அப்பா. "எதுக்குப்பா அழுவுறீங்க. என்ன ஆச்சுப்பா"ன்னு கேட்டா பதிலே இல்ல. தெரியலன்னு திரும்பவும் ஓன்னு அழுவுறாரு. ரொம்ப நாளைக்குப்புறம் கண்ணீரின் சுவையை சுவைத்திருப்பார் அப்பா.
அந்த கண்ணீரை எல்லாம் கடந்து என் மனசுக்குள் ஒருவித அமைதி ஏற்பட்டுச்சு.. அப்பாவுக்கு ஏதோ ஒருவகையில உதவி செய்ய திருப்தி... மனசு முழுக்க அமைதி ஏற்பட்டுச்சி..இதுக்குப்பேர் தான் மனநிறைவோ!?
Monday, February 11, 2008
ராசாத்தி...
நீண்ட பயணம் முடியப்போகும் நேரம் வெகு அருகில் வந்துவிட்டது. அடுத்து நிகழப்போகும் அந்த அற்புதத்தை நான் எப்படி சொல்வது... நான் என் ராசாத்திகிட்ட போகப்போறேன்... அவகிட்ட போயி அந்த அழுத்தமான ஈரமான முத்தத்தை வாங்கப்போறேன். இந்த ஜெயில் கம்பிகளுக்கு பின்னாடி நான் இருந்த ஒன்றறை வருஷ வாழ்க்கை முடியப்போகுது.
அதோ அந்த வெட்டவெளியில் அமைதியாக தெரியுது பாருங்க நிலா வெளிச்சம், அதுபோல அழகாக இருந்திச்சு என் வாழ்க்கை. நான் என்னோட மனைவி, என் ராசாத்தின்னு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தேன். கொஞ்சம் சந்தோஷமாக இருந்தால் பொறுக்காது போல இந்த கடவுளுக்கெல்லாம். வயித்தெறிச்சல் புடிச்ச சாமிங்க. ரெண்டு வருடத்திற்க்கு முன்னாடி ஒரு வெள்ளிக்கிழமை எல்லாம் இருளாக முடிஞ்சு போச்சு.
நான் இந்த சாமிங்ககிட்ட வேண்டிக்கிட்டது எல்லாம் என் ராசாத்தி நல்லாயிருக்கணும். எப்போதும் மகிழ்ச்சியா இருக்கணும், அவளுக்கு எந்த குறையும் வந்துடக்கூடாதுன்னு தான். அதனாலதான் என்னவோ எந்த குறையும் இல்லாம நானே பார்த்துக்கிறேன்னு அந்த சாமியே என் ராசாத்தியை என்கிட்ட இருந்து வாங்கிட்டார்.
இதே வானத்தில் இருந்து வர்ற முதல் மழைத்துளி என் செல்லுக்கு முன்னாடிதான் வந்து விழுது. மழைன்னா ராசாத்திக்கு ரொம்பப்பிடிக்கும். அந்த மழைத்துளிகளை கையில் ஏந்திக்கிட்டு என் முகத்தில அடிச்சி அடிச்சி அவ சிரிப்பா பாருங்க.. இன்னைக்கு முழுக்க பார்த்துக்கிட்டு இருக்கலாம். அவளோட ஒவ்வொரு அசைவையும் என் மனசுக்குள்ள பதிவு பண்ணி வச்சிருக்கேன்.
எதைப்பார்த்தாலும் அவள் ஞாபகம்தான்... எப்போதும் அவளோட நான் இருந்த அந்த மகிழ்ச்சியான நினைவுகள்தான் வருது. அதான் ஒரேயடியா அவகிட்டயே போயிடலாமுன்னு எப்பவோ முடிவு பண்ணிட்டேன். இந்த சட்டம், நீதிமன்றம் எல்லாம் எனக்கு தூக்குதண்டனை கொடுத்தப்ப கூட 'அட போங்கடா! நான் எப்பவோ இந்த முடிவை எடுத்துட்டேன். இதை ஊர் கூடி சொல்லறதுக்கு இத்தனை காலமா'ன்னு தோணுச்சு.
ஒரு மழைநாள்லதான் பிறந்தா என் ராசாத்தி... விடியற்காலை 1.30 மணி இருக்கும். என் மனைவி பிரசவ வலியில துடிக்கிறதை பார்க்க தைரியம் இல்லாமல் அங்கும் இங்கும் அலைஞ்சிக்கிட்டு இருந்தேன். ஒரு மெல்லிய பனித்துளியை வெள்ளை துண்டுல சுத்தி என்னோட அம்மா என்கிட்ட கொடுத்தாங்க. சந்தோஷத்தோட உச்சத்திற்க்கு போகும்போது வார்த்தைகள் செத்துப்போயிடுதுன்னு சொல்லுவாங்க. என் ராசாத்தியை என் கையில் வாங்குறப்ப நான் அப்படிதான் இருந்தேன். அவளை முதன்முதலில் என் கையில் கொடுத்தப்போ எனக்கு ஏற்பட்ட உணர்ச்சிகளை இப்ப நினைச்சாலும் உடம்பு எல்லாம் சிலிர்க்குது.
"டேய் உன்னை மாதிரியே இருக்காடா" ன்னு அம்மா சொல்லும்போது ஒரு கர்வம் கலந்த புன்னகை வந்துச்சு பாருங்க.. அட.. அட... அதுதாங்க சொர்க்கம் .
உடம்பு எல்லாம் செக்கச்செவேலுன்னு இருக்கு. கண்ணை மூடிக்கிட்டு என் ராசாத்தி என்கிட்ட ஏதோ சொல்றா... உனக்கு அப்பான்னு ஒரு பதவி கொடுத்திருக்கேன்னு சொல்றா மாதிரி இருக்கு. ச்சீசீ...! குழந்தை எல்லாம் அப்படி சொல்லுமா..
ஆனா அதுதானே உண்மை.. என்னை அப்பான்னு கூப்பிட ஒரு குரல். நடக்குறதுல, பேசுறதுல , கோவத்துல எல்லாம் உன்னைப்போல இருக்குடான்னு ஊரே சொல்றதுக்கு ஒருத்தி வந்துட்டா. என் மூச்சுகாத்து அவள் மேல பட்டதுமே அவ கண்திறந்த அழகிருக்கே.. அதற்கு எத உதாரணமா சொல்றதுன்னு தெரியல.. அப்படி ஒரு அழகு. அப்படியே மெல்லமெல்ல நாலாபக்கமும் கண்ண சுத்திட்டு எங்க என் அப்பான்னு ஆசையா அவ பார்க்குறா.!
என் கண்ணுக்கு அவ மங்கலா தெரியுறா.. என்னன்னு தெரியல. என் கண் முழுக்க கண்ணீர் நிறைஞ்சிருக்கு. ஆம்பளப்புள்ளை அழக்கூடாதுன்னு சொன்ன அம்மா கூட வாய் மூடி கண்கலங்கி நிக்குறா. ஏண்டா அழுவுறன்னு அவளால கேட்க முடியல பார்த்திங்களா! அழு.. நல்லா அழு... இந்த மாதிரி அழுகை கிடைக்குறதுக்கு எத்தன தடவ கோயில் கோயிலா ஏறி இறங்கியிருப்ப.
மழலை குரலில் அவ 'ம்மான்னும் 'த்தைன்னும் சொல்லும் போது எப்படா அப்பான்னு சொல்வான்னு தவங்கிடந்திருக்கேன். வேலை முடிச்சுட்டு ராத்திரி எவ்வளவு நேரம் ஆனாலும் என் குரல் கேட்டவுடனே ஓடி வந்து அப்பான்னு கூப்பிட்டுக்கிட்டே கழுத்தோட கட்டி பிடிச்சிப்பா. நடுராத்திரி தூங்காம இருந்தவளை தூங்க வைக்குறதுக்கு தோள் மேல போட்டு உலாத்திக்கிட்டு இருந்தேன்னா பதிலுக்கு என் முதுகுலயும் தட்டி என்னை தூங்க வைப்பா என் ராசாத்தி. அந்த பால்வாசமும், பொக்கை வாய் சிரிப்புக்காவும் என்ன வேணுமுன்னாலும் செய்யலாம். எனக்கும் அவளுக்கும் ஒரு புரிதல் இருந்திச்சு. யாரு எது கொடுத்தாலும் ஒரு அனுமதி பார்வை என்கிட்ட வந்துட்டு போகும். உனக்கு அம்மா புடிக்குமா இல்ல அப்பா புடிக்குமான்னு கேட்டா டக்குன்னு அப்பான்னு சொல்லுவா. பொண்ணுக்கு ஆணைதானே பிடிக்கும்ன்னு கூட சொல்லாம். இருந்தாலும் எனக்கு அது புதுசாக இருந்துச்சு. "பொம்பளப்புள்ளை மேல இவ்வளவு பாசம் வைக்காதேடா. இன்னொரு இடத்துக்கு போற பொண்ணு அப்புறம் ரொம்ப கஷ்டமாகிடும்ன்னு"அம்மா சொல்லுவாங்க. ஆனா அதெல்லாம் எனக்கு தெரியல.
வாழ்க்கையில தோத்துப்போறதுலயும் ஒரு சந்தோஷம் இருக்குன்னா அது குழந்தைங்ககிட்ட தோத்து போறதுலதான். நான் என் ராசாத்திக்கிட்ட நிறைய தோத்துருக்கேன். கண்ணாமூச்சு ஆடும்போது என்ன கண்டுபிடிச்சிட்டு அப்பா நீ அவுட்டு...நான்தான் ஜெயிச்சேன்னு அவ சந்தோஷத்தில் கைக்கொட்டி சிரிக்கும்போது அந்த தோல்வியிலும் பலஆயிரம் சந்தோஷம் கொடுத்தவ என் ராசாத்தி.
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அவளோட 6வது பிறந்தநாள் அன்னைக்கு....
"எழுந்திருச்சிட்டாளா?"
"இல்லை இன்னும் தூங்கிட்டுதான் இருக்கா... இன்னிக்கு லீவுதானே.. அதான் தூங்கட்டும்ன்னு விட்டுட்டேன்"
"தூங்கட்டும்...... ராத்திரி ஏதாவது கேட்டாளா?"
"ம். கேட்டுச்சு.. அப்பா எனக்கு என்ன வாங்கி வருவாருன்னு..."
"நீ என்ன சொன்ன!"
"காலையில பாருன்னு சொல்லிட்டேன் .....உம்முன்னு முகத்தை வச்சிக்கிட்டு தூங்கிட்டா"
"லூசு! சொல்லியிருக்க வேண்டியாது தானே..."
"அதுக்கு என்ன அவசரம்.. காலையில தான் தெரிஞ்சிக்கட்டுமே"
"போடி...! குழந்தை பாவம்..! ஏக்கத்துலயே தூங்கியிருக்கும்" சொல்லிட்டு அவளுக்கு பிடிச்ச சாக்லேட், புதுத்துணி எல்லாம் எடுத்துக்கிட்டு அவ காதுகிட்ட இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்லம்ன்னு சொன்னவுடன் அப்பான்னு கட்டிப் பிடிச்சிக்கிட்டு எனக்கு என்ன வாங்கி வந்திருக்கிங்கன்னு கேட்டா... நானும் அவளோட கண்ணை பொத்தி வெளியில் கூட்டிவந்து அவ ஆசை ஆசையாக கேட்ட சைக்கிளை காட்டினேன்.
முகம் முழுக்க ஆச்சரியத்தில் அப்படியே துள்ளி குதிச்சு ஏய்ய்ய்ன்னு கத்தி என்னை கட்டிப்பிடிச்சி முத்தம் கொடுத்தா. அதுதான் நான் அவக்கிட்ட இருந்து வாங்கின கடைசி முத்தம்.
நான் இதை ஓட்டப்போறேன்னு வெளியில் எடுத்துக்கிட்டு போனா... இரும்மா கோவிலுக்கு போயிட்டு வந்து ஓட்டலாமுன்னு சொன்னேன். இல்ல இப்பவே போகணுமுன்னு போனா. போனவ போனவதான்... திரும்பி வரவேயில்ல. எங்க தேடியும் கிடைக்கல. மறுநாள் காலையில என் வீட்டு பின்னாடி ஒரு கோணிப்பையில உடம்பு முழுக்க ரத்தத்தோட சிதைஞ்சு போயிருந்தா என் ராசாத்தி.
ஊரே வந்துருந்துச்சு என் ராசாத்தியை பார்க்க. யார்யாரோ என்னன்னமோ சொன்னாங்க. அந்த வாரத்துல எல்லா பேப்பரிலும், டிவி செய்தியிலும் என் ராசாத்தி பத்தித்தான் பேச்சு.
சைக்கோவின் காம வெறி செயலுக்கு குழந்தை பலின்னு போட்டாங்க. அந்த சைக்கோவை பிடிச்சாங்க. அவனும் ரொம்ப ஈசியாக வெளியில் வந்துட்டான்.
என் கண்ணு முன்னாடியே அவன் சுத்திக்கிட்டு இருந்தான். என்னால முடியல. அணு அணுவாக நான் ரசித்த ராசாத்தியை இப்படி ரத்தத்தில் மிதக்க விட்டுட்டு அவன் இப்படி சுத்திக்கிட்டு இருக்குறதை பார்க்க முடியல. அவன் ரத்தத்தில் மிதக்க விட்டதில் என்னோட ராசாத்தியும் ஒண்ணுன்னு அப்புறம் தான் தெரிஞ்சது. அவனுக்கு இன்னொரு வெறி பிடிக்கிறதுக்குள்ள அந்த நாயை நானே கொல்லணுமுன்னு முடிவு பண்ணினேன். அவனைத்தேடி போயி பிடிச்சேன். "ஏண்டா நாயே! உனக்கு காமத்த இறக்க என்னோட ராசாத்திதான் கிடைச்சாலான்னு அவனை கண்டந்துண்டமா என் ராசாத்தியை ரத்தத்தில மிதக்க விட்டா மாதிரி மிதக்க விட்டேன். என் மனசு நிறைஞ்சுருந்தது. என் ராசாத்தி அப்பா நீ ஜெயிச்சிட்டன்னு சொல்றாமாதிரி இருந்துச்சு.
இதோ.. இன்னிக்கு எனக்கு தூக்கு.! என் ராசாத்திகிட்ட முத்தம் வாங்கப்போற பொன்னான நாள். அதே ஜெயிலர் வர்றார். கூடவே டாக்டரும் வராங்க. பார்ப்போம்.
Thursday, January 24, 2008
எனக்குப்பிடித்த என்னோட பதிவு...
போன வருடத்தில் நான் எழுதிய பதிவுகள் மொத்தம் 27.
அதில் எனக்கு பிடித்த பதிவு அழகுகள் ஆறு தொடருக்காக அய்யனார் அழைத்து எழுதியதுதான் எனக்கு பிடித்த பதிவு அய்யனாருக்காக ஆறு அழகுகள்
ஏன் அந்த பதிவு பிடிக்கும் என்ற காரணத்தை யோசித்து யோசித்து நேரம் போனது தான் மிச்சம். அதில் கூறி இருந்த எல்லாவற்றையும் படிக்கும் போது மனதில் ஒரு சந்தோஷம் ஏற்படுகிறது. ஆனால் அந்த சந்தோஷத்திற்கான காரணம் சொல்ல முடியவில்லை. அப்படி சொல்ல முடியாத காரணம் தான் அந்த பதிவை பிடிக்க காரணம் என்று நினைக்கிறேன்.
அந்த பதிவில் என் அம்மா எனக்கு கொடுத்த முத்தத்தைப்பற்றி சொல்லியிருப்பேன். இப்போது நினைத்தாலும் எனக்கே ஆச்சரியமாக இருக்கு. எப்படி முடிந்தது அவளாள்? மீண்டும் அப்படி ஒரு அழுத்தமான அன்பான முத்தம் கிடைக்குமா என எண்ணும் போது கேள்விக்குறிதான் பதிலாக கிடைக்கிறது. எனக்கும் என் அம்மாவுக்கும் நடந்த நிகழ்ச்சிகளை சொல்லிக்கிட்டே போகலாம்.(எல்லோருக்கும் அப்படி தான் இருக்கும்) அம்மாவைப்பற்றி அதிகம் யோசித்தால் அழுகைதான் வருது. என்னை எந்த மாற்றமும் இல்லாமல் ரசிக்கும் ரசிகை அவள் மட்டும் தான்...அப்போதும்... இப்போதும்...எப்போதும்...!
அந்த பதிவ அடிச்சு முடிச்சதுமே என்னோட பிலிப்பைனி நண்பன் கேட்டான். என்ன செய்யறேன்னு.. நான் இந்த பதிவுல எழுதியிருந்த அம்மா விஷயத்த பத்தி அவன்கிட்ட சொன்னதுமே அவன் கண்ணு கலங்கிடுச்சு.." you are very lucky man". இதுக்கு போயி ஏன்டா அழறேன்னு நான் கேட்டதுக்கு "I am also miss my mother"ந்னு சொன்னான். இப்போ அவுங்க அம்மா இத்தாலியில் இவன் இங்கே. எப்போ பார்த்துப்பாங்கன்னு அவுங்களுக்கே தெரியாத ஒரு வாழ்க்கை.
என் பதிவுகளை என்னை மீண்டும் படிக்க வைத்த வல்லிம்மாவுக்கும், முத்துலெட்சுமி அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வந்து பார்த்து மார்க் போடுங்கள்.
அடுத்த நான் அழைக்கும் மூவர் - கவிஞர்கள்
அழகுகள் ஆறுக்கு அழைத்த அய்யனார்
கவிதாயினி காயத்ரி
கவிஞர் வேதா
எப்படியோ இந்த மாதம் 3 பதிவுகள் போட்டாச்சு :)
Monday, January 14, 2008
மொக்கை போட்டோம்ல
"ஏன்! எப்பவும் நீ சொல்லறதைத்தான் செய்யணுமா..! "
"அதுக்குத்தானேகூட இருக்கே...!"
"நான் சொன்னது என்ன ஆச்சு..? "
"எல்லாம் நீ சொன்னதைத்தான் செய்துக்கிட்டு இருக்கேன். "
"அதை செய்யுறதுக்கு இவ்வளவு நாளா?"
"நீ ஒழுங்கா சொல்லியிருக்கணும். "
"போன முறையும் இப்படித்தான் சொன்னே! இந்த முறை தெள்ளத்தெளிவாக சொன்னேன். அப்படி இருந்தும் ஏன் இப்படி பண்ற..?"
"என் மேலயே குத்தம் சொல்லு... ஏன் இப்படி எல்லாம் ஆச்சுன்னு யோசிக்காதே..! "
"ஆமா.. ஒவ்வொண்ணுக்கும் ஆயிரம் காரணம் இருக்கும். எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு இருக்க முடியாது என்னால... எனக்கு தேவை ரிசல்ட்.. "
"ஆமா... அந்த விஷயம் என்ன ஆச்சு...? "
"எந்த விஷயம்....? "
'அதாண்டா அந்த விஷயம்...! நேத்துக்கூட சொல்லிக்கிட்டு இருந்தியே.. "
"நேத்து நான் பல்லு விளக்குறதுக்கு முன்னாடிலேந்து படுத்து தூங்கற வரைக்கும் நிறைய விஷயத்தை பேசினோம்... அதுல எந்த அந்த விஷயம்..? "
"டேய் எனக்கு கொலைவெறி உண்டாக்காதே..."
"டேய் உனக்கு இனிமேதான் கொலைவெறி வரும்.. இப்போ எனக்கு இருக்குற வெறிக்கு கொலையே பண்ணிடுவேன். தெளிவா சொல்லுடா. "
"எப்பாரு தெளிவு.. தெளிவு ஏன்டா கொஞ்சம் சூசகமாக சொன்னா புரியாதா!"
"யாரு நீ! சூசகமா........! கிழிஞ்சது. அன்னிக்கு சொன்னியே சூசகமா ஒரு விஷயத்தை எல்லார் முன்னாடியும்..!! அதுல இருந்தே தெரியல உன் சூசக திறமையை பத்தி..!!! "
"என்னிக்கு? எப்போ..!? "
"அதாண்டா அன்னிக்கு.... எல்லார் முன்னாடியும். "
"டேய் என்கிட்டயே போட்டு வாங்குறியா....அந்த விஷயம் என்ன ஆச்சுன்னு சொல்லுடா.. இல்லைன்னா மண்டையே வெடிச்சிடும். "
"முதல்ல நீ தெளிவா எந்த அந்த விஷயமுன்னு சொல்லு. அப்புறம் நான் அந்த விஷயம் என்ன ஆச்சுன்னு சொல்றேன். "
"டேய் என்னால முடியலடா! எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரி நடிக்கிறது. இதுதான் உனக்கு கடைசி சான்ஸ். ஒழுங்கு மரியாதையா சொல்லி தொலைடா. "
"நான் வேணுமுன்னா உன் காலுல விழுந்து கேட்டுக்கிறேன். எந்த அந்த விஷயமுன்னு தெளிவாக சொல்லி தொலைடா வெண்ணெய். "
"ஆண்டவா இன்னிக்கு யாரு முகத்துல முழிச்சேன்னு தெரியலியே.... ஒரு மண்ணு விஷயமும் இல்ல.... ஆள விடுடா சாமி... நீ சொன்னதை வேற செய்யணும். "
"நீ எங்க இருந்து ஒழுங்கா செய்யப்போற...எல்லாம் என் HEAD LETTER "
"தோடா..! இவரோட HEAD LETTERலாமுல்ல.... எல்லாம் என்னோட HEAD LETடேற் மாமு. உன்னோட மல்லுக்கட்ட வேண்டியிருக்கு... "
ஏன்டாப்பா சொல்லமாட்டே.... இதுவும் சொல்லுவ.. இன்னமும் சொல்லுவ..
"ஆமா சொன்னா மட்டும் உட்காந்து கேட்டுட்டுதான் சார் மறுவேலை பார்ப்பாரு.. "
"ஏன் நீ சொன்னதை எல்லாம் நான் கேக்கலியா.... அப்படி நான் கேட்காம வேற யாருடா கேட்டுட்டாங்க? "
"ஏன் எங்களுக்கு எல்லாம் வேற ஆளுங்க இல்லையா? "
"காமெடி கீமெடி பண்ணலியே.....! "
"உனக்கு வயித்தெரிச்சல்டா..! யாருக்கு எனக்கு.....!? டேய் வெளியில சொல்லிடாதே சிரிப்பாங்க.!"
"நாலு பேரு சிரிச்சா நல்லது தானே...! "
"ஆமா இவரு அப்படி நாலு பேருக்கு நல்லது செய்யறதுக்குகாக தான் பிறவி எடுத்திருக்காரு."
"உன்கிட்ட பேசிக்கிட்டு இருந்தா என் வேலையை மறந்துடுவேன். ஆளை விடுடா சாமி டேய்!"
"சீக்கிரம் முடிப்பியா மாட்டியா? "
"எல்லாம் முடிஞ்சிடுச்சிடா.. "
"சீக்கிரம் கொடுடா.. அதை வேற பதிவுல ஏத்தி தமிழ்மணத்துல இணைக்கனும்."
"இந்தா! வந்துடுச்சான்னு பாரு மெயில்..? "
வலையுலக தலைவி கீதா, பாசக்கார அக்கா கண்மணி மற்றும் வலையுலக அறிவுஜிவி கப்பி பய அவர்களின் அழைப்பு ஏற்று மொக்கை பதிவு போட்டாச்சி. என்ன தலைவி மொக்கையை மொக்கையாக போட்டுயிருக்கேனா!? அப்புறம் இன்னும் மூணு பேரை கூப்பிட வேண்டுமாம்
1. என்னை போலவே மாதம் ஒரு பதிவு எழுதும் சின்ன அம்மிணி அக்கா
2. ஜி3 புகழ் ஜி3 காயத்ரி
3. நட்பு கவிஞர் பிரேம் குமார்
யப்பா...எப்படியும் நம்மளை மாசம் முழுக்க பதிவு போட வச்சிடுவாங்க போல இருக்கே.... எஸ்கேப்பு..;)